என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி திருவிழா"

    • போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
    • கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.

    வேளாங்கண்ணி மாதா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 3 அதிசயங்கள் முக்கியமானவை. அவை பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி அளித்தது. மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம், புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகியவை ஆகும்.

    இவற்றில் மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்தது, புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகிய 2 அதிசயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம்

    பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா அளித்த காட்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் 2-வது காட்சி வேளாங்கண்ணி சிற்றூரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.

    தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக முகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.

    அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். "மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக" என்றார். ஆனால் அந்த சிறுவனோ தான் நடக்க முடியாதவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையை பார்க்கிறான்.

     

    அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை "மகனே எழுந்து நட" என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார். அந்த சிறுவனின் கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்த சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது. வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னான்.

    அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அதற்கு முந்தைய இரவில் அந்த கத்தோலிக்க கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார். உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.

    புயலில் சிக்கிய கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாள் அன்னை

    கி.பி. 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் 3-வது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவில் இருந்து போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    வழியில் கடுமையான புயலில் அந்த கப்பல் சிக்கியது. அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

    நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என வேண்டினர். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோஷம் குறைய தொடங்கியது.

    அவர்கள் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் கரை வந்து சேர்ந்ததற்காக கன்னி மரியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்கள்.

    போர்த்துக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அங்கு வந்து அன்னையை வணங்கி செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டிய ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப்பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.

    அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்ைக நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.

    அவை வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவா காவியங்களாக வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தில் இன்றும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

    அன்னை ஆரோக்கிய மாதா நிகழ்த்தி காட்டிய அதிசயங்களால் வேளாங்கண்ணி ஆலயம் உலகம் போற்றும் பேராலயமாக விளங்குகிறது.

    • கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.
    • வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகே உள்ள வங்காள விரிகுடா கடல், பக்தர்களால் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.

    பாவங்கள் போகும்

    இந்த கடல் பகுதியில் நீராடுவதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய் வாழ்வில் நல்வழி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும் இந்த கடலின் நீர் புனிதமானதாக கருதப்படுவதால் பலர் அதை அருந்தி, தங்கள் நோய்கள் நீங்கி குணமடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், கடலோரத்தில் அமைந்துள்ளதால், கடலும் புனிதத்தன்மையுடன் கருதப்படுகிறது.

    புதிய அனுபவம்

    இந்த கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள். அதனை கண்கூடாகவே கண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலின் அருகே அமர்ந்து, அன்னை ஆரோக்கிய மாதாவை மனதார பிரார்த்தனை செய்து வழிபடுவது ஒரு புதிய அனுபவமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடலின் அமைதியான சூழல், பக்தர்களுக்கு ஒரு நிம்மதியான அனுபவத்தை தருகிறது.

    • இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது.
    • உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.

    வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது.

    இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது. சென்னையில் இருந்து 350 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    17-ம் நூற்றாண்டின்...

    17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.

    அதிசய சக்திகள்

    இங்குள்ள புனித ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் இத்தலத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

    பிரச்சினைகள் தீரும்

    கல்வி, செல்வம், திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தீராத மன கஷ்டம் மற்றும் நோய்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு வந்து அன்னையை மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர் அருள்பாலித்து தீர்த்து வைக்கிறார் என்பது காலம் கடந்த நம்பிக்கை ஆகும். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அன்னையை தரிசித்துவிட்டு வீடு திரும்புங்கள். உங்கள் கவலை அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிறையும்.

    • மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
    • திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.

    பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.

    பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.

    மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.

    மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.

    காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.

    மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.

    மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.

    ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.

    ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.

    ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.

    ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.

    ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.

    ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.

    ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி

    செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.

    செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.

    அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.

    நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.

    டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.

    டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.

    டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.

    டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா

    மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    • வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
    • சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூரு-பெங்களுரு, குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, ஆடி அம்மன் சுற்றுலா என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.00 மணிக்கு பேருந்து சென்னை வந்தடைகிறது.

    • சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.
    • குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பஸ்கள் 25-ந்தேதி (நாளை) முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

    மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பயணிகள் தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் முன்பதிவு செய்து, வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இச்சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முகூர்த்த நாள், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி நடைபெறுகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவார்கள்.

    இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 8-ந்தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலய த்துக்கு வருகிற 8-ந்தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பெரம்பூர், எண்ணூர், தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த நாட்களில் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×