search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கந்த சஷ்டி விரதம் 3-ம் நாள்: சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கந்த சஷ்டி விரதம் 3-ம் நாள்: சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு

    • ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.
    • தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.

    அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து தேவர்கள் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுபடுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆணவம், வன்மம், மாயை எனும் 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.

    உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழி அமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம்கிட்டும் என்பது ஐதீகம்!.

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; கந்தசஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பது மறை பொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையை உடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும் இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியா வந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலை களில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறிய வாறு தூய நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து அமைதி யான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெரு மானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றி னுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடல்சம நிலையைப்பேணு வதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக் கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கலாம்.

    விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சனை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர், உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேலை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப்பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

    கந்தசஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட்பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்தபுராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத்குமர குருபரதாச சுவாமிகள் கந்தபுராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனை பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்தபுராணத்தின் சாரமாகும்.

    கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.

    சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.

    உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய் களைக்கூட உண்ணா நோன்பின் மூலம் நீக்கி விட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படு கின்றன. உள்ளுறுப் புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

    உண்ணா நோன்பு மிகவும் எளியது. ஆனால் சிறப்பான ஊட்டச் செய லாக அமைந்து உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின் போது, உடல் ஓய்வடை கிறது. எல்லா உறுப்புக் களுக்கும், அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி இயல்பு தன்மை ஏற்படுகிறது.

    உண்ணா நோன்பின் போது ரத்தமும் நிண நீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. உண்ணா நோன்பின் போது, தூய நினைவுகள் வளர்கின்றன.விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான். கெட்டவை நீங்கி, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.

    உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல்தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.

    எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் சஷ்டி விரத நாட்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள். அதன் சிறப்புப் பற்றி நாளை காணலாம்.

    Next Story
    ×