என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
செவி குளிரும் செய்திகள் வந்துசேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சீராக நடைபெறும்.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
கடகம்
கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.
சிம்மம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலகிச் சென்றவர்கள் வந்திணைவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவர்.
கன்னி
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
தனுசு
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோக பிரச்சனை அகலும்.
மகரம்
சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல் நலம் சீராகும்.
மீனம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத பயணங்களால் விரயம் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
- வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனா்.
சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-12 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி மாலை 5.41 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : சித்திரை காலை 9.28 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று சுப முகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் மாணிக்கம் விற்றருளிய காட்சி. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-இன்பம்
கடகம்-முயற்சி
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-பரிசு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-அனுகூலம்
தனுசு- பெருமை
மகரம்-தேர்ச்சி
கும்பம்-பணிவு
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
ரிஷபம்
தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு.
கடகம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பகை நட்பாக மாறும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழிலுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கன்னி
யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.
துலாம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாளாக தாமதித்து வந்த பதவி உயர்வு கிடைக்கலாம்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரப் போட்டிகளை சமாளிக்க நேரிடும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
தனுசு
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு பணிக்காக செய்த முயற்சி கைகூடும்.
மகரம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகும். பயணத்தால் விரயம் உண்டு.
கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.
மீனம்
நட்பு பகையாகும் நாள். நாணய பாதிப்பு ஏற்படலாம். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட கூடுதல் விரயம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
- விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
- காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.
கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
- வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
ஔவையார் அருளிய வினை தீர்க்கும் விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!
- ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
- ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.
புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.
இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.
ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.
ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.
இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
- ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும், அவர்களை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரில் உள்ள சாலையோரம், ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரத்தடி போன்ற எல்லா இடங்களிலும் எளிமையாக அருள்புரிபவர் விநாயகப் பெருமான். சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும், விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சொல்வதை போல விநாயகப் பெருமானை வழிபடுவதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விநாயகர் என்றால் 'மேலான தலைவர்' என்றும், விக்னேஸ்வரர் என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், பிள்ளையார் என்றால் 'குழந்தை மனம் படைத்தவர்' என்றும், ஐங்கரன் என்றால் 'ஐந்து கரங்களை உடையவர்' என்றும், கணபதி என்றால் 'கணங்களுக்கு அதிபதி' என்றும் பொருள்படும். விநாயகப் பெருமான் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.
ஒரு சமயம் சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது அவர், தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்பு தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். இவ்வாறு உருவம் பெற்றவரே விநாயகர். விநாயகரிடம், யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கட்டளையிட்டு நீராட சென்றார், பார்வதி தேவி.
அச்சமயம் கைலாயத்திற்கு திரும்பிய சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார். வந்திருப்பது தன் தந்தை என்பதை அறியாத விநாயகர், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் கோபம் கொண்ட சிவபெருமான், தனது சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார்.
அப்பொழுது பார்வதி தேவி நீராடி முடித்துவிட்டு வெளியே வந்தார். தன் மகனான விநாயகர், தலை இல்லாமல் கிடப்பதை கண்டு கடும் கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய விநாயகரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த பார்வதி தேவி, காளியாக உருவம் எடுத்து கண்ணில் படுவதையெல்லாம் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி கொண்டு வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் அத்தலையை வெட்டுண்டு கிடந்த விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவி மனம் மகிழ்ந்து விநாயகரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்பு சிவன், விநாயகருக்கு 'கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜையறையை மொழுகி கோலம் இட்டு அதன் நடுவில் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசியில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு 'ஓம்' என்று எழுதி, மண் பிள்ளையார் அல்லது பிள்ளையார் படத்தை வைக்க வேண்டும்.
விநாயகரை அருகம்புல், எருக்கம்புல், விபூதி, சந்தனம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, அப்பம், அவல், பொரி, சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை படைத்து சாம்பிராணி காட்டி சூடம் ஏற்ற வேண்டும். அப்போது விநாயகருக்கான அகவல், மந்திரம், கவசம் பாடி வழிபட வேண்டும். `சதுர்த்தி விரதத்தை முறையாக கடைப்பிடிக்க உள்ளேன். அதனால் விரதம் முடியும் வரை எந்த தடைகளும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். விநாயகர் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்பத்தில் துன்பம் விலகி, இன்பம் பொங்கும்.
- மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக் கூடியது’ என்று பொருள்.
- விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி.
ஓம்கார வடிவமாகவும், ஞானத்தின் வடிவமாகவும் திகழ்பவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாட்டில் அவருக்கு படைக்கப்படும் உணவுகள் தனித்த இடத்தை பிடிக்கின்றன. உண்மையான பக்தியுடன் எதை படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வார். இருப்பினும் அவருக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கின்றன.
பிள்ளையாருக்கு பல விதமான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டாலும், அதில் முதன்மை இடத்தை பிடிப்பது மோதகம் தான். வீட்டில் பூஜிக்கப்படும் விநாயகர் கையில் மோதகம் இருக்க வேண்டும் என்பார்கள். மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகருக்கு மோதகம் நைவேத்தியமாக படைப்பதற்கு முக்கியமான காரணம் உண்டு.
மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.
ஒரு சமயம் அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிடக் கொடுத்தார். மொத்தமாக 21 மோதகங்களை விநாயகருக்கு அளித்தார். அதை சாப்பிட்டதும் விநாயகப் பெருமானின் பசி முழுவதுமாக நீங்கி, மகிழ்ச்சி அடைந்தார்.
இதைக் கண்ட பார்வதி தேவி, அனுசுயாவை போல் எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என வரம் அளித்தார். பார்வதி தேவி அளித்த வரத்தின் படி, பக்தர்கள் தாங்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி என்று கூறப்படுகிறது. கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வருபவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை அறிந்த அருந்ததி, அவருக்காக புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார்.
விநாயகப் பெருமான், அண்டத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவர். இதனால் அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் 'செப்பு' எனும் மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மோதகத்தை தயார் செய்தார். பின்பு வசிஷ்டரிடம் அதைக் கொடுத்து விநாயகருக்கு படைத்தார்.
அப்படி அவர் அளித்த பிரசாதத்தின் தத்துவச் சிறப்பை உணர்ந்த பிள்ளையார், அதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, விநாயகர் சதுர்த்தியான இன்று நம் வாழ்வும் இனிப்பும் தித்திப்புமாகப் பூரணத்துவம் பெற பிள்ளையாரை வழிபட்டு வரம் பெறுவோம்.
- வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.
சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.
- அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும். தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






