என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
    • கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருப்பதி:

    திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆடிய 'கோயா நடனம்' பக்தர்களை கவர்ந்தது. இதுதவிர லட்சுமி கூடம், மேள வின்யாசம், கோபிகா நாட்டியம், மயூர நிருத்தியம், ரிப்பன் நடனம் ஆகியவை பிரம்மாண்டத்தை மேம்படுத்தியது. மேலும் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடன கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கேரள செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் 3 ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அனுமந்த வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை பக்தர்களை கவர்ந்தன. அதில் பத்ம நிருத்யம், தீப நிருத்யம், புராணக் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனங்களுக்கான நடனம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

    மேலும் ராமச்சந்திரா புஷ்கரணி, ஆஸ்தான மண்டபம், மகதி, அன்னமாச்சாரியார் கலையரங்கம் ஆகிய இடங்களில் நடந்த பக்தி கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 5-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்லக்கு வாகன வீதிஉலா (மோகினி அலங்காரம்), மாலை வசந்தோற்சவம், இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை தீபத் திருவிழா கொடியேற்றம்.
    • துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும்.

    அதன்படி இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    நவம்பர் 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்கரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடியும், நாழிகிணறு தீர்த்தத்தில் நீராடியும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பலர் 6 நாட்களும் பால், எழுமிச்சைச்சாறு பருகி கந்த சஷ்டி கவசம் பாடியும் , பஜனை பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    2-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 18-ந்தேதி கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
    • 19-ந்தேதி சகல முருகன்கோவில்களில் தெய்வானை திருக்கல்யாணம்.

    14-ந்தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமி கோவில் வருசாபிஷேகம்.

    * மாயவரம் கவுரிமாயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் பவனி.

    * சோலைமலை முருகப்பெருமான், காமதேனு வாகனத்தில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (புதன்)

    * மதுரை சோலைமலை முருகன் கோவிலில் யானை வாகனத்தில் வீதி உலா.

    * சிக்கல் சிங்காரவேலவர் காலை மோகனாவதாரம், இரவு தங்க மயில் மீது பவனி.

    * திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * மாயவரம் கவுரிநாதர் கடைமுகம் தீர்த்தம்.

    * திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் ரத உற்சவம்.

    * சிக்கல் சிங்காரவேலவர், வேணுகோபாலர் திருக்கோலம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (வெள்ளி)

    * சதுர்த்தி விரதம்.

    * விஷ்ணுபதி புண்ணிய காலம்.

    * திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.

    * சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம். இரவு உமாதேவியிடம் சக்திவேல் வாங்குதல்.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (சனி)

    * கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.

    * திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.

    * சிக்கல் சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம்.

    * மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சகல முருகன் கோவில்களிலும் தெய்வானை திருக்கல்யாணம்.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (திங்கள்)

    * சிக்கல் சிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் வீதி உலா.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சேஷ வாகனத்திலும், இரவு கற்பக விருட்ச வாகனத்திலும் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதர் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 3.20 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: அனுஷம் நாளை விடியற்காலை 4.48 வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிக்கல் சிங்கார வேலர் நாகாபரணக்காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. பூசலார் நாயனார் குருபூஜை. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதர் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-அசதி

    கடகம்-விருத்தி

    சிம்மம்-லாபம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-கண்ணியம்

    தனுசு- உறுதி

    மகரம்-சாகசம்

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-ஆக்கம்

    • எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.
    • கந்தன் வரும் அழகே அழகு.

    கந்த சஷ்டி கவசத்தில் ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரனை மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிெரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டு ள்ளது. பில்லி, சூனியம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும், செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொ ண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றை தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும். நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    • சூரசம்ஹார விழாவினைக் காண கண்கோடி வேண்டும்.
    • ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும், 2-வது படைவீடு

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதபூமி திருச்செந்தூர். இது நெல்லையில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நக்கீரர் வாக்குப்படி இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும். இத்தலத்தில் ஓயாமல் கடல் அலைகள் சுழன்று அடிப்பதால் அலைவாய், திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் முருகன் சூரனை அழித்து வெற்றி பெற்ற காரணத்தால் ஜெயந்திபுரம் என்றும், செந்திலாண்டவன் கொலுவிருந்து ஆட்சி செய்வதால் செந்திலம்பதி என்றும் இத்தலம் பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் சூரசம்ஹார விழாவினைக் காண கண்கோடி வேண்டும். மேலும் முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படும் பெருவிழாவாகும்.

    முருகப் பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்து வரும் போது தமது படைகளுடன் இந்த திருச்செந்தூர் தலத்தில் வந்து தங்கினார். இங்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கிய செந்திலாண்டவனை தேவகுருவாகிய வியாழபகவான் வந்து பூஜித்தார்.

    அந்த குருபகவானிடமே அசுரர்களின் வரலாறுகளை முருகன் விரிவாகக் கேட்டறிந்தான். அதனால்தான் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது. முருகன் வீரபாகுவைத் தூதனுப்பி சூரபத்மனுக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவன் அவற்றைக் கேட்கவில்லை.

    இதனால் சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். கடைசியில் பல மாயங்கள் புரிந்து கடலில் பெரிய மாமரமாய் நின்ற சூரனை தம் வேலால் பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை சேவல் கொடியாகவும் கொண்டு பகைவனுக்கும் அருள் புரிந்தான் செந்தில் வேலவன்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார்.
    • வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

    வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

    இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும். பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சஷ்டி விரதம் இருந்தால் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும்.
    • நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு வேலவன் அருளால் திருமண பாக்கியம், மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றி கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப்போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகைய செய்து நறுமணம் கமழ செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்கு தெரிந்த துதிகளை சொல்லுங்கள், அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று சரணங்களை சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.

    • சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.
    • `ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்’ எனப்படுகின்றது.

    முருகன் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதல எழுத்துகள் பன்னிரண்டும் தோள்களாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். முருகன் நமக்கு வீடு அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடுபேறை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் மனிதர்களிடம் உள்ள ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள். இதற்காகத்தான் முருகன் அவதாரம் எடுத்தார். அதற்கான புராண கதை வருமாறு:-

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுர குலப்பெண்ணிற்கும் பிறந்தவன் சூரபத்மன். தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சூரபத்மனின் தவ வலிமையை மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான். அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

    இறைவன் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்தது போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான். இப்படித்தான் முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் `ஆறுமுகசுவாமி' எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மவுத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரவுஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான். பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப் படையும் கிளம்பியது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்று தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்ற னர். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப் பெருமான் முற்றுப் பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.

    விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    • பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
    • பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனியில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து யானைப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியே அசைந்தாடி சென்றதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசமுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ×