என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
    • தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

    3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணுகோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டைவிரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச் செடிகளின் வே ரில் ஊற்றிவிட வேண்டும்.

    8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன் என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

    10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...தருப்யத...த்ருப்யத என்று முடியும்.

    • ஆத்மாக்கள் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
    • அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்திக்கிறேன்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...

    "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த பூவுலகத்தில் இருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டு பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.

    மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

    • காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.
    • சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் அன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது. முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது`1ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலானவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.

    அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.

    புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

    முடியாதவர்கள் மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.

    அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார். எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    • மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வ தில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும்

    பித்ரு தோஷம் வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்.

    • மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
    • பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    சென்னை:

    தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

    திருமலையில் நடப்பது போல இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். அடுத்தநாள் ஹம்சவாசனத்திலும், 17-ந் தேதி முத்து பந்தலிலும் 15-ந் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வருகிறார். வரும் 19ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் மாலை 6.30 மணிக்கு கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது.

    வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தெரிவித்தார். இக்கோவிலில் 3 நாட்களாக நடந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் முடிந்தது.

    • இறப்பு என்பது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது.
    • ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

    இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை. ஆழமான கருத்துக்கள் கொண்டவை.

    ஒருவர், `ஆத்மா எப்போது சாந்தி அடையும்?' என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.

    எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதேபோல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும். அம்மாதிரியே இறக்கும் போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். - அதற்கு பிரேத சரீரம் என்றுபெயர்.

    இந்த பிரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி உள்ளபடி, அந்த பிரேத சரீரத்தில் இருந்து ஜீவனானவன் விடுபட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச்சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.

    அதன்பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டுதோறும், திதியன்றும் சில கர்மாக்களை செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

    ஜீவனுக்கு `தன்னுடைய ஆத்மாவும், ஈஸ்வரனுடைய ஆத்மாவும் ஒன்று' என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.

    • முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும்.
    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை மூலம் சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க! தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்ப்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்கு தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றிக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து எள்ளை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவருக்கு பிடித்தமான பண்டத்துடன், தேங்காய், வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும்.

    தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும். கால்படும் இடங்களில் எள் தண்ணீரை ஊற்றக்கூடாது.

    தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்கு சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்கு புல் எடுத்துப்போட்டு அதை தர்ப்பணமாக ஏற்கும்படி பித்ருக்களை வணங்கி கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன், திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
    • அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

    • இவ்வூர் `தீர்த்தனகிரி’ என்று வழங்கப்படுகின்றது.
    • `சிவ ரகசியம்’ என்னும் நூலில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

    கோவில் தோற்றம்

    உலகில் எங்கும் காணாத அதிசய கோவில் ஒன்று உண்டெனில், அது கடலூர் அருகே உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயமே எனலாம். ஆம்... கடந்த மூன்று யுகங்களில்.... நான்கு கோபுரங்கள், மூன்று பெரும் பிரகாரங்களைக்கொண்டு, சுமார் ஐந்து குரோச (12¼ மைல்) சுற்றளவு கொண்ட மிக பிரமாண்டமான கோவிலாக இருந்துள்ளது.

    இத்திருத்தலம் கிருதயுகம் மற்றும் திரேதாயுகத்தில் `ஓம்காரபுரம்' என்றும், துவாபரயுகத்தில் `தேசப்பிரதம்' என்றும், கலியுகத்தின் தொடக்கத்தில் `ஞானப்பிரதம்' என்றும் அழைக்கப்பட்டு, தற்போது `திருத்தினை நகர்' என்று போற்றப்படுகின்றது. வழக்கில் இவ்வூர் `தீர்த்தனகிரி' என்று வழங்கப்படுகின்றது.

    `சிவ ரகசியம்' என்னும் நூலில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் மகிமையை பற்றி அகத்தியருக்கு முருகப்பெருமான் உபதேசித்துள்ளார். இத்தல ஈசனை வணங்கியே முராசுரன் என்ற அசுரனை திருமால் வதம் செய்தார். அதன் மூலம் திருமாலுக்கு `முராரி' என்ற பெயர் வந்தது. துர்வாச முனிவரால் சாபம் பெற்ற பிருங்கி மகரிஷி, இத்தலம் வந்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கருடன் இப்பெருமானை பூஜித்து, பலம் பெற்று, தன் தாயின் அடிமை தளையை தகர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

    ராவணனை வெல்வதற்கு ராமருக்கு உதவியாக இருந்ததுடன், ராமரின் பட்டாபிஷேகத்தையும் கண்டுகளித்த ஜாம்பவான், இத்திருத்தலத்தில் உள்ள ஈசனை வெகு காலம் பூஜித்து, பூரண ஆயுளும், ஞானமும் பெற்றிருக்கிறார். கந்தன், உமாதேவி, நந்திதேவர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கம், இத்தல மூலவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதஞ்சலி - வியாக்ரபாதரின் கோரிக்கைக்கு இணங்கிய இத்தலப் பெருமான், திருநடனக் காட்சியை இங்கு காட்டிய பின்னரே தில்லையில் காட்டியதாகவும் தல வரலாறு சொல்கிறது. அகத்தியருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இந்த திருத்தலத்திலும் ஈசன் காட்டியருளி இருக்கிறார்.

    பெரியான் என்னும் ஏழை விவசாயியின் பேரன்புக்கு பணிந்த சிவபெருமான், அந்த விவசாயி படைத்த தினையமுதை உண்டு, அவருக்கு மோட்சம் அளித்துள்ளார்.

    ஒரு சமயம் வங்கதேசத்து அரசனான வீரசேனன், இத்தலத்திற்கு வந்தபோது தோல் நோய் பிடித்திருந்த நாய் ஒன்று, இத்தல தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கி நல்ல நிலையுடன் திரும்பியதைக் கண்டான். இதனால் ஆச்சரியம் அடைந்த அந்த மன்னன், தன்னுடைய காவலாளிகளை கொண்டு குளத்தை தூர் வாரினான். அப்போது கிடைக்கப்பெற்ற நடராஜரை, இந்த தலத்திலேயே நிறுவினான். அப்போது வீரசேனனுக்கு ஒரு அசரீரி ஒலித்தது. `நான் இங்கு சுயம்புவாக எழுந்தருளி பல காலம் ஆகிவிட்டது.

    எனவே எனக்கு இங்கே ஒரு ஆலயம் எழுப்பு' என்றது அந்தக் குரல். அதன்படியே சிவபெருமானுக்கு ஆலயத்தை எழுப்பினான், மன்னன் வீரசேனன்.

    நடுநாட்டின் தேவார திருத்தலங்களில் 22-வது தலமாக இத்தலம் திகழ்கிறது. அதோடு, திருஞானசம்பந்தர், அப்பர், சேக்கிழார், பட்டினத்தார் ஆகியோரும் இத்தல இறைவனைப் பற்றி பாடியுள்ளனர். இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் படரும் அதிசயம் நிகழ்கிறது.

    ஆலய ராஜகோபுரத்திற்கு வெளியே, அன்னை கருந்தடங்கண்ணி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த அன்னைக்கு நீலாயதாட்சி, பிரணவபுரீஸ்வரி, ஒப்பிலாநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. விசாலமான ராஜகோபுரம். அதை கடந்து உள்ளே சென்றால், கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி உள்ளது. அதனுள் 4 யுகங்களாக அருள்புரிந்து வருகிறார், சிவக்கொழுந்தீஸ்வரர். இவர் சிவாங்குரேஸ்வரர், நந்தீஸ்வரர், பிரணவபுரீஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

    உற்சவமூர்த்தியான நடராஜர் திருவடியின் கீழ் பிரம்மா பஞ்சமுக வாத்தியமும், திருமால் பஞ்சசானிய சங்கும் முழங்குகின்றனர். இந்த அபூர்வ கோலத்தை இங்கு மட்டுமே காண முடியும். யோகாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அதிசயமான தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசனம் செய்யலாம். தல வரலாற்று புடைப்புச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

    துர்க்கை அஷ்டபுஜங்களுடன் நின்ற கோலத்தில் பேரருள் புரிகிறார். ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட ஜாம்பவான் தீர்த்தம், ஆலயத்திற்கு இடப்புறம் அமைந்துள்ளது. அதோடு அம்பிகை உண்டாக்கிய கவுரி தீர்த்தம், கருடன் ஏற்படுத்திய பெருமாள் ஏரி, தேவதீர்த்தம் என்னும் கடல் போன்றவையும் இத்தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.

    தினமும் ஒரு பூ பூக்கும் - காய் காய்க்கும் சரக்கொன்றை மரம், இவ்வாலயத்தின் தல விருட்சமாக திகழ்கிறது. கல்வெட்டில் இவ்வூர் `விருதராச பயங்கர வளநாட்டு மேற்கானாட்டு ஜெயங்கொண்ட சதுர்வேதிமங்கலத்து திருத்தினை நகர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடைசியாக 1949 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தில், வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழாவும், அனுஷத்தில் ஜாம்பவான் தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், மாசி மகத்தில் தேவதீர்த்தம் என்னும் கடலில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது.

    இவ்வாலய இறைவனுக்கு தினையமுது படைத்து வழிபடுபவர்களின், தீராத வினைகளையும், நோய்களையும் இத்தல ஈசன் தீர்த்தருள்கிறார்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், ஆலப்பாக்கம்- புதுச்சத்திரம் இடையே உள்ளது மேட்டுப்பாளையம். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, தீர்த்தனகிரி. கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    • மகிஷாசுரனை வதம் செய்ய புறப்பட்ட ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
    • சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

    முதல் நாள்:- மது-கைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய குமரி வடிவ அலங்காரம்.

    இரண்டாவது நாள்:-  மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    மூன்றாம் நாள்:- மகிஷாசுர வதம் முடித்து, சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கல்யாணி வடிவம்.

    நான்காம் நாள்:- சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களில் இருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று அவர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெய துர்க்கை அலங்காரம்.

    ஐந்தாம் நாள்:- சுகாசனத்தில் வீற்றிருந்து, கம்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் துர்க்கை அலங்காரம்.

    ஆறாம் நாள்:- சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

    ஏழாம் நாள்:- சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்த பின், பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவி கோலம்.

    எட்டாம் நாள்:-  ரக்தபீஜன் வதைக்குப் பிறகு, கருணை நிறைந்தவளாய், அஷ்ட சித்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் கோலம்.

    ஒன்பதாம் நாள்:-  அரக்கர்களை அழித்து முடித்து, கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாக, சிவசக்தி வடிவமாகக் காட்சி தரும் காமேஸ்வரி கோலம்.

    • கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
    • 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால் நினைக்கும் பலன்கள் கிடைக்கும்.

    * சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், வேலையில் மேன்மை அடைய வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

    * தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, மஞ்சள், குங்குமம், தாம்பூலம், புத்தாடை போன்ற பலவிதமான மங்கலப்பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். நவராத்திரி பூஜை நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால், கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.

    * நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.

    * புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.

    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

    வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×