என் மலர்
வழிபாடு
- கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை.
- பசுமை சித்தர், வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்றது.
உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெற வேண்டி தீர்த்தமலையை சேர்ந்த பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை செய்யப்பட்டது.
- துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.
- இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு சின்ன கடைத்தெருவில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்னர் அலங்கார ரூபத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தார்.
இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மாடவீதிகளில் பிடாரி அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
- ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை.
- ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளல்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவில் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை.
- சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கியது.
சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரிசுவாமி கூறியதாவது:-
உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்பட்டது. தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வில்வ இலையை சமர்ப்பித்து பரமேஸ்வரரை வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன் அடைந்து, முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரருக்கு கோடி வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் முக்கிய அர்ச்சகர்கள், வேதபண்டிதர்களான அர்த்தகிரி, மாருதிசர்மா, ருத்விக்குகள் அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர்.முதலில் கலச ஸ்தாபன பூஜை செய்து, அதன் பிறகு வேத பண்டிதர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்பாளுக்கு கோடி குங்குமார்ச்சனையும் நடத்தினர்.
கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தினமும் 2 காலங்களில் நடத்தப்படுகிறது. கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்துக்கு சிறப்புப்பூஜை.
- உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, தங்க ஆபரணங்கள்
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக நேற்று இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது. நேற்று நடந்த யானை வாகனத்திலும், இன்று (புதன்கிழமை) இரவு நடக்கவிருக்கும் கருட வாகனத்திலும் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, தங்க ஆபரணங்கள் அணிவிப்பதற்காக ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்ததும், அதை ஒரு பெட்டியில் வைத்து தலையில் சுமந்தபடி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஊர்வலமாகக் கொண்டு வந்தார்.
ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் திருச்சானூருக்கு அனுப்பி வைத்தார்.
திருச்சானூரை அடைந்ததும், அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்தை ஊர்வலமாக பத்மாவதி தாயார் கோவிலுக்குள் எடுத்துச் சென்று, அதை ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி லோகநாதம் ஒப்படைக்க, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார்.
முதலில் மூலவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் அணிவிக்கப்பட்டு, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
அப்போது திருச்சானூர் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் உடனிருந்தார். திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.
- வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் `மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு சாஸ்திர பூர்வமாக மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய நறுமண திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
- ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.
- தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.
அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து தேவர்கள் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுபடுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறியுள்ளார்.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆணவம், வன்மம், மாயை எனும் 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.
உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழி அமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம்கிட்டும் என்பது ஐதீகம்!.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; கந்தசஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பது மறை பொருள்களாகும்.
வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையை உடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.
கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும் இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியா வந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலை களில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறிய வாறு தூய நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து அமைதி யான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெரு மானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.
பட்டினி கிடக்கும் வயிற்றி னுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடல்சம நிலையைப்பேணு வதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக் கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கலாம்.
விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சனை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.
உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.
உயிர், உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேலை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப்பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
கந்தசஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட்பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி ஆறு நாட்களும் கந்தபுராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத்குமர குருபரதாச சுவாமிகள் கந்தபுராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனை பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்தபுராணத்தின் சாரமாகும்.
கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.
உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய் களைக்கூட உண்ணா நோன்பின் மூலம் நீக்கி விட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படு கின்றன. உள்ளுறுப் புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன.
உண்ணா நோன்பு மிகவும் எளியது. ஆனால் சிறப்பான ஊட்டச் செய லாக அமைந்து உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின் போது, உடல் ஓய்வடை கிறது. எல்லா உறுப்புக் களுக்கும், அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி இயல்பு தன்மை ஏற்படுகிறது.
உண்ணா நோன்பின் போது ரத்தமும் நிண நீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. உண்ணா நோன்பின் போது, தூய நினைவுகள் வளர்கின்றன.விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான். கெட்டவை நீங்கி, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.
உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல்தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.
எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் சஷ்டி விரத நாட்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள். அதன் சிறப்புப் பற்றி நாளை காணலாம்.
- திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
- அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது.
இங்கு வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழாக்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.14,000 ஒப்பந்த மற்றும் பிற வகையான ஊழியர்களுக்கு ரூ. 6,850 பிரமோற்சவ சன்மானமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 20 கோடி நிதியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்க நாதர் வெண்ணைத்தாழி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 29 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை பிற்பகல் 2.40 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: கேட்டை நாளை விடியற்காலை 4.31 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 ம1ணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்க நாதர் வெண்ணைத்தாழி சேவை. மதுரை சமீபம் சோலைமலை முருகர் கோவிலில் யானை வாகனத்தில் பவனி. குமாரவயலூர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. மாயவரம் கவுரிமாயூர நாதர் ரதோற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விவேகம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-விருத்தி
கடகம்-உதவி
சிம்மம்-நட்பு
கன்னி-லாபம்
துலாம்- பயணம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- திடம்
மகரம்-உழைப்பு
கும்பம்-நற்செயல்
மீனம்-பண்பு
- மாலை அணிந்து, இருமுடிகட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
- ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்படும்.
கன்னியாகுமரி:
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான வருகிற 17-ந்தேதி கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், குமாரகோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.
அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஐயப்ப பக்தர்கள் வருகிற 17-ந்தேதி அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ௪௧ நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைபிடிப்பது வழக்கமாகும்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
- சூரனை வென்று ஆட்கொண்டதால் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்பட்டார்.
- முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்ததை நேற்று பார்த்தோம். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.
பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே `செந்தில்நாதர்' என மருவியது. தலமும் `திரு ஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, திருச்செந்தூர்' என மருவியது.
கோவில் அமைப்பு
முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் `பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக் கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக் கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளை யில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண் ணர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.
கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீ ராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, `கங்கை பூஜை' என்கின்றனர்.
மும்மூர்த்தி முருகன்
திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.
நான்கு உற்சவர்கள்
பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.
சந்தனமலை
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவி லாக அமைந்தது போல வும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரை யில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது.
எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
குரு பெயர்ச்சி
திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.
இரண்டு முருகன்
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகி றார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்குச் செய்யப்படுகிறது. எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்
மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.
அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடை களை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.
இது தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
சக்கரம் கொடுத்த பெருமாள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.
நோய் தீர்க்கும் இலை விபூதி
திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ளச் சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள். விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.
சஷ்டி யாகம்
திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி விரதத்தின் சிறப்புகளை நாளை காணலாம்.
- பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஐப்பசி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, தாசில்தார் முகமது அலி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில் குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.






