என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை பின்னிரவு 3.15 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : பூராடம் காலை 7.19 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருவீதியுலா, திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி வரும் காட்சி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-பரிசு

    கடகம்-தேர்ச்சி

    சிம்மம்-பெருமை

    கன்னி-லாபம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- சுகம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-தாமதம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தன விரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

    கடகம்

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

    சிம்மம்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வருமானம் திருப்தி தரும்.

    துலாம்

    பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    விருச்சிகம்

    பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். சுப விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.

    மகரம்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக செலவிடுவீர்கள்.

    கும்பம்

    யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஆதரவு உண்டு.

    மீனம்

    சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும்.

    • ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா.
    • சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு.

    நம் மனித வாழ்வு விசுவாசம் என்னும் அடித்தளத்தில் தான் கட்டப்பட்டு வருகிறது. விசுவாசம் நிறைந்த வாழ்வில் அன்பும், நற்பண்புகளும், நல்ல புரிதல்களும் நிறைந்திருக்கிறது.

    ஆனால், பல நேரங்களில் நம் வாழ்வில் அவிசுவாசம் மேலோங்கி காணப்படுகிறது. கற்றவர், கல்லாதவர், ஏழை, பணக்காரன் என்று எவ்வித வேறுபாடுமின்றி அனைவரிடமும் இந்த அவிசுவாசம் காணப்படுகிறது. திருமறையில் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தோமா ஆவார்.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா. பிலிப்புவின் மூலமாக ஆண்டவர் இயேசுவுக்கு அறிமுகமானவர். தோமா என்கிற அரமேய சொல்லின் பொருள் `இரட்டையர்' என்பதாகும். திதிம் என்ற மறுபெயரும் இவருக்கு உண்டு. இவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வந்தார்.

    இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாகிய லாசர், பெத்தானியாவில் வியாதியாயிருக்கிறதைக் கேள்விப்பட்ட பின்பும் தாம் தங்கியிருந்த இடத்திலே இரண்டு நாள் தங்கினார். பின்னர் அவர் தம் சீடர்களிடத்தில், 'நாம் மறுபடியும் யூதேயாவுக்கு போவோம் வாருங்கள்' என்றார். அதற்கு சீடர்கள், 'ரபீ இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்கு போகலாமா' என்றார்கள்.

    அப்பொழுது திதிம் எனப்பட்ட தோமா மற்ற சீடர்களை நோக்கி, 'அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்' என்றார் (யோவான் 11:16).

    தோமா ஆண்டவருக்காக மரிக்கவும் துணிவதை இங்கே காணலாம். ஆண்டவர் நித்திய வாழ்வை குறித்து பேசுகின்ற பொழுது, 'நான் போகிற இடத்தை அடைந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்' என்றவுடன், தோமா அவரை நோக்கி 'ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்' என்றார் (யோவான் 14:5).

    இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் ஆண்டவரோடு இணைந்து வாழ வேண்டுமென்ற மாபெரும் விருப்பத்தைக் காண முடிகின்றது.

    ஆண்டவர் இயேசுவின் மீது பக்தி வைராக்கியம் கொண்டிருந்த தோமா, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு சந்தேகத் தோமாவாக மறு உருவெடுக்கிறார். ஆண்டவர் இயேசு, தான் உயிர்த்தெழுந்த பிற்பாடு சீடர்களுக்கு தரி சனமானார். ஆண்டவர் அவர்களுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லியதோடு, தம் கைகளையும், தன் விலாவையும் அவர்களுக்கு காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19).

    ஆனால் ஆண்டவர் தரிசனமான இரண்டு முறையும் தோமா அவர்களுடன் இருக்கவில்லை. சீடர்கள் 'கர்த்தரைக் கண்டோம்' என்று நம்பிக்கையுடன் தோமாவிடம் கூறினார்கள். ஆனால், தோமாவோ 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்தில் என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே இட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' என்றார் (யோவான் 20:25).

    மூன்றாம் முறையாக தரிசனமானபோது தோமா அவர் களோடு இருந்தார். இயேசு தோமாவை நோக்கி, 'நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு' என்றார் (யோவான் 20:27).

    தோமா, 'என் ஆண்டவரே, என் தேவனே' என்று அறிக்கை செய்கின்றதை காணலாம். அப்பொழுது ஆண்டவர் 'தோமாவே, நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்' என்றார் (யோவான் 20:29).

    நம்பிக்கையின்மை தோமாவின் நிலைப்பாடு மட்டுமல்ல; பல சீடர்களும் அன்று அப்படித்தான் இருந்தனர். நம்பிக்கையின்மை விஷயத்தில் ஒட்டுமொத்த சீடர்களின் பிரதிநிதியாகவே தோமா இங்கு தென்படுகிறார்.

    'மரியாள் சொன்ன உயிர்ப்பின் செய்தியை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:11).

    'ஆண்டவர் மறுரூபமாய் தரிசனமானதை கண்டவர்கள் சொல்லியதை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:13).

    'உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்தும், இருதய கடினத்தைக் குறித்தும் அவர் கடிந்து கொண்டார்' (மாற்கு 16:14).

    'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1).

    தோமாவின் பக்தி வைராக்கியம், மிகுந்த வாஞ்சை, அதீத பாசம் அனைத்தையும் கெடுத்து, 'சந்தேகத் தோமா' என்ற அவப்பெயரை அவருக்கு கொடுத்து விட்டது. காரணம், யூதர்கள் மீது இருந்த பயம், அன்றைக்கு நிலவிய சூழல், எதிராளிகளின் வலிமை, அவர்களுக்கிருந்த செல்வாக்கு போன்றவை ஆகும்.

    கடவுளை முழுமையாக விசுவாசிப்போம். சந்தேகத்தை வேரறுப்போம். சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு. நம் வாழ்வின் சூழல்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள், வியாதியின் வேதனைகள் நம்மை சந்தேகத்திற்கு வழிநடத்தக் கூடும்.

    ஆனால், நாம் முழுமையாக விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். காணாமலே விசுவாசிக்கின்ற பாக்கியவான்களாக இருப்போம். விசுவாசத்தினால் நற்சாட்சி பெறுவோம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும் (எபிரேயர் 11:6).

    • பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது.
    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா, தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் பிரபு என்கிற பிரித்திவிராஜ், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுத்து வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

    அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.

    விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    • தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும்.

    குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. பவுர்ணமி வழிபாடு குடும்பத்தில் உள்ள தீய சக்திகளை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும் பவுர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    பவுர்ணமி நாளில் குல தெய்வத்தை வழிபடுவதால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.

    ஒவ்வொறு பவுர்ணமிக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலமிட்டு, குல தெய்வத்தின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, நெய் தீப விளக்கேற்றி குடும்ப சகிதமாக குல தெய்வத்தை மனதார வழிபடலாம். தீபமேற்றியவுடன் குல தெய்வத்தின் பெயரை 108 முறை பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். பின்னர் நைவேத்தியமாக வெண்பொங்கல் (அ) சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். படைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். எளிய முறையில் இப்படி குல தெய்வ வழிபாடு செய்தாலே போதும் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.

    ஒவ்வொறு பவுர்ணமியிலும் மாலை நேரத்தில் சந்திர பகவான் தோன்றும் நேரத்தில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீடு மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.



    உங்கள் முன்னோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தால், அதனால் பல இன்னல்களை பிள்ளைகள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும். ஏதேனும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றால், விடுபட்ட பவுர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் தொடர்ச்சியாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

    சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும் அதனால் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் பல இன்னைல்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பவுர்ணமி தினத்தில் தீபமேற்றி, அந்த தீபத்தை குல தெய்வமாக வழிபட, குல தெய்வ அருள் கிடைக்கும். நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி அவர்களின் வாழ்வும் வளம் பெரும் என்பது நம்பிக்கை.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-26 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : மூலம் காலை 6.09 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுர்ணமி, குரு பகவானுக்கு அபிஷேகம், ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சனம்

    இன்று பவுர்ணமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ரதோற்சவம். திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் முப்பழ பூஜை, திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-நிறைவு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-ஓய்வு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- போட்டி

    மகரம்-வரவு

    கும்பம்-நற்சொல்

    மீனம்-வெற்றி

    • பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.
    • விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.

    அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் 'ருண விமோசன கணபதி' தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடைபெறுவது. அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள்.

    கடன் என்றால் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மட்டும் கிடையாது. நம் முன்னோர்களுக்கு நாம் செய்யத் தவறிய கடமைகளும் கடன் தான். அத்தகைய பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.

    ருண விமோசன கணபதி எல்லா ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இவரை வழிபடுவதற்காக இவர் இருக்கும் ஆலயத்தை தேடிச் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டில் உள்ள விநாயகரையே வழிபடலாம் அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.

    கடன்சுமை தீர்க்கும் அருகம்புல் வழிபாடு:



    விநாயகர் வழிபாடு செய்வதற்கு முதல் நாள் இரவு 16 அருகம்புல் எடுத்து அதுவும் நுனி உடையாமல் எடுத்து தயிரில் போட வேண்டும். அருகம்புல் கிடைக்காத சூழ்நிலையில் குறைந்தது 3 ஆவது இருக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து முடித்து பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும். பிறகு ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் போது, "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" என பாராயணம் செய்ய வேண்டும். நீங்கள் ஆலயத்திற்கு செல்ல விரும்பினால் விநாயகரை 3 முறை சுற்றி வலம் வந்து பின்னர் செல்லலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் செய்துவர உங்களை கடன் சுமையிலிருந்து ருண விமோசன கணபதி காத்தருள்வார் என்பது ஐதீகம்.

    • பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார்.
    • மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.

    காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த விழாவானது, இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார். அப்போது மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்களது சேலை முந்தானையை விரித்து தாங்கிப் பிடிப்பர். அந்த மாங்கனியை சாப்பிடுவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது.
    • பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.

    காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்தவர், தனதத்தன். இவரது மகள் புனிதவதி. இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயதை எட்டியதும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.

    ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்த 2 மாங்கனிகளை பரமத்தத்தரிடம் கொடுத்தார். அந்த கனிகளை, வேலையாள் மூலமாக தனது வீட்டிற்கு கொடுத்தனுப்பினார் பரமதத்தர்.

    இந்தநிலையில் புனிதவதியின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு அடியார் வேடத்தில் புனிதவதியின் வீட்டின் முன்பு வந்து நின்றார். வீட்டின் முன்பு யாசகம் கேட்டு நின்ற அடியாரை வரவேற்ற புனிதவதி, வீட்டின் திண்ணையில் அவரை அமரவைத்து, தயிர் கலந்த அன்னம் படைத்தார். அதோடு கணவர் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாருக்கு சாப்பிடத் தந்தார். இதையடுத்து உணவருந்திய மகிழ்ச்சியில் சிவனடியார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    சிவனடியார் சென்ற சிறிது நேரத்தில் வழக்கம் போல, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார் பரமதத்தர். அவருக்கு பல வகை உணவுகளை சமைத்து பரிமாறினார் புனிதவதி. அதோடு மீதம் இருந்த மாங்கனி ஒன்றையும் இலையில் வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பியதில் மீதம் இருக்கும் மற்றொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தர் கூறினார்.

    கணவர் அப்படிக் கேட்டதும் பதறிப்போனர், புனிதவதி. 'கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று கூறினால் கணவர் கோபித்துக் கொள்வாரோ' என்று கருதிய புனிதவதி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். பின்னர் நேரடியாக பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அப்போது புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதை எடுத்துச் சென்று கணவருக்குக் கொடுத்து உபசரித்தார்.

    ஆனால் முந்தைய கனியை விட, இந்த மாங்கனி இன்னும் அதிக சுவையுடன் இருந்ததால் பரமதத்தர் சந்தேகம் கொண்டார். 'ஒரே மரத்தில் விளைந்த இரு மாங்கனிகளின் சுவை மாறுபடுமா?' என்று நினைத்தவர், தன் மனைவியிடம் உண்மையை கூறும்படி கேட்டார். புனிதவதி, நடந்த விஷயங்களை கணவரிடம் கூறினார். ஆனால் அதை நம்ப பரமதத்தர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. "சிவபெருமான் உனக்கு கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை இங்கேயே வரவழைத்து காட்டு" என்று மனைவியை நிர்ப்பந்தித்தார். புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி அவரது கையில் வந்து, சிறிது நேரத்தில் மறைந்தது.

    இறைவனின் இந்த திருவிளையாடலை கண்டு வியந்துபோன பரமதத்தர், "நீ.. மனிதப் பிறவி அல்ல. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்வது சரியல்ல" என்று கூறி, புனிதவதியைப் பிரிந்து, பாண்டியநாடு சென்று அங்கு வணிகம் செய்தார். சில காலத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரமதத்தர், தன்னுடைய முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினார்.

    இதற்கிடையே கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு புறப்பட்ட புனிதவதி, பரமதத்தனின் இல்லத்தைச் சென்றடைந்தார். தன்னைத் தேடி வந்த புனிதவதியின் காலில் விழுந்து வணங்கிய பரமதத்தர், அதேபோல் தனது மனைவி, மகளையும் விழச்செய்தார்.

    கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத புனிதவதி, தனது அழகுமேனியை அழித்து பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே ஆசி வழங்கினார். பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.

    கயிலாயம் புனிதமான இடம் என்பதால், காலை ஊன்றி நடக்காமல், தலையால் நடந்து சென்றார். இதைப் பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக.. அமர்க.." என்று அழைத்தார். மேலும் "உனக்கான வரத்தைக் கேள்" என்றார்.

    அதற்கு புனிதவதி அம்மை, "இறைவா.. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பிருந்தால் உனையென்றும் மறவாமை வேண்டும், எப்போதும் நீ ஆடும்போது உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டினார். சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்ததாலும், புனிதவதி பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும், அவர் 'காரைக்கால் அம்மையார்' என்று பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையாரை திருவாலங்காடு திருத்தலத்திற்கு வரச்செய்து, அங்கு தன்னுடைய திருவடியின் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார், சிவபெருமான்.

    • சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த

    சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்

    கால்புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    -திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    வேதங்கள் உணர்ந்த அந்தணர்கள் எழுப்பும் வேள்வி தீயின் புகை வெளிப்படும் மாடங்களுடன் கூடிய வீதிகளை உடையது திருமருகல் திருத்தலம். இங்கு மான் தோலும், பூணூலும் மார்பில் அணிந்து வீற்றிருக்கும் இறைவனே, மீன்கள் நிறைந்த நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருவடி கழல்கள் ஒலிக்க ஆடும் திருநடனத்தை, கணபதி ஈச்சரத்தில் செய்ததற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-25 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தசி பின்னிரவு 2.35 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம் : மூலம் (நாள் முழுவதும்)

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காணாடுகாத்தான் தெப்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைத் தாழி சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-நலம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- ஜெயம்

    மகரம்-சிந்தனை

    கும்பம்-களிப்பு

    மீனம்-ஓய்வு

    • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இந்த வார விசேஷங்கள்

    8-ந் தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ரத உற்சவம்.

    * திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (புதன்)

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வெண்ணெய்த்தாழி சேவை. கானாடுகாத்தான் சிவபெருமான் தெப்ப உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந் தேதி (வியாழன்)

    * பவுர்ணமி.

    * காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ பூஜை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந் தேதி (வெள்ளி)

    * திருத்தங்கல் அப்பன் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.

    * மதுராந்தகம் கோதண்ட ராமர் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (சனி)

    * சிரவண விரதம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    ×