என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் கிரைம்"
பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் சைபர் குற்றங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். சில வீடியோ கேம்களை நீங்கள் எதிர் திசையில் யாருடனும் விளையாடலாம். நீங்கள் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்.
நீங்கள் விளையாடும்போது, சில சமயங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... அப்படி என் மகளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"நீங்கள் ஆணா பெண்ணா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு என் மகள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், உங்களுடைய நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? என்று இருந்தது. இதனால் பயந்துபோன என் மகள், எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சென்று நடந்தவை குறித்து கூறினார்.
இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் குற்றத்தின் ஒரு பகுதி... நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், சைபர் வகுப்பு (Cyber Period) என்று ஒரு வகுப்பு இருக்க வேண்டும். அங்கு குழந்தைகளுக்கு இது குறித்து விளக்க வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் குற்றம் தெருக் குற்றங்களை விடப் பெரிதாகி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
- உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகிவருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் இதில் மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை, தன்மையையும் அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் இணைய வழி அறிவிப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக முகவரி கேட் Code-ஐ பெற்றுள்ளனர்.
- அதன்பின் போனை ஹேக் செய்து, வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி பணம் பறித்துள்ளனர்.
கன்னட நடிகர் உபேந்திர ராவ் மற்றும் அவரது மனைவியின் போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடியின் முயற்சியாக மர்ப நபர்கள் போனை ஹேக் செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை எனது மனைவி போனுக்கு, ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக தெரியாத நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. போனை எடுத்த பின்னர்தான், சைபர் மோசடி எனத் தெரிவந்துள்ளது. உடனே போன் ஹேக் செய்யப்பட்டது. அதேபோல் என்னுடைய போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய போனில் இருந்து, பணம் தொடர்பாக போன் செய்தால், பதில் அளித்து பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய போனில் இருந்து சென்ற மெசேஜ் காரணமாக, 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் கவனமாக இருக்கும்படி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக உபேந்திர ராவ் கூறுகையில் "காலையில் யாரோ ஓருவர் எனக்கு போன் செய்து, டெலிவரி நபருக்கு அட்ரஸ் கிடைக்கவில்லை. இதனால் தங்களுக்கு வந்த Code-ஐ அனுப்புங்கள், அந்த நபர் (டெலிவரி நபர்) உடனடியாக உங்களை அழைப்பார் என பேசினார்.
எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால், அவசரமாக அவ்வாறு செய்தேன். அவர்கள் என்னுடைய போனை ஹேக் செய்தனர். அதன்பின் என்னுடைய வாட்ஸ்அப்வில் உள்ளவர்களக்கு அவசரம் எனக் கூறி பணம் அனுப்புமாறு மெசேஜ் அனுப்பினார்கள். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்புவதாக கூறி 55 ஆயிரம் கேட்டு தகவல் அனுப்பினர்.
இது தொடர்பான நாங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சைபர்கிரைன் துறையின் உயர்அதிகாரியிடம் பேசினோம். அவர்கள் மெசேஜ்-யை ஓபன் செய்ய வேண்டாம். பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறினர்" என்றார்.
- பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. மேலும், பங்குச்சந்தையில் அதிக லாபம், பரிசு விழுந்துள்ளது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வாய்ஸ் மெசேஜில், இணையதள குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்... என்று கூறும். அவசர தேவைக்காக ஒருவரை போனில் அழைக்கும்போது முதலில் வாய்ஸ் மெசேஜ் வரும். அதன்பின் தான் கால் ரிங் போகும். ஒரு நாளைக்கு பல தடவைக்கு மேல் இந்த வாய்ஸ் மெசேஜ் வந்ததால் மக்கள் இணையதளத்தில் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து தினமும் இரு முறை மட்டுமே சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாய்ஸ் மெசேஜ் முழுமையாக நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
- லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:-
வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும்.
- டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
திருப்பதி:
சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் செயலிகளுக்குப் பிறகு டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமான மோசடிகளாக மாறி வருகிறது.
நீங்கள் தனியாக இருக்கிறீர்களா சலிப்பாக இருக்கிறதா நானும் தனியாக இருக்கிறேன். நாம் கொஞ்ச நேரம் பேசலாமா, ப்ளீஸ், என குண்டூரைச் சேர்ந்த வாலிபருக்கு ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினார்.
யோசிக்காமல் வாலிபர் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். இரவும் பகலும் எந்த வித்தியாசமும் இல்லை அவளுடன் அரட்டை அடிப்பதே வேலையாக நீடித்தது.
அவ்வப்போது வீடியோ அழைப்புகள் சின்னச் சின்னப் பேச்சுகளில் இருந்து தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வரை பரிச்சயமானார்கள்.
ஒருநாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று இளம்பெண் கேட்டார்.
வாலிபர் சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும் சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் இளம்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் 10 லட்ச ரூபாயை தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு இளம்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்கான அரட்டை, போதை தரும் பேச்சு மயக்கும் அழைப்பு, அவை உலகத்தையே மறக்கச் செய்கின்றன. கடைசியில் அதில் மூழ்கடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.
சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும். சிலர் இளம்பெண்களை செயலிகளில் பதிவு செய்ய வைத்து வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் முதலில் அரட்டையடிக்கத் தொடங்குவார்கள். படிப்படியாக அறிமுகம் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்னேறுகிறது. சிலர் நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதைப் பதிவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாளுக்கு நாள் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.
- வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், திராவிட நட்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் ஸ்ரீவித்யா என்ற தோழர் ஸ்ரீவித்யா, தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த யூடியூப் சேனலின் முக்கிய நோக்கமே ஆளும் திமுக கட்சித் தலைவர்களை ஆதரிப்பது தான். அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களையும், பிராமணர்களையும், பாரதிய ஜனதா தலைவர்களையும் அவதூறாக பேசுவதை ஸ்ரீவித்யா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நாளுக்கு நாள் இது போன்ற அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார். அதை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் அரசியல் தலைவர்களின் மரியாதையை கௌரவத்தை சீர்குலைக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதால் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது. அதனால் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஸ்ரீவித்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது அடிப்படை நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவித்யா மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
- செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
சமீபகாலமாக நாடு முழுவதும் போன் மூலம் நூதன மோசடி, டிஜிட்டல் கைது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி, குரல் வழியாக பேசி மோசடி என புதுப்புது வகைகளில் மோசடிகள் நடைபெறுகிறது.

மேலும் செல்போனுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதன் மூலமும் பலரிடம் மோசடிகள் நடக்கிறது. இந்த சிக்கல்களுக்கு முடிவு கட்ட இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன்படி அழைப்பாளரின் பெயர் விளக்க காட்சி என்று அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
இதுவரை ட்ரூகாலர் போன்ற செயலிகள் அழைப்பாளர்களின் பெயரை காண்பிக்கும் வசதியை அளித்து வருகின்றனர். ஆனால் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
புதிய திட்டத்தின்படி அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடடோ போன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த உள்ளனர்.
இந்த அழைப்பாளர் பெயரை வெளிப்படுத்தும் அம்சத்திற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் சில விற்பனை யாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இந்த விற்பனையாளர்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கு மென்பொருள் தேவையான சர்வர்களை வழங்கு வார்கள்.
இந்த சேவை மராட்டியம் மற்றும் ஹரியானாவில் தொடங்க உள்ளது. விரைவில் மற்ற மாநிலங்க ளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.
- கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
- தன் மனைவி அந்த இணைப்பை துண்டித்து நம்பரை பிளாக் செய்ததாக பாஜக தலைவர் பேட்டி
சித்ரதுர்கா:
கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ. திப்பாரெட்டி (வயது 75). இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் கடந்த மாதம் 31ம் தேதி வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிப்போன திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோவை அனுப்பி உள்ளார்.
இதையடுத்து திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
பின்னர் இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனக்கு முதல் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அந்த பெண் தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். அவர் இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றார்.
- திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
திருச்சி:
திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டு பகுதியில், பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்களால் மக்கள் நலனுக்காக சமீப காலமாக அதிகரித்து வரும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், அது தொடர்பாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஊர் தலைவர் எஸ்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஊர் துணை தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர், பட்டையார், மணியார், வார்டு உறுப்பினர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சங்கர் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து பிஷப் கல்லூரி மாணவர்களான ஜாஸ்மின் சிந்தியா, ஜோஸ்வா சாமுவேல், ஜெயவர்ஷினி, சுதர்ஷனன் ஆகியோர் நிகழ்ச்சியினை நடத்தினர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவர் சுதர்ஷனன் தொகுத்து வழங்கினார்.
முடிவில் ஜாஸ்மின் சிந்தியா நன்றி கூறினார். இணையதள குற்றங்கள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆசிரிய ஆலோசகரான சாம்சன் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
- ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் தனது வலைதள பக்கத்தில் முதல்-அமைச்சர் பற்றியும், காவல்துறை பற்றியும் அவதூறான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் முடிந்தால் தன்னை பிடியுங்கள் என்று போலீசுக்கு சவாலும் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சென்னை சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் விசாரணை நடத்தி 48 நாட்களில் விசாரணையை விரைந்து முடித்தனர்.
இதையடுத்து கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
- உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார்.
பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார்.
இந்த நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
அதில் என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.
இருந்தாலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது.
இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார்.
பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் (பொ) வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






