என் மலர்
ஆன்மிகம்
- ஆனி உத்திர தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-18 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி பிற்பகல் 2.59 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.21 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுபமுகூர்த்த தினம், நடராஜருக்கு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்
இன்று சுபமுகூர்த்த தினம். நடராஜர் அபிஷேகம். ஆனி உத்திர தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருப்பெருந்துறை, ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-தனம்
மிதுனம்-லாபம்
கடகம்-முயற்சி
சிம்மம்-போட்டி
கன்னி-பயிற்சி
துலாம்- நலம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- நிறைவு
மகரம்-புகழ்
கும்பம்-மாற்றம்
மீனம்-பரிசு
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப் பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு
நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயை பேணி வளர்க்கும் அந்தணர்கள் போற்ற, மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவனே! வேள்வி செய்வதை தவமாக போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டி புகழும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரத்தை விருப்பம் கொள்ள என்ன காரணம்? சொல்வாயாக!
- ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி.
- கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
இந்த வார விசேஷங்கள்
1-ந் தேதி (செவ்வாய்)
* சஷ்டி விரதம்.
* சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி சேஷ வாகனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சல் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* ஆனி உத்திர தரிசனம்.
* சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சனம்.
* ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந் தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* கண்டதேவி, கானாடு காத்தான் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* திருவில்லிபுத்தூர் பட்டர்பிரான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* மதுராந்தகம் கோதண்டராமசுவாமி விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
4-ந் தேதி (வெள்ளி)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
5-ந் தேதி (சனி)
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.
* வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம்.
* திருநெல்வேலி சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (ஞாயிறு)
* சர்வ ஏகாதசி.
* கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவர்ணம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு.
* திருத்தங்கல் அப்பன் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியருக்கு வருசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
- தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர்.
சிதம்பரம்:
பூலோக கைலாயம் என்ற ழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.
சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். திரளான பக்தர்கள் இன்று காலை 8 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர், அம்மன் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.
முன்னதாக தேரின் முன்பு பெண்கள் கும்மியடித்த படியும், ரத வீதிகளில் கோலம் போட்டபடியும் சென்றனர். மேலும் பக்தர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டபடி நடனமாடி சென்றனர்.
தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழி யாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.
நாளை ஜூலை 2-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சி யும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் சாமிகள் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டு மல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஜூலை 3-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
விழாவிற்கான பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம்.
- வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-17 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 1.49 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : பூரம் நண்பகல் 12.33 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
இன்று குமார சஷ்டி. சஷ்டி விரதம். சகல சிவன் கோவில்களிலும் ஸ்ரீ நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். திருக்கோளக்குடி ஸ்ரீ களோபுரீஸ்வரர் பவனி. கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தல மான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விவேகம்
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-நிறைவு
கடகம்-இன்பம்
சிம்மம்-இரக்கம்
கன்னி-உழைப்பு
துலாம்- கடமை
விருச்சிகம்-கண்ணியம்
தனுசு- கட்டுப்பாடு
மகரம்-ஓய்வு
கும்பம்-முயற்சி
மீனம்-பக்தி
- நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேப்போல் தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் குருபூஜை வழிபாடை முன்னிட்டு மாணிக்கவாசகர் உட்பட நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிவனடியார்கள் திருவாசகம் பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.
- மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
- சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்கள். தேரோட்டம் நிகழ்ச்சி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.
- திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம்.
- நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-16 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி நண்பகல் 1.08 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : மகம் காலை 11.12 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் ஹம்ச வாகனத்திலும் சுவாமி, பெரிய பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு. அமர்ந்தி நாயனார் குருபூஜை. கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி வீதியுலா. ராஜபாளையம் பெத்தநல்லூர் ஸ்ரீ மயூரநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர், ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர்,
பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-லாபம்
மிதுனம்-அன்பு
கடகம்-ஆசை
சிம்மம்-ஆதரவு
கன்னி-துணிவு
துலாம்- புகழ்
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- நலம்
மகரம்-உதவி
கும்பம்-நட்பு
மீனம்-நலம்
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-15 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி நண்பகல் 12.58 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 10.23 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்று சதுர்த்தி விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்ட ராமர் அனுமன் வாகனத்தில் வீதிஉலா. திருக்கோளக்குடி, கண்டதேவி கோவில்களில் உற்சவம் ஆரம்பம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-பெருமை
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-தெளிவு
கன்னி-சுபம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- பிரீதி
மகரம்-நிறைவு
கும்பம்-அமைதி
மீனம்-லாபம்
- திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
- அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் கோவிலை கடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் 'திருவாதவூரார்' என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.
சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை பாண்டிய மன்னர் அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்கி வழிபட்டார். அப்போது அங்கு அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார்.
அந்த சமயத்தில் வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், "உன் சொற்கள் மாணிக்கத்தை விட மதிப்புமிக்கவை. இனி நீதி மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்" என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன் பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பொன் பொருட்களை திருப்பெருந்துறை ஆலய திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.
நாட்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்க வாசகர். அப்போது, "ஆடி மாதம் முடிவடைதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அடி" என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.
வனத்தில் இருந்து நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னார். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. இதை கண்ட பாண்டிய மன்னர் தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று கடும் கோபம் கொண்டார். மாணிக்க வாசகரை வைகை நதியின்சுடு மணலில் நிறுத்தி மரணத்தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
தவறை உணர்ந்த மன்னர் மாணிக்க வாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். ஆனால் மாணிக்க வாசகர் அதை நிராகரித்து விட்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கு தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாடினார். அதை ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர் அவர் 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி ஓலைகளைக் கீழ் வைத்து மறைந்தார்.
இதன் மூலம் அந்தப் பாடல்களை சிவபெருமானே விரும்பி எழுதி கொடுத்தது என்பது உறுதியானது. இந்த பாடல்கள்தான் திருவாசகம் என்று அழைக்கப்படுகிறது.
திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும் போதும் படிக்கும் போதும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர்.
திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?
திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும்.
இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.
திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமின்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. இதனால்தான் மாணிக்கவாசகரை வழிபட சொல்கிறார்கள்.
மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.
திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்டதற்கு மாணிக்கவாசகர் அளித்த பதில், நடராஜரா என்பது தான். மாணிக்கவாசகர், சிவபெருமானுடன் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம். திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.
மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும்.
அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியாவிட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும்.
அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். இது அளவற்ற புண்ணியத்தைத் தேடித் தரும்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.
திருவாதவூர் மாணிக்க வாசகர் கோவில் 92-ம் ஆண்டு ஆனி மகவிழா நாளை (29.6.2025) காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. திருவாதவூர் வேதநாயகி சமேத திருமறைநாதர் கோவிலில் இருந்து மாணிக்கவாசக பெருமான் புறப்பாடாகி அவர் பிறந்த வீட்டிற்கு எழுந்தருகிறார். தொடர்ந்து மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறும்.
மதுரையில் இருந்து திருவாதவூர் செல்ல பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எண்: 66 பி, எச், ஜே. எம் ஆகிய பேருந்துகளும், மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் செல்லும் பேருந்திலும் (7, 7 ஏ, 7 சி) பயணிக்கலாம். ஒத்தக்கடையில் இருந்து மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-14 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை நண்பகல் 1.18 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பூசம் காலை 10.03 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். சிதம்பரம், ஆவுடையார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் வீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டர் பரங்கி நாற்காலியில் புறப்பாடு, கண்டனூர் ஸ்ரீ மீனாட்சியம்மன் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-பாராட்டு
கடகம்-அமைதி
சிம்மம்-நன்மை
கன்னி-லாபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- அமைதி
மகரம்-பரிவு
கும்பம்-பணிவு
மீனம்-ஓய்வு
- வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன.
- அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
சுக்ரீவரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். இவர் வானரப் படையில் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். வனவாசத்தின்போது சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்தான். இதனை அனுமன் மூலமாக அறிந்த ராமர், உடனே ராமேஸ்வரம் கடல் முனையை அடைந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்று யோசித்தார். கடல் மீது ஒரு பாலம் கட்டினால் மட்டுமே சீதை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்த ராமர், பாலம் கட்ட திட்டமிட்டார். சுக்ரீவனின் வானர படையின் உதவியுடன் பாலம் கட்டும் பணியை தொடங்கினார்.
வானர படைகள், பாறைகளை எடுத்து வந்து அனுமனிடன் கொடுக்க அனுமன் அதை கடலில் போட்டார். அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஆனால் வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
இதைப் பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், ''அண்ணா, அனுமன் உள்பட மற்ற வானரப் படைகள் போடும் எல்லா பாறைகளும் நீரில் மூழ்குகின்றன. ஆனால் நளன் போடும் பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன. இதற்கு என்ன காரணம்'' எனக்கேட்டார்.
அதற்கு ராமர், ''ஒரு சமயம் வனத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறைவனை தியானித்தால் இறை அருள் அதிக பலன் தரும் என்பதால் தண்ணீரில் மூழ்கியபடி தவம் மேற்கொண்டார். அப்போது சிறுவயதில் இருந்த வானரமான நளன், அவர் மீது விளையாட்டுத்தனமாக கற்களை வீசி எறிந்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர், ''நீ எறியும் கற்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்'' எனக் கூறி மீண்டும் தவத்தை தொடர்ந்தார். அப்போது அந்த மகரிஷி சாபமாக அளித்த வார்த்தை இன்று நமக்கு பாலம் கட்ட உதவியாக மாறி இருக்கிறது'' என்றார்.
நளனின் உதவியுடன் பாலம் சீக்கிரமாகவே கட்டப்பட்டது. பின்பு ராமர், ராவணனிடம் போர்புரிந்து சீதையை மீட்டார்.






