என் மலர்tooltip icon

    வழிபாடு

    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

    வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 26 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 10.40 மணி வரை. பிறகு அமாவாசை.

    நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 3.47 மணி வரை. பிறகு அஸ்தம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஸ்த்ரஹத் மகாளயம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பருக்கும், அன்னை காந்திமதி யம்மைக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் அபிஷேகம். திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-சிந்தனை

    சிம்மம்-வரவு

    கன்னி-உறுதி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்- புகழ்

    தனுசு- செலவு

    மகரம்- சுபம்

    கும்பம்-லாபம்

    மீனம்- நற்செயல்

    • சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
    • சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

    • சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர்.

    சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரி்துக் காட்டுக்குச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன் பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள் ஆகி, வால்மீகி முனிவரோடு, தென்னாடு வந்த போது, கோயம்பேடு வந்தனர்.

    இது கோசலபுரி, கோனசநகர், கோயம்பீடு எனப்பட்டது. கோ-பசு, அயம், இரும்பு, பீடு வலிமை, பசுக்களை இரும்பு கவசம்போல் வலிமையுடன் காக்கும் இடம் இது என்பதால் இப்பெயர் அமைந்தது. இங்கு இருந்த ஆதரவற்ற பசுக்களை லவ, குசர்கள், வால்மீகி உத்தரவுப்படி காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது.

    இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர். ஒரு சமயம் நந்தியின் கர்வமும், இங்கு தான் அடக்கப்பட்டது. இவரது அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க வேண்டும். லவ, குசர்கள் தம் தந்தை, ராமருடன் போரிட்டதால் பித்ரு சாபம் பெற்றனர். இதனால் அவர்கள் இருவரும் இங்கு வந்து தங்கி 12 வருட காலம் பிரதோஷ பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

    இவர்கள் ஆரம்பித்தது தான் முதல் பிரதோஷ பூஜை. இங்கு ஒரு பிரதோஷம் பார்த்தால் 1000 பிரதோஷம் பார்த்த பலன் உண்டு. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். இங்குள்ளது போல வடக்கு பார்த்த சிவனையும், மூக்கணாங்கயிறு போட்ட நந்தியையும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

    இங்குள்ள அம்பாள் தர்மசம் வர்த்தினி தனது இடது பாதத்தை முன் வைத்து அனைவரையும் வரவேற்பது போல் காட்சி தருகிறாள். சிவன் கோவிலின் முன்புள்ள 16 கால மண்டபத்தில் ஒரு தூணில் சரபேஸ்வரர் உள்ளார். இவருக்கு ராகு காலத்தில் பூஜை உண்டு.

    இவர் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரை அடக்கினார். சிவனின் 64-வடிவங்களில் ஒன்று இது. இவரை வணங்கினால் ஆபத்தில் இருந்து காப்பார். ஞாயிறு அன்று ஆயிரக்கணக்கானவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். இவரை வழிபட்டால் பல குறைகள் நீங்கும்.

    • உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைக்கின்றனர்.
    • நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நடத்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பெச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள். அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பெச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா.

    அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது. காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • தக்கோலம் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 25 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 8.42 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: பூரம் நண்பகல் 1.31 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். நாளை மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி, லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப் பிராட்டியார் சமேத சப்தரிஷிசுவரருக்கு மாலை சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-அசதி

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-ஊக்கம்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-நற்செயல்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-அறிவு

    தனுசு- சிறப்பு

    மகரம்-நலம்

    கும்பம்-சாதனை

    மீனம்-தனம்

    • நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பழந்தண்டலம், நாகாத்தம்மன் கோவிலில் உள்ள நல்லாங்கண்ணி திருக்குளம் பகுதியில் நாளை (12-ந்தேதி) பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை நடை பெறுகிறது.

    துவாபர யுகத்தில் தர்மம் நேர்மை தவறாது வாழ்ந்த ஜரத்காரு முனிவரை நினைத்து குருபூஜை செய்து நெய் மற்றும் நல்லெண்ணை கலந்த தீபமிட்டு அவரது துதி கூறி பிரார்த்தனை செய்தால் பித்ருதோஷம், பல ஆண்டுகளாக திதி விட்ட தோஷங்கள் முழுவதும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆல விருட்சத்தில் மகரிஷி வர்ணனை, கலச பூஜை ஆவாகனம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு 108 மூலிகைகளால் மகரிஷி யாகம், மலர் அர்ச்சனை, ஜரத்காரு மகரிஷி திருக்கதை பாராயணம், மற்றும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் பழந்தண்டலத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐராவதீஸ்வரர் சிவன்கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகள்.
    • கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    *நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவிகளின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    * ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம் பெறச்செய்யவேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வம்.
    • 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், முண்டன்சாமி. செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா என்ற மன்னன். தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி, ரிஷிகளும், முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்த நிலையில், ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தைப் பெற்றான்.

    இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும். அந்த குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மாறாக அந்த குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.

    இதற்கிடையே கர்ப்பவதியான வல்லராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால், அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன், தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான்.

    அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள். அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன். அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை, நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும்` என்றாள். மன்னனும் கேட்டதைத் தருவ தாக வாக்களித்தான்.

    அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன். அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார். ஒரு நாள் முடிந்ததும், மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல், அவரை கொல்ல முயன்றான்.

    ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன், மன்னனையும் அவன் மனைவியையும், வம்சாவளியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள். இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பித் தொழுதனர்.

    இதையடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள். பின்னர், 'நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால், நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன், அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன்' என்று உறுதியளித்தாள் என்கிறது தல வரலாறு.

    21 பந்தி தெய்வங்கள்

    21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறார். சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை. ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுகிறார். ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால். பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்.

    உருண்ட கண்களும், நீண்ட நாக்கும். விரித்த சடையும். தலையில் அக்னி கிரீடமும் கொண்டு பேச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், இவரது கையில் திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டை ஓடு, சாட்டை இருக்கும்.

    21 பந்தியில் உள்ள மற்ற தெய்வங்கள் இந்த பேச்சி அம்மனின் உத்தரவை ஏற்று நடப்பார்கள். சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்குச் செல்வார். பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன். பல கோவில்களில் வனப்பேச்சி அம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும் தான் இருக்கிறார்கள்.

    குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறார். எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனமுருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.

    • கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
    • அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை.

    திருவள்ளூரில் இருந்சேல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் (பூண்டி) கிராமத்தில் அமைந்துள்ளது, மின்னொளி அம்மாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் ஊன்றீஸ்வரர், வெண்பாக்கநாதர், ஆதாரதண்டேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும். கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்கள் பெற்ற 276 சிவாலயங்களில், இது 250-வது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதேநேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17-வது தேவாரத் தலம் இது.

    இந்த ஆலயத்துதின் தீர்த்தம் கயிலாய தீர்த்தம் கொசஸ்தலை ஆறு, தல விருட்சம் இலந்தை மரமாகும். கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் ஊன்று கோல் கொடுத்து உதவியதால். இங்குள்ள இறைவனுக்கு 'ஊன்றீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

    கோவிலின் வெளிப்புற தோற்றம்

    கோவிலின் வெளிப்புற தோற்றம்

    இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் திருவுளம்புதூர் என்ற ஊரில் இருந்தது. 1942-ம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவுளம்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.


    திருவுளம்புதூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக. புதிய கோவில் கட்டுவதற்காக திருவெண்பாக்கத்தில் (பூண்டி) மாற்று நிலத்தை அரசு வழங்கியது.

    திருவுளம்புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர், தூண்கள். சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய கோவிலுக்கு 1968-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தின் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

    தலவரலாறு

    சைவ குரவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருவாரூரில் பரவை நாச்சி யாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டா வது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்.

    சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சி யாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது 'இனிமேல் முதல் மனைவியான பரவை நாச்சியாரை பார்க்கச்செல்லக்கூடாது' என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன்' என்று கூறினார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம், நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது எனக் கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார்.

    உடனே சுந்தரர், அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியில் நின்று, 'உன்னை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

    அதனால் சிவபெருமானுக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார் சுந்தரர், திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும்படி செய்து விட்டார்.

    சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தர வில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.

    இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவபெருமான் இரங்கினாலும், அவருக்கு கண்களை தருவதற்குப் பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார்.

    தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தாருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்று கோலைத் தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தி மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. 

    கொம்பு உடைக்கப்பட்ட நந்தி சிலை

    கொம்பு உடைக்கப்பட்ட நந்தி சிலை

    இதைக்கண்டு சிவபெருமான் ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மனோ, 'தவறு செய்வது மனித இயல்பு எனக்கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தடுமாறிய போது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டி செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன், அம்பாளைத் தடுத்து விட்டாராம்.

    இதனை உணர்த்தும் விதமாக இவ்வாலயத்தில் அருளும் அம்மனின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின்னர் அம்பாள் சுந்தரரிடம், 'மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்ப நிகழ்கிறது.

    தற்போது உன்னுடைய கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினையே. எனவே கலங்காது செல். தகுந்த காலத்தில் ஈசனின் அருளால் உன் பார்வை திரும்பும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்களால் சுந்தரரை சாந்தப்படுத்தினார். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி காட்டினாராம்.

    இதனால் இத்தல அம்மன் 'மின்னொளி அம்பாள்' என்றும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கனிவாக பேசி அருளியதால் `கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பின்னர் இத்தலத்தில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கிய சுந்தரர், காஞ்சிபுரம் சென்றார். அங்கு ஏகாம்பரநா ரை பாடிப்பரவி இடது கண்ணும், திருவாரூருக்கு சென்று தியாகேசனைப் பாடி வலது கண்ணும் பெற்று, பின்னர் பல தலங்களை வழிபட்டு வெள்ளை யானையில் கயிலாய மலையை சென்றடைந்தார் என்பது வரலாறு.

    இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தல மூலவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஆலயத்தில் வழித்துணை விநாயகர், கணபதி, பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகவேலவர், வள்ளி, தெய்வானை, லிங்கோத்பவர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற திருமேனிகளும் உள்ளன.

    இவ்வாலய இறைவனுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இத்தல சுவாமிக்கும், அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் படிப்படியாக பார்வை குறைபாடு நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
    • மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும் இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் சதுரகிரிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி வருகிற 14-ந்தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 15-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.

    மகாளய அமாவாசைக்கு இம்முறை சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், வனத் துறையினரும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். மேலும் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதலாக சதுரகிரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • இமயமலை அடிவாரப் பகுதியில் 'ஹரி பர்வதம்' என்ற மலை உள்ளது.
    • கண்டகி நதியில் தான் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.

    நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரப் பகுதியில் 'ஹரி பர்வதம்' என்ற மலை உள்ளது. இங்கே சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் பாயும், கண்டகி நதியில் தான் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.

    கங்கை, யமுனை நதிகளுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் தனக்கு இல்லையே என கண்டகி நதித்தாய் வருத்தம் கொண்டாள். தன்னுடைய எண்ணத்தை பெருமாளுக்கு தெரியப்படுத்த தவத்தில் ஆழ்ந்தாள். பெருமாள் அவள் முன் தோன்றியதும், தனக்கும் பெருமாளுடன் சம்பந்தம் வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தாள். பெருமாளும், சாளக்கிராமக்கல்லாக இந்நதிக்கரையில் உற்பத்தியாகிறார்.

    மகாவிஷ்ணு `வஜ்ரகிரீடம்' என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமக் கல்லைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்தார். பலவிதமான சுருள்ரேகைகளையும், சக்கரங்களையும் வரைந்து, விஷ்ணு, நாராயண, நரசிம்ம, வாமன, கிருஷ்ண அம்ச கற்களாக உருமாறினார்.

    நேபாளத்திலுள்ள ஹரிபர்வத மலையில் சக்கரதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த பகுதியில் இருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. தற்போது இந்த இடத்திற்கே `சாளக்கிராமம்' என்ற பெயர் வந்துவிட்டது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படும் சாளக்கிராமக்கற்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன.

    இந்த கல் வைணவ வழிபாட்டில் உள்ளவர்களுக்கு தெய்வீகம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த சாளக்கிராமக் கல் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன.

    மகாவிஷ்ணுவே, தங்க மயமான ஒளி பொருந்திய 'வஜ்ரகிரீடம்' என்னும் புழுவாக வடிவம் எடுத்து சாளக்கிராம கற்களைக் குடைந்து. அதன் மையத்திற்குள் சென்று, ஓம்கார சப்தம் எழுப்பியபடி, தன் முகத்தினால் பல்வேறு அடையாளங்களை ஏற்படுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உருவாகும் சாளக்கிராம கற்களில், நாராயணனின் ஜீவ வடிவம் ஐக்கியமாகி இருப்பதால், அந்த சாளக்கிராம கல்லையும், மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பக்தர்கள் போற்றுகின்றனர்.

    ×