என் மலர்
ஆன்மிகம்
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-26 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி மாலை 4.25 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.09 மணி வரை பிறகு பரணி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-பரிசு
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-புகழ்
சிம்மம்-உறுதி
கன்னி-நலம்
துலாம்- யோகம்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- லாபம்
மகரம்-ஜெயம்
கும்பம்-உழைப்பு
மீனம்-கனிவு
- நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் நடை சாத்தப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். சந்திர கிரகணம் முடிந்து கோவில் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.
ரிஷபம்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
நன்மைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். வியாபார விரோதம் விலகும்.
கடகம்
மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். வீட்டு பராமரிப்புச் செலவு கூடும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். புதுமனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கும்பம்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்களை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-25 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை மாலை 6.44 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.42 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-வரவு
கடகம்-உதவி
சிம்மம்-உண்மை
கன்னி-தாமதம்
துலாம்- சிரமம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- நற்செயல்
மகரம்-சிந்தனை
கும்பம்-பாராட்டு
மீனம்-நம்பிக்கை
- மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது.
- திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தியாவில் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் கொட்டியூர் சிவன் கோவில். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது, கொட்டியூர் என்னும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் வருடத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது.
தல வரலாறு
பார்வதி தேவியின் தந்தை தட்சன். இவன், சிவபெருமானை அழைக்காமலேயே இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தினான். அவ்வாறு மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' எனும் வேள்வியை நடத்த முடிவு செய்தான். அதில் கலந்து கொள்ள சிவபெருமானை தவிர தேவர்கள் என மற்ற அனைவரையும் அழைத்திருந்தான். தன் தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில் தன்னுடைய கணவரான சிவபெருமானை அழைக்கவில்லையே என்று மிகவும் வருந்தினார், பார்வதி தேவி.
அதேநேரம், அந்த வேள்வியில் கணவருடன் கலந்து கொள்ளவும் விரும்பினார். பார்வதி தேவி, தன் எண்ணத்தை சிவபெருமானிடம் கூறினார். அதற்கு சிவபெருமான், ''நாம் அங்கு செல்ல வேண்டாம். அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே கிடைக்கும்'' என்றார். ஆனால் பார்வதி தேவி வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவபெருமான் சொன்னதை கேட்காமல் தனியாகவே வேள்வி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது. தட்சன், பார்வதியையும், சிவபெருமானையும் அவமதித்து பேசினான். இதனால் மிகவும் மனம் வருந்திய பார்வதி தேவி, தனது உயிரை அங்கேயே மாய்த்துக் கொண்டார். இதை அறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வேள்வி நடத்திக் கொண்டிருந்த தட்சனின் தலையை துண்டாக வெட்டி வீசினார். தட்சனின் தலையை வெட்டிய பிறகும் சிவபெருமானின் கோபம் அடங்கவில்லை. பின்பு கோபம் தணிந்து, சிவபெருமான் ஓரிடத்தில் சுயம்புவாக தோன்றினார். அந்த இடம்தான் கேரளாவில் இருக்கும் கொட்டியூர் என்கிறது தல புராணம். இந்த தலத்திற்கு திருசேருமன்னா என்ற பெயரும் உண்டு.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடம் என்பதால் 'கூடியூர்' என அழைக்கப்பட்டு, பிறகு 'கொட்டியூர்' என்று மாறிப்போனது. கொட்டியூர் மட்டுமல்ல அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் தட்சன் நடத்திய யாகத்துடன் தொடர்புடையவை என சொல்லப்படுகின்றன. தட்சனின் யாகத்திற்கு வந்த பார்வதி தேவி, யாகம் நடந்த இடத்தை தூரத்தில் இருந்து கண்டதால் அவ்விடம் 'நீண்டு நோக்கி' என்றும், தட்சனின் யாகத்தை காண நடந்து வந்த பார்வதி தேவியின் நடை வேகம் குறைந்த இடம் என்பதால் 'மந்தன்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கொட்டியூரில் மாவேலிப்புழை எனப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. இதன் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்துள்ளன. ஆற்றின் இக்கரையில் அமைந்துள்ள கோவிலை 'இக்கரை கொட்டியூர்' என்றும், அடுத்த கரையில் அமைந்துள்ள கோவிலை 'அக்கரைக் கொட்டியூர்' என்றும் அழைக்கின்றனர். இவற்றில் அக்கரை கொட்டியூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்படுகிறது. அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் மகோற்சவ காலத்தின்போது மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது.
மற்ற நாட்களில், பக்தர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக அமைக்கப்பட்ட கோவில் தான், இக்கரைக் கொட்டியூர் சிவன் கோவில். இக்கோவில் சற்று உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல பல படிகளை ஏறி செல்ல வேண்டும். அங்கு இடப்பக்கம் பார்வதி தேவி சிலையும், வலப்பக்கம் சிவன் சிலையும் உள்ளன.
அக்கரை கோவில், 'திருவஞ்சிற' எனும் சிறு குளத்தின் மீது கருங்கல்லால் ஆன மேடைகளுடன் அமைந்துள்ளது. இந்த இடம் தட்சன் நடத்திய வேள்வி குண்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு 'மணித்துறை' எனும் மேடையில் சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருள்கிறார். சற்று தூரத்தில் பார்வதி தேவி அக்னிப்பிரவேசம் செய்த மேடை ஒன்று உள்ளது. அதற்கு 'அம்மாறக்கல்' என்று பெயர்.
கோவிலுக்கு சொந்தமான நகைகள், கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் உள்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டகத்தின் நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் இருக்கும். இவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்த பெட்டகத்தை பாம்புகள் பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது.
திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த கலசங்களுக்கு 'பண்ணாரம்' என்றும், இந்த உற்சவத்திற்கு 'பண்ணாரம் எழுந் நலத்து வைபவம்' என்றும் பெயர். இந்த வைபவத்தை நடத்துபவர்கள் 'குடிபதிகள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அக்கரை கொட்டியூர் கோவில்
வைகாசி மகோற்சவ விழா
அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளன்று தொடங்கி ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் வரை 28 நாட்கள் வைகாசி மகோற்சவம் நடைபெறும். இதில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். திருவிழா சமயங்களில் மட்டும் அக்கரை கொட்டியூரில் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை சுற்றிலும் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறந்த வெளியிலேயே ஈசன் வாசம் செய்கிறார். பக்தர்கள் சிவனை வழிபடும் இடத்திற்கு 'திருவஞ்சரா' என்று பெயர். இந்த இடத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் 'தட்சனின் ரத்தம்' என கருதப்படுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலச்சேரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கொட்டியூர் இருக்கிறது.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- பரணி மகாளயம்.
இந்த வார விசேஷங்கள் (9-9-2025 முதல் 15-9-2025 வரை)
9-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* சங்கடஹர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* பரணி மகாளயம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* கார்த்திகை விரதம்.
* திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி விழா தொடக்கம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை இரவு 8.54 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.07 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சாந்தம்
கடகம்-களிப்பு
சிம்மம்-மாற்றம்
கன்னி-தேர்ச்சி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- கடமை
மகரம்-முயற்சி
கும்பம்-ஓய்வு
மீனம்-பரிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம், வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிகப்பொறுப்புகளை வழங்குவர்.
மிதுனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.
கன்னி
வெற்றிச்செய்திகள் வீடு வந்துசேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
துலாம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிதரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
தனுசு
வியக்கும் தகவல் வீடு வந்துசேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மகரம்
பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத் தகவல் உண்டு.
கும்பம்
முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
மீனம்
நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு.
- ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
- பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3.தர்ப்பணம் என்று 3 வழிகளில் செய்யலாம்.
1. பார்வணம் என்பது 6 பிராமணர்களை (பித்ருக்களாக) நினைத்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து சாப்பாடு போடுவது.
2. ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
3. தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள் மகா பரணி (12-ந்தேதி வெள்ளி), மத்யாஷ்டமி (14-ந்தேதி ஞாயிறு), மகாதிவ்ய தீபாதம் (15-ந்தேதி திங்கள்), கஜச்சாயா (19-ந்தேதி வெள்ளி) ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.
சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 18-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும், விபத்துகளால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு 20-ந்தேதி (சனி) அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் செய்யும் மகாளயத்தை 21-ந்தேதி (ஞாயிறு) அமாவாசை அன்றும் செய்யலாம்.
மகாளய பட்சத்தில் தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாள் அன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.
இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த கிருஷ்ண பட்சத்தில் அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் செய்யலாம்.
- விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
அவினாசி அருகே மேற்குபதி அபிஷேகபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜாப்பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக இந்த விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், 108 சங்க பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், யாக பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 5 கிராமபொதுமக்கள் செய்து இருந்தனர்.
- போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
- கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.
வேளாங்கண்ணி மாதா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 3 அதிசயங்கள் முக்கியமானவை. அவை பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி அளித்தது. மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம், புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகியவை ஆகும்.
இவற்றில் மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்தது, புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகிய 2 அதிசயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம்
பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா அளித்த காட்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் 2-வது காட்சி வேளாங்கண்ணி சிற்றூரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.
தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக முகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.
அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். "மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக" என்றார். ஆனால் அந்த சிறுவனோ தான் நடக்க முடியாதவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையை பார்க்கிறான்.

அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை "மகனே எழுந்து நட" என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார். அந்த சிறுவனின் கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்த சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது. வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னான்.
அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அதற்கு முந்தைய இரவில் அந்த கத்தோலிக்க கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார். உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.
புயலில் சிக்கிய கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாள் அன்னை
கி.பி. 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் 3-வது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவில் இருந்து போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
வழியில் கடுமையான புயலில் அந்த கப்பல் சிக்கியது. அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.
நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என வேண்டினர். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோஷம் குறைய தொடங்கியது.
அவர்கள் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் கரை வந்து சேர்ந்ததற்காக கன்னி மரியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்கள்.
போர்த்துக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அங்கு வந்து அன்னையை வணங்கி செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டிய ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப்பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.
அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்ைக நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.
அவை வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவா காவியங்களாக வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தில் இன்றும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
அன்னை ஆரோக்கிய மாதா நிகழ்த்தி காட்டிய அதிசயங்களால் வேளாங்கண்ணி ஆலயம் உலகம் போற்றும் பேராலயமாக விளங்குகிறது.
- ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள்.
- நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள்.
இன்று மகாளய பட்ச அமாவாசைக்கான 14 நாள் தொடங்குகிறது. இந்த அமாவாசை தினத்துக்கு முன்பு வரும் 14 நாட்களும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய பட்ச அமாவாசை.
ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.
மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும். இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாளயத்தை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் அடுத்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவறவிட மாட்டார்கள்.
இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.
மகாளயபட்ச நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் குடும்ப பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.
நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.
அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.
மகாளய பட்ச வழிபாடு தரும் மிகப்பெரிய பலன் இது. எனவே இன்று மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தொடங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.
ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.
அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.
இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.
தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.
அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.
அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.
ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.
உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.
உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் தான். நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?
அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 14 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.
அதற்கு நாம் மகாளய பட்ச 14 நாட்களும் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.






