என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 7.9.2025 to 13.9.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- ரிஷபம் பொருளாதார தேவைகள் நிறைவேறும் வாரம்.
- கடகம் புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம்.
மேஷம்
கனவுகள் நனவாகும் வாரம். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் முடிந்த உடன் கேதுவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். குடும்பத்தை வழி நடத்தக் கூடிய திறமை, துணிச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த மாற்றங்கள் உருவாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகி அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறைய துவங்கும். உற்றார் உறவினர்கள் உங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவார்கள். தடைபட்ட முன்னோர்களின் சொத்துக்கள் தேடி வரும். திருமணம் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும்.
புதிய நிலம் வாங்குவது வீடு கட்டுவது போன்ற புண்ணிய பலன்கள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அவப்பெயர்கள் விலகும். புண்ணிய காரியங்கள் செய்து மகிழக்கூடிய நேரம் உள்ளது. சின்னத்திரை பெரிய திரை கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிக்க நன்மைகள் கூடும்.
ரிஷபம்
பொருளாதார தேவைகள் நிறைவேறும் வாரம். தனம், வாக்கு ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் கூடும். வீண் வாக்குவாதத்தால் பிரிந்த குடும்ப உறவுகள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள். சுய ஜாதக ரீதியான வாக்கு தோஷம் அகலும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, லாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆசைகள் தேவைகள் நிறைவேறுவதால் குதூகலமாய் இருப்பீர்கள். பெண்களுக்கு மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும்.
தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள். சிலருக்கு எதிர்பாராத தலைமைப்பதவி கிடைக்கலாம். திருமண ஏற்பாடுகள் துரிதமாகும். குடும்பத்திற்கு மருமகள், மருமகன் வரும் நேரமிது. ஆரோக்கிய குறைபாடு அகலும். தினமும் லலிதா சகஸ்கர நாமம் படித்து மகா லட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் சூரியன், புதன், கேது சேர்க்கை. விரும்பிய மாற்றங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன் நம்பிக்கையும் அதிகரிக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் நடக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாகும்.
சகோதர சகோரிகளின் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடியும். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் மத்தியஸ்தர்களால் சுமூகமாகும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு வேலையாட்களால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைக்கும். திருமண முயற்சியில் தடை, தாமதம் நிலவும். வாக்குகள் பலிதமாகும். தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருப்பார்கள். தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் படித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம். ராசியில் 4,11-ம் அதிபதி சுக்ரன். வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக் தகுந்த சூழ்நிலை வந்து சேரும். பணவரத்து அதிகமாகி, சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். புதிய வீடு கட்ட திட்டம் போடுவார்கள். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துகள் சேரும். சிலருக்கு சொத்துக்கள் மதிப்பு உயரும். விவசாயம், கால்நடை வளர்ப்பு , பண்ணையாளர்களின் வருமானம் அதிகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
மாமனாரால் ஏற்பட்ட மனச்சங்கடம் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் உண்டாகும். 8.9.2025 அன்று மதியம் 2.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். ராசிக்கு 8-ம் இடத்தில் 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடப்பதால் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கவும்.
சிம்மம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 7-ல் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்கள் நண்பர்களால் பண இழப்பு ஏற்பட்டு மன நிம்மதி குறையும். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். வார்த்தைகளால் உறவுகளை காயப்படுத்தக்கூடாது.
திருமண முயற்சிகள் காலதாமதமாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். பிள்ளைகளின் நடவடிக்கையை நன்றாக கண்காணிக்க வேண்டும்.
8.9.2025 அன்று மதியம் 2.29 மணி முதல் 10.9.2025 அன்று மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நியாயமற்ற பிரச்சினை என்றாலும் நிதானமாகப் பேசுங்கள். சிலருக்கு வாக்கு வாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் சிவபுராணம் படிக்கவும்.
கன்னி
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் பகவான் வார இறுதியில் இரண்டாம் இடத்தை நோக்கி செல்கிறார். ராசிக்கு சனி செவ்வாய் சம்மந்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். பல கால முயற்சிகள் வெற்றி பெறும். ராசிக்கு 6-ம் இடத்தில் கிரகணம் நடப்பதால் வாரத்தின் ஆரம்பத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் நடந்தாலும் வார இறுதியில் நிலைமைகள் அனைத்தும் சீராகிவிடும்.
முக்கிய குடும்ப பிரச்சினைகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மானியத்துடன் கடன் கிடைக்கும். வீண் செலவால் மனசஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள்.
10.9.2025 அன்று மாலை 4.03 மணி முதல் 12.9.2025 அன்று மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முக்கிய பணிகளை ஒத்திப்போடும் போது மன சஞ்சலமின்றி நிம்மதியாக செயல்பட முடியும். எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். தினமும் சக்தி கவசம் படித்து அம்பிகையை வழிபடவும்.
துலாம்
ஆரவாரம் மிகுந்த வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். பங்குச்சந்தை லாபம் மற்றும் உழைக்காத வருமானம் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். ராசிக்கு 5ல் சந்திர கிரகணம் நடக்க உள்ளது.
எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். 12.9.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும்.தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படித்து அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
விருச்சிகம்
சாதகமும் பாதகமும் நிறைந்த வாரம். ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கியாதிபதி சந்திரன் ராகுவால் கிரகணப்படுத்தப்படுகிறார். உலவுகின்ற கிரக நிலை ஓரளவு சுமாராக உள்ளது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் துணிச்சலும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். கடுமையான உழைப்பால் சமாளிப்பீர்கள்.
கடன், ஆரோக்கியம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு மனம் குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம். வியாபாரத்தில் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். விரும்பிய அரசு உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உரிய வழிபாடு செய்து பித்ருக்களை வழிபட்டால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
தனுசு
புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 3-ம்மிடமான வெற்றி ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்தில் சந்திரன், ராகு சேர்க்கை ஏற்பட்டு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இதற்கு குருப்பார்வை இருப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை மன மகிழ்ச்சி கூட்டும். பல புண்ணியத் ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தினமும் குரு கவசம் படித்து தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். ராசிக்கு சுக்கிரன் பார்வை உள்ளது. இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம், அழகிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.
சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சுய ஜாதக ரீதியான தோஷங்களால் ஏற்பட்ட திருமண தடை விலகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். தினமும் சிவபுராணம் படித்து நவகிரகங்களை வழிபடுவது சிறப்பாகும்.
கும்பம்
மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய வாரம். ராசியில் ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார். இது சந்திர கிரகண தோஷ அமைப்பாகும். இதற்கு தன லாபாதிபதி குருவின் பார்வை இருப்பது ஓரளவு சாதகமான பலனை தரும். எனினும் மனசுக்குள் பய உணர்வு மிகுதியாக இருக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விட்டால் பாதிப்புகள் சற்று குறைந்து விடும். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அலைச்சல், அலுப்புகள் அதிகமாகும்.
பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும். தாய், தாய் வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய வாரம்.
மீனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் பார்வையால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சினைகள் தாமாக சீராகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும்.
ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தாய் வழியில் திரண்ட சொத்துக்கள் நகைகள் பணம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். ஜாதகர் மற்றும் தாயின் உடல்நிலையை சீராக பராமரிக்க வேண்டும்.
வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.






