என் மலர்
வழிபாடு
- அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
- ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
- மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.
இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.
அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.
அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.
இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.
அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார்.
- தியானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தான் சீடன்.
முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே? என்றான் அவருடைய பிரதான சீடன்.
நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு. எனக்கு புரிவதுபோல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு.
வழக்கம் போல இருவரும் ஆற்றில் குளித்துவிட்டு நந்தவனத்துக்கு சென்று மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து தியான அறையில் வைத்தனர். தியானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தான் சீடன். குருவும் தியானத்தைத் தொடங்கினார்.
சீடனின் மனம் தியானத்தில் லயிக்கவில்லை. அவன் கேட்ட கேள்வியிலேயே சுழன்றுகொண்டிருந்தது.
திடீரென்று ஏதோ கூக்குரல்கள். உணர்வுக்கு வந்த போது அவன் கண்ட காட்சி, சற்று முன் உணர்வோடு தியானம் செய்துகொண்டிருந்த அவனுடைய குரு மல்லாந்து படுத்திருந்தார். ஆமாம் அவர் உடலில் சலனமில்லை. அவர் உடல் சில்லிட்டுப் போயிருந்தது. அவர் முக்தி அடைந்துவிட்டார்.
அவனால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து குருவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் உலகமே குருதான். இப்போது அவரும் போய்விட்டாரே இனி அவன் என்ன செய்யப்போகிறான். அவனுக்கு துயரம் மேலிட்டது, எதிர்காலம் அவனை பயமுறுத்தியது.
யார் யாரோ அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். இனி அவன் தான் அந்த ஆசிரமத்துக்கு தலைமை என்றார்கள். அவன் மனதில் இதெல்லாம் உறைக்கவில்லை. குருவின் உடலை சமாதியில் இட்டு மண்ணை நிரப்பி மேலே மூடினர்.
மறு நாள் சீடன் குளித்துவிட்டு வந்தான். ஆசிரமத்தில் குருவின் புகைப்படம் ஒரு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய படத்துக்கு மாலை சாற்றிவிட்டு. அவரை வணங்கி தன் கடமைகளைத் தொடங்கினான். அசரீரியாய் குருவின் குரல் கேட்டது சீடனே என்ன செய்கிறாய்?
குருவே உங்களை வணங்கி விட்டு என் கடமைகளைத் தொடங்குகிறேன் என்றான் அவன். ஆமாம் நீ ஏன் என்னை வணங்க வேண்டும்?, கடவுளை அல்லவா வணங்க வேண்டும்? என்றார் குரு.

குருவே என்னை பொறுத்தவரை தாய், தந்தை, குரு, கடவுள் எல்லாமே நீங்கள் தானே அதனால் தான் உங்களை வணங்கிவிட்டு கடமைகளை தொடங்குகிறேன் என்றான். அப்படியானால் நீ என்னைக் கடவுளாகவும் மதிக்கிறாயா? என்றார் குரு. ஆம் குருவே என்றான் சீடன். இப்போது புரிந்ததா கடவுள் எப்படி உருவானாரென்று? என்று கேட்டார் குரு. ஆமாம் இப்போது புரிந்துகொண்டேன் என்றான் சீடன் கண்களில் நீர் வழிய.
அவன் காதுகளில் யாரோ பிரார்த்தனை செய்யும் சப்தம் கேட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு, உணர்வுக்கு திரும்பினான். எதிரே அவனுடைய குரு தியானம் செய்துகொண்டிருந்தார். தியானத்தை முடித்துவிட்டு அவனைப் பார்த்து இந்த பிரசாதத்தை எல்லோருக்கும் கொடு என்றார். சீடனும் பிரசாதத்தை எல்லோருக்கும் வினியோகிக்கத் தொடங்கினான் ஒரு புதிய தெளிவுடன்.

"நீங்கள் எல்லா மதங்களுடைய கருத்தும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டார்கள். யார் கடவுளை வணங்கினாலும் தன்னுடைய எண்ணத்தைத்தான், மனதைத்தான் வணங்குகிறானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்த ஒரு கவிதையைப் படித்துக் காண்பித்தேன்.
"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்
நீ கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே"
எனவே யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும் சரி, சிறிது நேரம் பொறுத்து எது நிற்கிறது என்று பார்த்தால் உன்னுடைய மனம்தான் அந்த வடிவம் எடுக்கிறது. விக்ரகத்தையோ, சக்தியையோ, அகண்டகாரமாக இருக்கக் கூடியதையோ வேறு எந்த பொருளையோ கடவுள் என்று வணங்கினாலும் அந்த வடிவம் எடுப்பது நீதான் உன் மனம் தான்" என்கிறார் மகரிஷி.
- அனுமார் மிகச்ச்சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி.
- அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?
அனுமார் மிகச்ச்சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி. ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள். அதேபோலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு. ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார்.
அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும். திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான். அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை. குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்.
குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாசநாதன், அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான். அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை. ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய். அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்.
குஞ்சரன் மிகவும் சந்தோசபட்டான். குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான். அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்.
கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி, கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள். அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய், அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள்.
அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள். பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாயு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி, தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான். ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான்.
கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள். அப்போதே அவள் கர்பவதியானாள். சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும், வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதபடுகிறார்.
எனவே ஆஞ்சநேயர் சைவ, வைஷ்ணவ ஒற்றுமை சின்னம் என்றே கருதத்தக்கவர் ஆவார். அவரை பக்தியோடு வணங்கினால் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்கும் நியாயமான கோரிக்கைகள் எதை வேண்டுமென்றாலும் நிறைவேற்றி வைப்பார்.
- திருமாலை அதிகம் வணங்குவார்.
- பெரியாண்டவர் கோவிலில் இன்று பூக்குழி.
விளாத்திகுளம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சிஅம்மன் பெரியாண்டவர் திருக்கோயிலில் இன்று பூக்குழி விழா. மேல்மாந்தை ஒருங்கிணைந்த ஆட்டுக்கூட்டத்தை குறிக்கும் சொல் ஆகும். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேலாயுதன் என்ற அரசன் திருநெல்வேலி ஜில்லாவை ஆண்டு வந்தான்.
சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, வேம்பார், மேல்மாந்தை, சண்முகாபுரம் ஆகியபகுதிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. வேலாயுதன் சிறந்த வீரனாகவும் காமக் கொடூரனாகவும் இருந்தான். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த பெத்தனாட்சி என்ற சிறுமி, அம்மாவின் கட்டளையால் தனது வறுமையின் காரணமாக அரசனின் ஆட்டுக்கொட்டகையில் வேலை செய்தார்.
சிறுவயதில் இருந்தே பெத்தனாட்சி மிகவும் அழகாக இருப்பாள். முப்பெரும் தெய்வங்களில் திருமாலை அதிகம் வணங்குவார். நெற்றியில் நாமம் பூசுவது அவளது வழக்கமாக இருக்கும். இப்படி ஒரு சமயத்தில் பெத்தனாட்சி பூப்படைந்த போது அதை அறிந்த அரசன் வீரர்களை அழைத்து மற்ற பூப்படைந்த பெண்களை இழுத்து வருவதுபோலப் பெத்தனாட்சி இழுத்து வர ஆணையிட்டான்.
அதற்கு அந்தப்புரம் வருவதற்கு பெத்தனாட்சி மறுத்து தன்மானம்தான் பெரிதென்று நினைத்து தன் உயிர் நீத்தாள். உயிர்நீத்த மறுநாளே அவள் தெய்வமாக மாறிவிட்டாள். அரசனும் பெத்தனாட்சி சாதாரண பெண்ணல்ல தெய்வ அம்சம் உடையவள் என்று நினைத்து, தான் தவறு செய்துவிட்டோமே என்று மனமுடைந்து அவனும் இறந்தான்.
அதன் பின்னர், கிராமத்தில் நோய்களும் பிணிகளும் மக்களை வாட்டி வதைத்தன. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அதற்கு கருப்பசாமி ஊரின் தென் எல்லையில் உள்ள பெத்தனாட்சி மிகுந்த உக்கிரத்துடன் இருக்கிறாள் அவளை சாந்தப்படுத்த கோவில் கட்டி இளவேனிற் காலமான மாசி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா கொண்டாடினால் ஊர் மக்களை காத்தருள்வார் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அதுபோல, கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி ஊரை காத்தருளும் கிராம தேவதைக்கு கோவில் கட்டி அன்று முதல் வருடந்தோறும் மாசிமாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று திருவிழா கொண்டாட ஆரம்பித்தார்கள். பெத்தனாட்சி கிராம தேவதை மட்டுமில்ல மேல்மாந்தைக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
- திருத்தணி முருகப் பெருமாள் கேடயத்தில் புறப்பாடு.
- திருச்செந்தூர் பெருவயல் முருகப்பெருமாள் தலங்களில் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 11 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 4.54 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.39 மணி வரை. பிறகு மகம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று நடராஜர் அபிஷேகம். மதுரை ஸ்ரீகூடலழகர் பல்லக்கில் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருக்கண்ணபுரம், ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் திருமலை ராஜபட்டணம் எழுந்தருளல், திருச்செந்தூர் பெருவயல் முருகப் பெருமாள் தலங்களில் தேரோட்டம். மதுரை இன்மையில் நன்மை தருவார் தேரோட்டம். திருத்தணி முருகப் பெருமாள் கேடயத்தில் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-அன்பு
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-புகழ்
துலாம்- இன்சொல்
விருச்சிகம்-பக்தி
தனுசு- லாபம்
மகரம்-வெற்றி
கும்பம்-பரிவு
மீனம்-பயணம்
- சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
- சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்வை காணவும், பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளவும் நேற்று மாலை திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலை வரை சென்று மறைந்தது. மேற்கொண்டு ஒளி கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று மாலை சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் என எதிர்ப்பார்ப்பில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
- திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
- அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.
உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-
தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.
அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.
என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.
என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
- திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.
இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.
இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.
திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.
பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.
ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.
- நந்தி வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள்.
- பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார்.
சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம்.
இதோ... பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.
காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவாதர் நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவாதார் காதில் சிவபெருமான ஓதினார்.

நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களைக் கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். சிவன் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசரீரியாக ஒலித்தார். பின்வரும் காலத்தில் நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.
தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவில் நுழைவு வாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்றுத் தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா...? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.
- சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
- பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து மேலக்கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சைநிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
- நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாளக்கிராமக் கல் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.
- இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார்.
கோவில் தோற்றம்
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தின் அருகிலேயே சிறப்புமிக்க கோதண்டராமர் கோவில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜா ஆட்சியின் கீழ் (கி.பி.1739-1763) இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாளக்கிராமக் கல் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.
நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் ஒரு கட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த பட்டாடைகளை சீர் வரிசையாக வழங்கினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய சாளக்கிராமக் கல்லையும் வழங்கினார். காலங்கள் உருண்டோடின. மன்னர் பிரதாபசிம்ம மகாராஜாவின் கீழ் தஞ்சை தேசம் ஆட்சிக்கு வந்தது. ஒரு நாள் மன்னர் பிரதாப சிம்ம மகாராஜா சீர்வரிசையாக வந்திருந்த சாளக்கிராமக் கல்லை கண்டார். அதை பார்த்ததும் மெய்சிலிர்த்து போனார்.
காரணம் பொதுவாகவே சாளக்கிராமக் கல், உள்ளங்கை அளவு அல்லது அதைவிட சற்று பெரிதாக இருக்கும். ஆனால் தஞ்சை மன்னருக்கு வழங்கப்பட்ட சாளக்கிராமக் கல் அளவில் பெரியது. அதனைக் கொண்டு அழகிய கோதரண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகளை வடிவமைக்க உத்தரவிட்டார். மேலும், ராஜ கோபுரத்துடன் கூடிய கோவிலையும் கட்டி எழுப்பினார்.

இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணர் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் சுக்ரீவர் சிலைகள் சாளக்கிராமக் கல்லால் அமைந்திருப்பது தனி சிறப்பு. கோவிலின் ராஜகோபுரம் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நிற்கிறது. அதனை கடந்து, கோவில் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது.
அங்கு அழகிய வட்டக்கல்லின் மீது கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிகம்பத்தில் செப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் உட்புற சுவர்களில் கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமர் பட்டாபிஷேக காட்சிகள் தனிப்பெருமை கொண்ட தஞ்சை ஓவியப் பாணியில் தீட்டப்பட்டுள்ளன. இவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராமரின் வரலாற்றையும், ராமாயணத்தையும் கண்முன்னே நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கொடிமரத்தின் முன்பு பக்தர்களின் கஷ்டங்களை போக்கிடும் கருடாழ்வார் தனி சன்னிதி கொண்டுள்ளார். கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தின் நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி கொடுக்கின்றனர்.
இக்கோவிலில் மூலவராக இருக்கும் சிலைகளை போல உற்சவராக அமைந்திருக்கும் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும் தனித்துவத்துடன் அமைந்துள்ளன. 96 வகையான விமானங்களில் சிறப்பு வாய்ந்த `சவுந்தர்ய விமானம்' இக்கோவிலில் அமைந்துள்ளது.
திருச்சுற்று வளாகத்தில் திருமடப்பள்ளி, சங்கு சக்கரத்துடன் கூடிய தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி, மகாசுதர்சன மூர்த்தி சன்னிதி உள்ளது.

இங்கு மகாசுதர்சன மூர்த்தி 16 திருக்கரங்களில் ஆயுதங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். சுதர்சன மூர்த்தியை முறையோடும், நெறியோடும் வழிபடுபவர் களுக்கு நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் கிடைக்கும்.
கோதண்டராமர் கோவிலின் தல விருட்சமாக புன்னைமரம் அமைந்துள்ளது. அதன் அடிப்பகுதியில் ராமரின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயவீர ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் இருக்கிறார்.
நேபாளத்தில் உள்ள முக்திநாத், சிறப்பான முக்தி தலமாக விளங்குகிறது. அதே போல் நோபாளத்தின் சாளக்கிராம கல்லில் செய்யப்பட்ட இந்த கோதண்டராமர் கோவிலும் முக்தியை வழங்குவதாக சொல்கிறார்கள்.
இத்தல கோதண்டராமரை துளசி மாலை சூட்டி வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிறார்கள். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக ரீதியான கஷ்டங்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் புன்னைநல்லூர் உள்ளது.






