என் மலர்
வழிபாடு
- அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.
நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.
குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.
குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.
- ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
- லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். இன்று காலை கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளிலும் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.
- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றது.
- ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.
மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம், இன்றைய கேரளா. `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர்.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்புக்குரியது.

கோவில் வரலாறு
சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.
பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.
ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.
அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.
பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.
பொங்கல் திருவிழா
இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவு பெறும். முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.
மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.
மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.
பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார். அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.
பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும்.
ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரின் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், சின்னசின்ன தெருக்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)
பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.
அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இரும்பிடம் திரும்புவார்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.
கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப் படுகிறது.
வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்ச நேயர் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

குத்தியோட்டம்
இந்தத் திருவிழாவில் சிறுவர்களுக்காகவும் ஒரு வழிபாடு உள்ளது. இதனை 'குத்தியோட்டம்' என்கிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கலாம். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தியின் காயமடைந்த போர்வீரர்களாக கருதப்படுகிறார்கள்.
மாசித் திருவிழா தொடங்கிய மூன்றாவது நாள், இந்த வழிபாட்டை செய்யும் சிறுவர்கள் தலைமை பூசாரியிடம் வந்து பிரசாதம் பெற்று, கோவிலின் தனி இடத்தில் 7 தினங்கள் தங்கி இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.
தினமும் நீராடி அம்மன் சன்னிதியில் ஈர உடையுடனேயே 7 நாட்களில் அம்மனின் 1008 திருநாமங்களை சொல்லி முடிக்க வேண்டும். பொங்கல் வைக்கும் நாள் அன்று, சிறுவர்களின் விலா எலும்புகளின் கீழ் பகுதியில் முருகனுக்கு அலகு குத்துவது போல் உலோகக் கம்பி கொக்கியால் குத்துவார்கள்.
பொங்கல் வைத்து முடித்ததும், இந்த சிறுவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மனின் முன்பாக அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில் சிறுவர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவுபெறும். இவ்வாறு செய்வதால், சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

தாலிப்பொலி
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்கான பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருவல்லிக்கேணி குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 13 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை இரவு 8.54 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 1.38 மணி வரை
பிறகு உத்திரம்
யோகம்: சித்த, அமிர்த யோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. காரமடை ஸ்ரீஅரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை, எழுந்தருளல். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் தீர்த்தவாரி, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-குழப்பம்
மிதுனம்-அமைதி
கடகம்-உழைப்பு
சிம்மம்-சிறப்பு
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நேர்மை
விருச்சிகம்-லாபம்
தனுசு- நன்மை
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-பொறுமை
மீனம்-துணிவு
- இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.
- மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம்.
- மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.
இன்று மிகமிக சிறப்பு வாய்ந்த மாசி மகம் புண்ணிய தினமாகும்.
இன்று ஆறு, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. மாசி மகம் அன்று புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் கூட அடியோடு நீங்கும் என்பது ஐதீகம்.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர்.
இந்த ஆண்டு மாசி மகம் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி திதி நேற்று (23-ந் தேதி) மாலை 4.55 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு 10 மணி வரை உள்ளது. மகம் நட்சத்திரம் நேற்று இரவு 8.40 மணிக்கு தொடங்கி இன்று இரவு 11.05 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.
மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசியில் குரு பயணம் செய்யும் போது மாசி மகம் நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிகளில் இதனை கும்பமேளா என்பார்கள்.
ஜோதிட ரீதியாகப் பார்த்தால், கும்ப ராசியில் சூரியன் இருக்க, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வரும். இந்த பவுர்ணமி திருநாளை மாசி மகம் என்று சொல்கிறோம். அதேபோல், கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சிம்மத்தில் சந்திரனும் குருபகவானும் இணைந்து இருந்தால் அது மகாமகம் என்று சொல்லப்படுகிறது.
விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
வருண பகவான் பிரம்ம ஹத்தி தோஷத்தால் பீடித்தபோது கடலில் மூழ்கியே இருந்தாராம். அந்த தோஷம் விலக சிவபெருமானை மனமுருகி வணங்கினார். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும்.
இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான்.
மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். இந்த நாளில் பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் வராகப் பெருமாளை வழிபாடு செய்யலாம். அதற்கு ஒரு கலச செம்பில் சுத்தமான நீர், பச்சை கற்பூரம், துளசி, வில்வம், விபூதி, மலர் போட்டு புனித நீராடலாம். குலதெய்வதற்கு விளக்கேற்றி பூஜை செய்யலாம்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகம் நாளில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசி மகம் நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் முன்னோர் களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் 7 ஜென்ம பாவம் தீரும். மாசி மகம் நாளில் புனித நீராட முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம், அல்லது கேட்கலாம். அதுவும் புண்ணியமே.
- குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 12 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 6.51 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: மகம் இரவு 11.05 மணி வரை. பிறகு பூரம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பவுர்ணமி. மாசி மகம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரையில் இன்மையில் நன்மை தருவார் விருஷப சேவை. கோணியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் காரமடை ஸ்ரீஅரங்கநாதர் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன்கோவிலில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-மலர்ச்சி
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-நன்மை
சிம்மம்-இன்பம்
கன்னி-உதவி
துலாம்- மேன்மை
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- மாற்றம்
மகரம்-பரிவு
கும்பம்-சுகம்
மீனம்-கவனம்
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
- கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.
விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.
- விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா.
- பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகம் பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.
இதனையடுத்து 6-ம் நாள் விழாவாக கடந்த 20-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை யில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன. இதை யடுத்து, அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தோ்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.
தொடா்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் காலை 5:45 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.
முதலில் விநாயகா் தோ் புறப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மற்ற 4 திருத்தோ்களும் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம் தீா்த்தவாரி மணிமுக்தா ஆற்றில் நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவமும், திங்கட்கிழமை சண்டிகேஸ்வரா் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
- இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா.
- அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 13-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.
இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயாரிக்கப்பட்டு முதலில் கோவில் பூசாரி அதில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர்.

கையில் குழந்தையை ஏந்தியவாறும், தீச்சட்டி எந்தியவாறும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும், பக்தர்கள் பூக்குழி இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.
3400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழிய இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை காண திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
- பவுர்ணமியை யொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

நாளை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35 மணிக்கு வனத்துறையினர். சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்து டன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாக னங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
- மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.
வருடம் தோறும் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, கடம்பூர் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதலே சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காராச்சி குறை சோதனை சாவடியில் 20 வண்டிகளுடன் பக்தர்கள் வந்தனர்.

வண்டிகளை பவானிசாகர் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.






