என் மலர்
வழிபாடு
- ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம்.
- திருத்தணி முருகப்பெருமான் வெள்ளித்தேரில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 9 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி நண்பகல் 1.58 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 4.37 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. காங்கேயம் முருகப் பெருமான் தேரோட்டம். திருத்தணி முருகப்பெருமான் வெள்ளித் தேரில் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம். கோவை கோணியம்மன் புலி வாகனத்தில் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவிடைமருதூர் பிருகத்குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-பொறுப்பு
மிதுனம்-நலம்
கடகம்-ஓய்வு
சிம்மம்-நன்மை
கன்னி-ஆதரவு
துலாம்- சலனம்
விருச்சிகம்-கவனம்
தனுசு- பொறுமை
மகரம்-லாபம்
கும்பம்-போட்டி
மீனம்-பரிவு
- மாசித்திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
- சண்முகர் இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.
7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4.30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான (23-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான (24-ந்தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.
- 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே.
மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படு கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்தவாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.
விளக்கம்:-
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடுபேறு அடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே. காளையை வாகனமாக வைத்திருப்பவனே. வேதங்கள், 'ஐயா' எனப் பெரிதும் வியந்து கூறி, ஆழமாகவும், பலப்பல தன்மைகளைக் கொண்டு ஆராய்ந்தும். காண முயற்சி செய்கின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே. என் இனிய சிவபெருமானே.
- அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.
- ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது. பிரசித்திபெற்ற திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். பாரம்பரிய இசைக்கருவிகளான தாரை, தப்பு உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெற்றது.
இதில் வேதாரண்யம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா.. மறைகாடா.. என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் அசைந்தாடியபடி சென்று, நிலையை வந்தடைந்தது.
- கிறிஸ்தவம் அன்பை போதிக்கின்ற மதம்.
- கடவுளே அன்பு எனும் மேலான சிந்தனையை சொல்கிறது கிறிஸ்தவம்.
பிப்ரவரி மாதத்தை உலகம் வேலண்டைன் மாதமாகக் கொண்டாடுகிறது. அன்பை பகிரும் மாதமாகவும், அன்பானவர்களை நினைவுகூரும் மாதமாகவும் இதை பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் போதிக்கின்ற அன்பின் மதிப்பீடுகள் இன்றைக்கு போலித்தனமாகவும், வெற்றிடங்களாகவும், சிற்றின்பக் கூடாரங்களுமாக மாறிவிட்டன.
கிறிஸ்தவம் அன்பை போதிக்கின்ற மதம். கடவுளும் அன்பும் வேறு வேறல்ல, கடவுளே அன்பு எனும் மேலான சிந்தனையைச் சொல்கிறது கிறிஸ்தவம். விண்ணகத்தின் வழி என்பது அன்பின் வழியே என அது அழுத்தமாய்ச் சொல்கிறது.
விவிலியம் என்பது கடவுள் நமக்காய் எழுதிய மிகப்பெரிய காதல் கடிதம். இறைவன் மனித குலத்தின் மீது கொண்டிருக்கின்ற பேரன்பின் வெளிப்பாடே இறைவார்த்தைகளில் வெளிப்படுகின்றன. அந்த அன்பினைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் அன்பினைச் செயல்படுத்துகிறார்கள். வெறுமனே வார்த்தைகளை வாசித்துக் கடப்பவர்கள் வெறுமையான கிறிஸ்தவர்களாய் வாழ்கிறார்கள்.
அப்படி இயேசுவின் அன்பின் அடி ஆழத்தை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்ட குடும்பமாக ஸ்டெயின்ஸ் குடும்பத்தைச் சொல்லலாம். அழுக்கடைந்த ஒரு ஏழைக்கு உதவும் போது நாம் அவர்களைத் தொட்டிருக்கிறோமா? கார் கதவைத் தட்டும் திருநங்கைக்கு அன்பின் உரையாடலோடு ஏதேனும் உதவியிருக்கிறோமா? அவலட்சணமாய் இருக்கும் மனநோயாளி ஒருவரை அரவணைத்துப் பேசியிருக்கிறோமா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் நமக்கும் இயேசுவுக்கும் இடையேயான தூரத்தைச் சொல்லிவிடும்.
கிரகாம் ஸ்டெயின்ஸ் அப்படியல்ல. தொழுநோயாளர்கள் மத்தியில் பணியாற்றியவர். அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் கூட அவர் உணவருந்தியது தொழுநோயாளர் இல்லத்தில், தொழுநோயாளிகளோடு தான். அவர்களைத் தொடவோ, அவர்களுக்குப் பணிவிடை செய்யவோ அவருடைய இதயம் கடுகளவும் தயங்கியதில்லை.
இயேசு வாழ்ந்த காலத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் விளைவு என நம்பினார்கள். தொழுநோயாளிகள் அழுக்கடைந்த, கிழிந்த ஆடைகளைத் தான் உடுத்தவேண்டும். தலையை மூட வேண்டும். தொலைவில் இருந்தே தீட்டு தீட்டு என கத்திக் கொண்டே செல்ல வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாய்த் தான் வசிக்க வேண்டும். குறைந்தது ஆறு மீட்டர் தொலைவில் நின்று தான் பேச வேண்டும்.
அவர்களைத் தொட்ட காற்று தொட்டால் தீட்டு, அவர்கள் நகருக்குள் நுழைந்தால் நகர் தீட்டு இவ்வாறு தொழுநோயாளிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இயேசு மனிதர்களை அன்பினால் அளவிடக் கூடியவர். அவர்கள் இறைவனின் பிம்பங்கள் என்பதைப் புரிந்தவர். ஒரு தொழுநோயாளியை நிராகரிப்பவனும் கடவுளையே நிராகரிக்கிறார் எனும் உண்மை உணர்ந்தவர். அதனால் அவர் தொழுநோயாளரைத் தொட்டார், அவர்களோடு உலவினார், அவர்களோடு விருந்துண்டார்.
அவரது அன்பின் நீட்சியாகப் பணியாற்றிவர் தான் கிரகாம் ஸ்டெயின்ஸ். ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர் நினைத்திருந்தால் வளமான வாழ்க்கையை அங்கே வாழ்ந்திருக்கலாம். பிள்ளைகளை டாக்டர் ஆக்கியிருக்கலாம். ஒரு சொகுசான வாழ்க்கையில் இருந்து கொண்டே கொஞ்சம் காணிக்கை, கொஞ்சம் நற்செய்தி என இதயம் கசங்காமல் நற்செய்தி அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையான இயேசுவின் தொண்டர். பழைய கால மிஷனரிகளைப் போல அளப்பரிய களப்பணிக்காய் தன்னை அர்ப்பணித்தார்.
அவரும் அவரது இரண்டு மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி இருவரும் இறைவனிடம் செபித்துவிட்டு ஜீப்பில் படுத்து உறங்குகிறார்கள். நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவை களுக்கு கூடுகள் உண்டு தொழுநோயாளரிடம் பணியாற்றும் கிரகாம் குடும்பத்துக்கோ ஜீப் மட்டுமே உண்டு.
அன்பின் விதைகளைத் தூவி நடந்தவர்களை, மதத்தின் கொம்பு சீவி விடப்பட்டவர்கள் சந்திக்கிறார்கள். எந்த மதமும் சொல்லித்தராத வன்முறையை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். கனவுகளோடு துயின்றவர்களை கனல்களால் எரித்துத் தீர்க்கிறார்கள். எட்டு வயது, பத்து வயது என துள்ளித் திரிந்த பிள்ளைகளைக் கூடவிட்டு வைக்க வேண்டுமென அந்த வெறியர்களுக்குத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள்.
தன் கணவன், மகன்கள் என மூன்று பேரைப் படுகொலை செய்த அந்த குடும்பத்தை கிளாடிஸ் மன்னித்துவிட்டார். சிலுவையின் உச்சியில் இயேசு நின்ற அதே அவஸ்தை. அதே மனநிலை. கால் நூற்றாண்டு கடந்து விட்டது. உலகம் அவரை வியப்பாய்ப் பார்த்தது.
கிரகாம் ஸ்டெயின்ஸின் படுகொலையைப் பார்த்துப் பதறியவர்கள், மனைவியின் விசுவாசத்தைப் பார்த்து நடுங்கினார்கள். கடவுளுக்காய் கொலை செய்வதா? கடவுளுக்காய் கொலையாளிகளையும் மன்னிப்பதா? மிகப்பெரிய கேள்வியை கிளாடிஸ் அன்றைக்கு விதைத்தார்.
உலகில் அன்பைவிடப் பெரியதாய் எதுவும் இல்லை. அது தான் மனித மாண்பை மீட்டெடுக்கிறது. அது தான் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் பேணிக்காக்கிறது. அன்பு இருக்கின்ற மனிதர் ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்புகிறார்.
அன்புக்காய் எதையும் இழப்போம். எதற்காகவும் அன்பை இழக்க மாட்டோம் எனும் சிந்தனையே இயேசுவின் வாழ்க்கையில் இருந்தது. அதையே நம் வாழ்விலும் கொள்வோம்.
- உன்னத படைப்பாக மனிதன் திகழ்கின்றான்.
- திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.
இறைவன் எண்ணற்ற படைப்புகளை இந்த உலகில் படைத்துள்ளான். அவற்றில் உன்னதப் படைப்பாக மனிதன் திகழ்கின்றான். எந்தபடைப்புக்கும் கொடுக்காத ஒரு தனித்துவத்தை மனிதப் படைப்புக்கு இறைவன் கொடுத்துள்ளான். அதுவே சிந்திக்கும் திறனும், ஆற்றலும். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் மனிதன் மனம்போன போக்கில் அலைகிறான். இறை கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்கின்றான்.
உலகத்தின் மீது கொண்டிருக்கும் மோகம் தான் சிந்தனைத் திறன் பழுதடைவதற்குக் காரணம். இதனால் மறுமையை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்: ``பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த பெருங்குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது". (திருக்குர்ஆன் 3:14)
உலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்டு அனேகமானோர் அலைந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். மறுமை எனும் புதையலை அடைந்துகொள்ள வேண்டுமெனில் இம்மை வாழ்வில் சரியான விளைச்சலை நாம் விதைக்க வேண்டும். இது கட்டாயம்.
ஆனால் நம்முடைய தேடலும், சிந்தனையும் இம்மையை மையமாகக் கொண்டே சுழல்வதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.
நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் கொசுவின் இறக்கை அளவுக்கு ஈடாக இருக்கும் என்றிருந்தால், அவனை நிராகரிக்கும் நிராகரிப்பாளருக்கு அவன் ஒரு மிடர் தண்ணீரைக் கூட அருந்துவதற்குக் கொடுத்திருக்க மாட்டான்". (நூல்: அஹ்மத்)
இதன் அடிப்படையில் எது குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதை இந்த நபிமொழி அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான் மற்றொரு முறை நபி (ஸல்) கூறினார்கள்: "எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக்கொள்வான்.
எனவே மக்களே! நீங்கள் அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்குப் பகரமாக, நிலையான வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அதாவது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக்கொள்ளுங்கள்".
இதனையே அல்லாஹ் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: "இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு.
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள். அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:15)
மனிதனின் சிந்தனைதான் செயல்வடிவமாக மாறுகிறது. அதன் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்வையும் அமைத்துக்கொள்கிறான். நன்மையான விஷயங்கள் குறித்து சிந்தித்தால் நன்மைகளைச் செய்வான். தீமைகளை சிந்தித்தால் துர்பாக்கியமே மிஞ்சும். சிந்தனையின் சிறப்பு குறித்து இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக அறிவுறுத்துகிறான்.
"நபியே! இவர்களிடம் கூறும்: "நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன். நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித்தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்" (திருக்குர்ஆன் 34:46)
"இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 2:219,220)
"அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)
மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மதங்கள் சில வரையறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக அறிவுறுத்தி வழிகாட்டுகிறது, கற்றுக்கொடுக்கின்றது.
கற்றுக்கொள்வதன் மூலமும், கற்றுக்கொடுப்பதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான். அந்த பகுத்தறிவுதான் அவனை சிந்திக்க வைக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்ல சிந்தனையும் ஒரு வணக்கமே. நல்ல சிந்தனைதான் அடிப்படையில் இருந்தே ஒரு மனிதனை மாற்றுகிறது. எனவே சிந்தித்து செயல்படுவோம்!
- தீர்த்த யாத்திரை’ என்றாலே கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும்.
- மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது.
நீராடுதல் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமானது அல்ல. அது ஆன்மிகத்திலும் மிக விசேஷமாக பேசப்படுகிறது. பொதுவாக `தீர்த்த யாத்திரை' என்றாலே, புனிதமான இடங்களில் உள்ள கோவில்களைச் சார்ந்த கடல், நதி, குளங்களைத்தான் குறிக்கும். உதாரணமாக `காசிக்கு தீர்த்த யாத்திரை செல்கிறோம்' என்று கூறினால், அங்கே கங்கை நதியில் நீராடுதல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேபோல் மகா மகம் என்று சொல்லும் பொழுது, அனைவரின் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். மகா மகம் என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடியது. கும்ப ராசியில் சூரியனும், குரு பகவானும் சஞ்சாரம் செய்யும் போது, சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் தினத்தையே `மகா மகம்' என்று கொண்டாடுகிறோம். அதைத்தவிர பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.
ஸர்வக்ஷேத்ர க்ருதம் பாபம் காசீக்ஷேத்ரே வினச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி
எந்த இடத்தில் செய்யும் பாவங்களும் காசிக்கு வந்து கங்கை நதியில் குளிப்பதால் தீர்ந்து விடும். வாரணாசியில் செய்யும் பாவம் கும்பகோணத்தில் வந்து மகா மக குளத்தில் குளித்தால் நீங்கி விடும். ஆனால் கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள், வேறு எந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாலும் நீங்காது. அந்த பாவங்கள் நீங்க வேண்டுமானால், நாம் நிச்சயமாக கும்ப கோணத்தில் உள்ள மகா மக குளத்தில்தான் குளித்தாக வேண்டும் என்பதே, கும்பகோணம் மகா மக குளத்திற்கு உரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சாபம் நீங்கிய வருணன்
ஒரு சமயம் வருண பகவானுக்கு ஏற்பட்ட சாபமானது, மகாவிஷ்ணுவின் அருளால் நீங்கியது. அப்படி வருணனின் சாபம் நீங்கிய தினம் ஒரு மாசி மாத மகம் நட்சத்திரம் ஆகும். அவருக்கு சாபம் நீங்கிய தினத்தில் அனைத்து நீர் நிலைகளிலும், புனித நதியான கங்கை இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே மாசி மகம் அன்று, நாம் கோவில்களில் உள்ள குளங்கள், புண்ணிய நதிகள், கடலில் நீராடுவதால், வருணனைப் போலவே, நம்முடைய சகல பாவங்களும் நீங்கும் என்பதாக ஐதீகம் உள்ளது.
மாசி மகம் என்பது பெருமாள் கோவில்களில் மட்டுமல்லாது, சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள் என்று அனைத்து கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
`அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ ஹ்யவந்திகா, புரீத்வாரவதீ சைவ ஸப்தைதே மோக்ஷதாயிந' என்று சாஸ்திரங்களால் சொல்லப்பட்ட, முக்தியைத் தரும் ஏழு முக்கியமான திருத்தலங்களிலும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே இடம் காஞ்சிபுரம் ஆகும்.
அந்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலிலும், வரதராஜப் பெருமாள் கோவிலிலும் மாசி மக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவதைக் காண முடியும்.

தாட்சாயிணி அவதரித்த தினம்
முன்பொரு முறை திருக்கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. சிவனின் கண்களை பார்வதி மூடியது சில நொடிகள்தான் என்றாலும், அது உலக உயிர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகும்.
எனவே அத்தனை காலம் துன்பத்தை அனுபவித்த உயிர்களின் பாவங்கள், பார்வதியை அடைந்தது. தன் தவறை உணர்ந்த பார்வதி, "என் பாவங்கள் நீங்க என்ன வழி?" என்று ஈசனைக் கேட்டார். அதற்கு அவர், "நீ யமுனை நதிக் கரைக்குச் சென்று தவம் செய்" என்றார்.
அதன்படியே யமுனை நதிக்கரைக்கு வந்த பார்வதிதேவி, தன்னை வலம்புரி சங்கின் வடிவமாக மாற்றிக் கொண்டு, தாமரைப் பூ ஒன்றில் அமர்ந்து தவம் செய்து வந்தாள். இந்த நிலையில் தட்சன் என்ற மன்னன், தனக்கு பார்வதியே மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.
ஒரு முறை தட்சன் தன் மனைவியுடன் யமுனை நதியில் நீராட வந்தபோது, தாமரைப் பூவில் இருந்த வலம்புரி சங்கைக் கண்டான். அதை கையில் எடுத்தவுடன், அந்த சங்கு ஒரு அழகிய பெண் குழந்தையாக மாறியது. அதற்கு `தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாக கந்தபுராணம் எடுத்துரைக்கிறது. அப்படி அம்பிகையை தட்சன் கண்டெடுத்த தினம் `மாசி மகம்' என்கிறார்கள். அதன் காரணமாகவும் மாசி மகம் நட்சத்திரம் போற்றுதலுக்குரியதாக மாறியது.
மாசி மகம் நாள் அன்று அருகில் உள்ள குளங்களிலோ, நதிகளிலோ, கடற்கரையிலோ, சுவாமி தீர்த்தவாரி செல்கின்ற இடத்திலோ `கங்கே ச யமுநே சைவ கோதாவரி சரஸ்வதி| நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு' என்ற மந்திரத்தைக் கூறி, வருண பகவானை தியானித்து நீராடுவது மிகுந்த புண்ணிய பலன்களை பெற்றுத் தரும்.
ஓரிடத்தில் குளிக்கும்போது அந்த ஆலயத்தில் உள்ள தெய்வங்களின் நாமங்களைச் சொல்லி குளிக்க வேண்டும். தாமிரபரணி, காவிரி போன்ற இடத்தில் குளிக்கும்போது, அங்குள்ள நதிகளின் பெயரையும், சுவாமியின் பெயரையும் சொல்லி நீராட வேண்டும். புனித நதி, குளம், கடல் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது ஒற்றை துணி உடுத்தி குளிக்க வேண்டும். ஆடையின்றி குளிப்பது ஆகாது. சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதை தவிர்க்கவும். நீருக்குள் மலம், ஜலம் கழிப்பது பாவம்.
முதலில் நீராடும் புனித தீர்த்தத்தின் நீரை கைகளால் தொட்டு தலையில் தெளிக்க வேண்டும். பின்னர்தான் கால்களை நீரில் நனைக்க வேண்டும். எடுத்தவுடன் கால்களை நீரில் நனைக்கக்கூடாது. நீராடும் போது முழுமையாக மூழ்கி எழ வேண்டும். நீராடியதும் ஈரமான துணிகளை குளத்தில், நதியில் விடுவதோ, கரையில் குவித்து போடுவதோ கூடாது.

நீராடலின் வகைகள்
நீராடுதல் என்றால், நாம் சாதாரணமாக குளிப்பது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர், நீராடுதல் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது, அதற்கு அதிபதியாக இருக்கக்கூடிய வருண பகவான் தான். நீராடுவதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
விபூதி ஸ்நானம்:-
முறைப்படி தயார் செய்த விபூதியில், நீர் விட்டுக் குழைக்காமல் உடல் முழுவதும் பூசிக்கொள்வது. இதனை `பஸ்மோத்தூளனம்' என்றும் அழைப்பார்கள்.
கோ தூளி ஸ்நானம்:-
பசுக்கள் செல்லும் பொழுது அதன் காலடி குளம்புகளில் இருந்து வரக்கூடிய தூசி மிகப் புனிதமாக சொல்லப்பட்டுள்ளது. நிறைய பசுக்கள் செல்லும் பொழுது அவற்றின் குளம்புகளில் இருந்து மிக உயரமாக மண் துகள் கிளம்பும். அவை நம் உடலில் படுமாறு நிற்பதற்கு 'கோ தூளி' என்று பெயா்.
திவ்ய ஸ்நானம்:-
நன்றாக வெயில் அடித்துக் கொண்டிக்கும் நேரத்தில், சில சமயம் மழை பெய்யும். இது மிக விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நீரில் குளிப்பதற்கு `திவ்ய ஸ்நானம்' என்று பெயர்.
மந்திர ஸ்நானம்:-
குளிக்க முடியாத பொழுது, `ஆபோஹிஷ்டா' என்ற மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய தலையில் சிறிது நீரை தெளித்துக் கொள்ளும் முறை இது.
பிராஹ்ம ஸ்நானம்:-
இது மிகவும் சிறப்பான ஒரு குளியல். அதாவது நாம் சிறப்பான ஒரு பூஜையை முடித்திருக்கும் வேளையில், அந்த பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட கலசத்தில் மந்திர ஜெபங்களின் சக்தி நிரம்பியிருக்கும். இந்த கலச நீரை தலையில் விட்டு நீராடுவது 'பிராஹ்ம ஸ்நானம்' ஆகும்.

மகரிஷிக்கு அருளிய பெருமாள்
தல சயனப்பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம், `திருக்கடல்மல்லை' என்று அழைக்கப்படும் மகாபலிபுரம் ஆகும். ஒரு சமயம் புண்டரிகாட்சர் என்ற மகரிஷி இங்கு வாழ்ந்து வந்தார். அவர் இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது.
அதாவது திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனை அடைவதற்காக, மல்லையில் உள்ள கடல் நீரை, கையால் இறைத்து வெளியேற்றி விட்டு, கடலுக்குள் செல்வது என்று முடிவெடுத்தார். அதன்படி தன் கைகளால் கடல் நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார்.
இவரது பக்தியை கண்ட பெருமாள், ஒரு வயோதிக தோற்றத்தில் அங்கு வந்தார். பின்னர் புண்டரிகாட்சரிடம், ``நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். சாப்பிட்டுவிட்டு வாருங்கள். அதுவரை நான் கடல் நீரை இறைக்கிறேன்" என்றார். அதன்படியே முனிவரும் அங்கிருந்து சென்று, உணவருந்தி விட்டு திரும்பி வந்தார். அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. வயோதிகரைக் காணவில்லை.

அப்போது அங்கே பெருமாள் திருவடியில் தான் வைத்து வழிபடும் தாமரைப் பூவையும், பள்ளிகொண்ட திருமாலையும் கண்டார். இதையடுத்து தனக்காக இறைவனே நேரில் வந்து கடல் நீரை இறைத்ததை உணர்ந்துகொண்டார். அந்த இடம் `அர்த்த சேது' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும் என்கிறார்கள்.
- கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது.
- பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது. அங்குள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான இங்கு, தங்கத்தில் செய்யப்பட்ட 2 அடி உயரத்தில் 13 கிலோ எடையுள்ள 7 யானை சிலைகள், அதைவிட சிறிய அளவிலான ஒரு யானை சிலை என 8 யானை சிலைகள் கோவில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும். அதன்படி ஆராட்டு விழாவை முன்னிட்டு ஏழர பொன்னான என்று கூறப்படும் தங்க யானை சிலைகள் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.
- 21-ந்தேதி பிரதோஷம்.
- 24-ந்தேதி மாசி மகம், பவுர்ணமி.
20-ந்தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல்.
* மேல்நோக்கு நாள்.
21-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருத்தணி முருகப்பெருமான் வெள்ளி தேரில் புறப்பாடு.
* காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயத்தில் திருக்கல்யாணம்.
* மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.
* திருப்போரூர் முருகப் பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
23-ந்தேதி (வெள்ளி)
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.
* காங்கேயம் முருகப்பெருமான்- வள்ளி திருக்கல்யாணம்.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் ரத உற்சவம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (சனி)
* மாசி மகம்.
* பவுர்ணமி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்பம்.
* திருமோகூர் காளமேகப்பெருமாள், யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தல்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
25-ந்தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
* கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
- ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
- பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும்.
மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.
``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர்வினவிலும் வாய் திறவாதே
அந்தகாலம் அடைவதன்முன்னம்
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து
மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே''.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நண்பகல் 1.11 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.13 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி. கோவை கோணியம்மன் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-பண்பு
மிதுனம்-பெருமை
கடகம்-சுகம்
சிம்மம்-மேன்மை
கன்னி-தேர்ச்சி
துலாம்- வரவு
விருச்சிகம்-தேர்வு
தனுசு- பரிசு
மகரம்-மாற்றம்
கும்பம்-அனுகூலம்
மீனம்-இன்பம்
- பெண்கள் மஞ்சள் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
- தம்பதியருக்குள் ஒற்றுமையும், அன்யோன்யமும் கூடும்.
ஜோதிட ரீதியாக மாசி மாத கிரஹ நிலையை ஆராய்ந்தோமேயானால் ஒரு உண்மை புலப்படும். மாசி மாதத்தில் பௌர்ணமி தோன்றும் காலத்தில் சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். சிம்ம ராசி என்பது சூரியனின் சொந்த வீடு ஆகும். சூரியனை பித்ரு காரகன் அதாவது தந்தை என்றும் சந்திரனை மாதுர் காரகன் அதாவது தாய் என்றும் ஜோதிடர்கள் அழைப்பார்கள். மாதந்தோறும் சந்திரன் சிம்ம ராசியைக் கடந்தாலும், தந்தையாகிய சூரியனின் வீட்டில் முழு நிலவாக, பூரணத்துவம் நிறைந்த பவுர்ணமியாக தாயாகிய சந்திரன் ஒளி வீசுவது இந்த மாசி மாதத்தில் மட்டுமே நடக்கின்ற நிகழ்வு.
இதை சிவசக்தி ஐக்கியமாகவே காண்கிறார்கள் பெரியோர்கள். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
மாசிக்கயிறு மாங்கல்ய பலம் தரும் என்றழைத்தனர். அமரத்துவமும், அமிர்தத்துவமும் நிறைந்த இந்த மாசி மாதத்தில் திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
மேலும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள், முதல் மனைவி அல்லது கணவர் இறந்ததால் மறுமணம் செய்பவர்கள் யாவரும், இந்த மாசி மாதத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வதோடு தம்பதியருக்குள் ஒற்றுமையும், அன்யோன்யமும் கூடும்.






