என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம்.
    • நடராஜ பெருமானுக்கு மாட்டுக் கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும்.

    அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்வது சிறப்பானது என்றாலும், சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம். சிவபெருமான் அக்னி சொரூபமானவர் என்பதால் பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களை அளித்திடுவார் என்பது நம்பிக்கை. நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் எனப்படுகின்றன.

    சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப்படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    சிவனுக்கு சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தை கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதை போல் நடராஜ பெருமானுக்கு மாட்டுக்கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும். நடராஜருக்கு நடக்கும் அபிஷேகங்களில் இந்த அபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இன்று நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிசேகம்.

     சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட்டர் திரவியங்கள் பயன்படுத்தப்படும். மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.

    சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் `திருச்சிற்றம்பலம்' 'எதிர் அம்பலம்' என்று ஓர் இடம் இருக்கிறது. இதை 'கனக சபை' என்று அழைப்பார்கள். அங்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் கனகசபையில் நடைபெறும், இந்த அபிஷேகத்தை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் நம் துன்பங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மாசி சதுர்த்தசியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

    • ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
    • கோவை கோணியம்மன் கிளி வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 10 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: பூசம் இரவு 6.26 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருவயல் முருகப்பெருமாள் புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள், கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் தேரோட்டம் காரமடை ஸ்ரீஅரங்கநாதர், மதுரை இன்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம், கோவை கோணியம்மன் கிளி வாகனத்தில் பவனி. ஆலங்குடி குருபகவான் தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பலம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-இன்பம்

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-புகழ்

    கன்னி-தனம்

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- ஜெயம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-பயிற்சி

    மீனம்-ஓய்வு

    • மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இநத கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாசிமக திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி காரமடை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அரங்கநாத சுவாமி பக்தர்கள் கொண்ட காரமடை ஸ்ரீ தாசப்பளஞ்சிகா மகாஜன சங்கம் சார்பில் 55 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான சப்பரம் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளி சப்பரத்தில் மரகத பச்சை கற்களில் சங்கு, மாணிக்க கற்களில் சக்கரம், சிகப்பு மற்றும் வெள்ளை பவளத்தில் திருநாமம் என விலையுயர்ந்த வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

    கோவிலுக்கு வழங்கப்படும் தேக்குமரத்தில் வெள்ளியால் வேயப்பட்ட இந்த சப்பரத்தில் அரங்கநாத சுவாமி உருவபடத்தை வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியே உலா கொண்டு வரப்பட்டு கோவிலில் முறைப்படி ஒப்படை க்கப்பட்டது. பின்னர் கோவிலின் உள்ளே இந்த சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் பல வண்ண வாண வேடிக்கை நிகழ்த்தினர்.

    • மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

    அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்றும் காசியில் கருடன் பறப்பதில்லை. பல்லி கத்துவதில்லை.
    • சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு போகிறான் அனுமன்.

    அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினாலும் தோரணங்கள், மகிழ்ச்சி ஆராவாரங்கள், ஆனந்த களிப்புடன் சிரிப்புகள். இருக்காதா பின்னே? ராமனுக்கு முடிசூட்டு விழா. நாடிழந்து காட்டிற்கு சென்றவன். காட்டில் மனைவியை பிரிந்து மனத்துயரில் ஆழ்ந்தவன். வலிமை மிகுந்த ராவணனை வென்று, இதோ இந்த கணம் வெற்றி செய்தியோடு நாடு திரும்பி இருக்கிறான். தவறிப்போன மணி மகுடம், அவனை அலங்கரிக்கப் போகிறது.

    ஆனாலும் அறிவிற்சிறந்த பெரியோர்களுக்கும், முனிவர்களுக்கும் சிறு மனக்குறை. தவறிழைத்தான் ராவணன். அதனால் தண்டனை பெற்றான். ஆனாலும் வாழும் காலத்தே சிவபூஜையை சிறப்புற செய்தான். வேத ஆகமங்களை சரிவர செய்தான். பிராமண குணத்தோடு வாழ்ந்தான். அவனை கொன்றதால் வரும் பாவம், பிரம்மகத்தியாக வந்து ராமனை பீடித்துக் கொள்ளுமே. அதை தவிர்க்க வேண்டுமானால் ஆத்ம லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்வதே சரியாக இருக்கும் என்றே நினைத்தனர். நினைத்ததோடு நில்லாமல் ராமனுக்கு அறிவுறித்தினர்.

     பெரியோர் சொல்லை ராமன் மீறினது உண்டா? உடனே ஏற்றுக் கொண்டான். ஆனால் ஆத்மலிங்கம் இருக்குமிடம் காசி. உடனே போய் எடுத்து வரவேண்டுமானால் அனுமனை விட சிறந்தவர் யார்? ராமன்கட்டளையை ஏற்று அனுமன் காசிக்கு போகிறான்.

    கங்கையில் நீராடி, பின் காசி விஸ்வநாதரை தரிசித்து, பின் அங்கிருந்து ஆத்ம லிங்கத்தை எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்து வருகிறான்.

    அனுமனின் இந்த செயல் ஒருவருக்கு மட்டும் பிடிக்கவில்லை. கடும் கோவத்தை ஏற்படுத்தியது. அவர் காலபைரவர். காசியே என்கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்னிடம் அனுமதி பெறாமல் ஆத்மலிங்கத்தை அனுமன் எடுத்துப் போகிறான் என்றால் அவனுக்கு பாடம் புகட்ட நினைத்தார்.

     அழைத்தார் வாயு தேவனை, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு போகிறான் அனுமன். அதனால் அவன் போகும் பாதையில் கடும் புயலாய் வீசு என்றார். அழைத்தார் சூரியனை, அஞ்சனை மைந்தனுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால் அவன் போகும் பாதையில் உஷ்ணமாக தகி. பின்னர் அழைத்தார் கங்கையை காற்றின் வேகமும், சூரிய வெப்பமும் தாங்காமல் தரையில் இறங்குவான் அனுமான். அங்கே அவன் கரை தாண்ட முடியாமல் வெள்ளப் பிரவாகம் எடுத்து ஓடு என்றார்.

    எல்லாம் நல்லபடியாக நடந்தது. வாயு புத்திரனுக்கு எதிராக வாயு பகவான் பலமான காற்றாய் வீசினான். சூரியன் தன் பங்குக்கு வெப்பக்கோலமாய் தகித்தார். திடீரென்று மாறுப்பட்ட கால சூழலால் கடும் தாகம் எடுத்தது அனுமனுக்கு. அப்போது ஆர்ப்பரித்து செல்லும் கங்கையை பார்த்தார். ஆகா தண்ணீர் இருக்கிறது. குடித்து தாகத்தை தனித்துக் கொள்ளலாம் என்று தரையில் இறங்குகிறார்.

    அங்கே காலபைரவர் காத்திருந்தார் மாடு மேய்க்கும் சிறுவன் வடிவத்தில். எதற்கு? இரு கையால் லிங்கத்தை வைத்துக் கொண்டு எப்படி தண்ணீர் அருந்துவான். அப்போது லிங்கத்தை வைத்துக் கொள்ள வழி தேடுவான் அதற்காக. பைரவர் கணக்கு தப்பவில்லை.

    குழந்தாய்…நான் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு வருகிறேன். அதுவரை இந்த லிங்கத்தை தரையில் வைக்காமல் கைகளில் வைத்துக் கொள்என்றார் அனுமார்.

    தண்ணீர் அருந்த சென்றவருக்கு தாகம் தணிந்தது. ஆனால் சிறுவனாக வந்த பைரவர் லிங்கத்தை கிழேவைத்து விட்டு மறைந்து விட்டார். ஆத்ம லிங்கத்தை கிழே வைத்தால் பின் அதை எடுக்க முடியாது. மலைகளை பெயர்த்து எடுக்கும் ஆற்றல் மிகுந்த அனுமனால் கூட, லிங்கத்தை அசைக்க முடியவில்லை. திடுக்கிட்டான் அனுமன்.

    அப்போது அசரீரி கேட்கிறது. அனுமா… நல்ல முகூர்த்தத்தில் என்னை வைத்து விட்ட காரணத்தால் நான் இங்கேயே இருக்கிறேன். அதனால் நீ விரைந்து சென்று வேறு ஆத்ம லிங்கத்தை எடுத்துவா….

    ராமன் கட்டளையிட்டால் வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல் விரைந்து செய்து முடிக்கிற அனுமனுக்கு, இந்த தடை பெரும் கோவத்தை எற்படுத்தியதாகவும், அதனால் அவ்விடம் வனமாக போகட்டும் என்று சபித்ததாகவும் கூட சொல்கிறார்கள்.

    அடுத்த கணமே முன்னை விட வேகமாக விண்ணில் பறந்து போகிறான். இதோ காசிக்கு வந்து விட்டான். மீண்டும் ஆரம்பமானது பைரவர் திருவிளையாடல்.

    திரும்பிய பக்கமெல்லாம் கங்கை கரையில் லிங்கமாக இருந்தது. இதில் எது ஆத்மலிங்கம் என்று கண்டு பிடிக்க முடியாமல் திணறினான் அனுமன். அப்போது ஒரு லிங்கத்திற்கு மேலே கருடன் பறந்தது. அதுவாக இருக்குமா என்று அனுமன் யோசிக்கும் போது பல்லி கத்தியது. அதை வைத்து ஆத்ம லிங்கம் என்று எடுக்க போகும் போது பைரவர் தோன்றினார். அனுமனை தடுத்தார்.

    இந்த சுழலை கண்ட முனிவர்கள் அங்கே விரைந்தார்கள். பைரவா... அனுமன் அறியாமல் செய்த பிழையை பொருத்தருள வேண்டும்.

    ராமனின் பொருட்டு ஆத்ம லிங்கத்தை கொண்டு போக வந்திருக்கிறான். அதனால் அவனுக்கு வழி விடுங்கள். அப்போது காலபைரவரை தெரிந்து கொண்ட அனுமன் தன்னை மன்னித்து அருளும்படி வேண்டுகிறான். பைரவரும் பொறுத்தார். அனுமன் லிங்கத்தோடு புறப்பட்டான்.

     ஆனால் ஆத்ம லிங்கத்தை காட்டிக் கொடுத்த கருடனுக்கு காசிக்குள் நுழைய தடை விதித்தார். உடனே பல்லி தன் பிழையை பொறுத்து அருளும் படி வேண்டியது. நீ காசியில் வசிக்கலாம். ஆனால் கத்தக்கூடாது என்று கட்டளையிட்டார். அதனால் தான் இன்றும் காசியில் கருடன் பறப்பதில்லை. பல்லி கத்துவதில்லை.

    • பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா.
    • தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று அதிகாலையில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 8 வீதியிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பிறகு பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இந்த பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை வழிபட்டால் விஷ்ணு அம்சமாக இருந்து சண்முகர் வாழ்வில் வள மான வாழ்வு பெற்று செல்வ செழிப்புடன் இந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக வாழ வைப்பார் என்ற ஐதீகத்தால் பக்தர்கள் பச்சை நிறத்தில் ஆன உடையணிந்து தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருவிழாவான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.

    • மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
    • பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் 3-ம் நாள் விழா முதல் 10-ம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் 2-வது நாள் அதிகாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம வேள்வி, காலை 7 மணிக்கு ஸ்ரீமத்பாகவத மாகாத்மிய பாராயணம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, நண்பகல் 12 மணிக்கு சமய மாநாடு, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், 3-வது நாள் மாலை 5.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கதைகளி நடக்கிறது.

    4-ம் நாள் காலை 11 மணிக்கு அகவல் பாராயணம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, 5-ம் நாள் மாலை 6.30-க்கு ஆன்மிக சிறப்புரை, இரவு 10.30 மணிக்கு நாட்டிய நடனம், 6-ம் நாள் காலை 9 மணி முதல் பஜனை போட்டி, இரவு 10.30 மணிக்கு குரு சிவச்சந்திரனின் ஆன்மிக அருளுரை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெறும்.

    7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் சொற்பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர மகா சபைக் கூட்டம், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 10.30 மணிக்கு புராண நாடகம் நடக்கிறது.

    8-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை, 9-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10.30 மணிக்கு வேடம் புனைந்த விசாரணை மன்றமும் நடைபெறுகிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர்.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் தேவஸ்தானத்தில் பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சப்பரங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பாபு அக்ரஹாரம் குளம் வழியாக குமார சுவாமி திப்பா வரை மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சென்றார்.

    பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, தேவஸ்தான அதிகாரிகள், கோவில் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், தேவஸ்தான முதன்மை அர்ச்சகர் கருணாகர் குருக்கள், தட்சிணாமூர்த்தி, தேவஸ்தான பணியாளர்கள், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், சுதர்சன் ரெட்டி காமேஸ்வர ராவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • மாசித் திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடந்தது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

    தொடர்ந்து சுவாமி- அம்பாள்களுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    10-ம் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.
    • வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு.

    ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரளநாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் ராமாயணத்தில் ராமர் குணங்களில் கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப்பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். ராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.

    இருவருமே அரசகுடும்பத்தில் அவதரித்தவர்கள். தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக ராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப்பேறு இன்றி செல்லப் பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார்.

    இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் `குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.

    வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார்.

    பெருமாளான ராமன் வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரிய பெருமாள் என்று அழைப்பார்கள். வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப்பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்றும் அழைப்பார்கள்.

    ×