என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம் பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    கோவை வெரைட்டிஹால் ரோடு காவல்துறை குடியிருப்பு பகுதியில் ஸ்ரீகாவல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    நேற்றுமுன்தினம் 2-ம், 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்கள், யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் முருகேசன், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அருள் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை அனைத்து காவல் துறை குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
    • பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள் - பலன்கள்

    அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்

    துணி- ஆயுள் அதிகமாகும்

    தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீபம்- கண்பார்வை தெளிவாகும்

    அரிசி- பாவங்களை போக்கும்

    நெய்- நோய்களை போக்கும்

    பால்- துக்கம் நீங்கும்

    தயிர்- இந்திரிய சுகம் பெருகும்

    பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்

    தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்

    வெள்ளி- மனக்கவலை நீங்கும்

    பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

    தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்

    நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்

    பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

    பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

    பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    • ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
    • புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பீமன் என்ற மண் பாண்ட தொழிலாளி வசித்துவந்தார். பெருமாள் பக்தரான இவர், ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.

    ஒருமுறை, "பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?" என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீதமிருக்கும் மண்ணை சிறுசிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த தொழிலாளியின் இல்லத்திற்கு சென்ற அரசர், அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்தார். ஆனால் அதை ஏற்காமல், பெருமாள் பணியை செய்துவந்த அவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன்காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி பிற்பகல் 2.01 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : பரணி மாலை 4.30 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று மகாபரணி, கார்த்திகை விரதம் (இன்று பித்ரு கடன் இயற்றுதல் நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-பண்பு

    கடகம்-பரிவு

    சிம்மம்-செலவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- வெற்றி

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-தாமதம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.

    ரிஷபம்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும்.

    மிதுனம்

    மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

    துலாம்

    சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.

    தனுசு

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

    கும்பம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மீனம்

    அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயில் தேடிவரலாம்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர்.
    • தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருச்சி கே.கே.நகர் இந்திராநகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த 8-ந்தேதி தொடங்கின. அன்று மாலை ஆசார்யாள், அர்சகாள் (யஜமானாள்) அழைப்பு, பகவத் ப்ரார்த்தனை. மஹா ஸங்கல்பம், அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனம், க்ரஹப்ரீதி, ஆசார்ய வர்ணம், - ம்ருத்ஸங்கி ரஹணம், வாஸ்து சாந்தி, - அங்குரார்பணம், வேதப்ர பந்த பாராயணம் தொடக்கம் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

    மறுநாள் காலையில் 1-ம் கால் பூஜை, தீர்த்த - ஸங்க்ரஹணம் ரக்ஷா பந்தனம். சத்தி - யாகர்ஷணம், க்ருஹப்ரீதி, - யாத்ராதானம் மஹா கும்பம் (பெருமாள்உத்ஸவர்) ப்ரவேசம், துவாரபூஜை அக்னி மதனம், அக்னி யாகசாலை ப்ரதிஷ்டை, நித்யஹோமம் ஆகியவை நடைபெற்றன. மதியம் பூர்ணாஹுதி சாற்றுமுறை கோஷ்டியும் நடந்தன. 2-ம் காலம் மாலையில் துவாரபூஜை, கும்ப, மண்டல, பிம்ப பூஜைகள், நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). இரவு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி நடந்தது.

    நேற்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 3-ம் காலம் புண்யாஹ வாசனம் துவாரபூஜை, கும்ப மண்டல பிம்பபூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்.) மதியம் பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு புண்யாஹவாசனம், மூலவர், உத்ஸவர் விமானங்கள், ப்ராயச்சித்த ஸ்நபன கலச திருமஞ்சனம், பஞ்சகவ்ய அபிஷேகம். 6 மணிக்கு கோதோஹணம், பசுமாடு யாக சாலைக்கு கொண்டு வந்து பால் கறந்து ஹோமம் செய்தல் நடைபெற்றது..

    மாலை 6.30 மணிக்கு 4-ம் காலம் துவார பூஜை. கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமம் (சதுஸ்தான ஆராதனம்) ஷோடச, தத்வ, ந்யாஸ, ஹோமங்கள், சாந்தி ஹோமம். இரவு 8.30மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி, இரவு 9 மணிக்கு சயனாதி வாசம் நடைபெற்றது. இன்று (வியாழக் கிழமை) காலை 5.30 மணிக்கு 5-ம் காலம் விஸ்வரூபம், புண்யா ஹவாசனம், துவார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). மஹா பூர்ணாஹுதி, அந்தர்பலி, பஹீர்பலி யாத்ராதானம், க்ரஹப்ரீதி, தசதானங்கள், கும்ப உத்தாபனம், பெருமாளு டன் கடம் புறப்பாடும் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமானங்கள் ஸ்ரீராஜகோபுர, மூலவர், உத்ஸவர், பரிவாரங்கள் மஹா ஸம்ப்ரோஷ்ணம், விசேஷ ஆராதனம், ஆசீர்வாதம் வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தேவர் மலை கேசவன் மற்றும் திருச்சி சி.காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அ.ம.மு.க. மாநகர அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
    • சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.

    மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.

    பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.

    • நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
    • சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரராக மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் நந்தி எம்பெருமான் நெய்-நந்தீஸ்வரராக அருள் பாலிக்கின்றார். நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனி சிறப்பிடம் பெறுகின்றது.

    பஸ்ஸைவிட்டு இறங்கி இவ்வூருக்குள் நுழைந்தவுடன் நம் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோவில்தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்கள்) பெருமக்கள் பெருமுயற்சி செய்து பெரும்பணம் சேகரித்து இக்கோவிலை கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.

    நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு

    நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோவிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர்.

    இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர் என்றாலும் நெய் நந்தீஸ்வரரே இக்கோவிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார். அதனால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்த போதிலும் நந்திகோவில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.

    ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோவில் உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லையாம். ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் இவர்.

    கவியரசர் கண்ணதாசன் இவரை போற்றிப் பாடியுள்ளார்.

    * வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகின்றது.

    * நந்தி எம்பெருமானுக்கு "தன-ப்ரியன்" என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய்-நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    * வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்து ஊர்களில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகின்றது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை.

    *நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது (பொதுவாக இந்த அமைப்பு நந்தி எம்பெருமானின் தோற்றத்தில் இருப்பதில்லை).

    * நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கை பொருள். எனவே நெய் நந்தீஸ்வரரை பார்க்க வருகிறவர்கள் வரும்போது கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.

    நெய் - நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல்

    இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய்களோ பிரச்சனைகளோ தீர்ந்த பிறகு வெங்கல மணி ஒன்றும் பட்டுத்துண்டு ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி நெய்-நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    பிரதோச விழா

    நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.

    மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய்கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.

    பஸ் வசதி

    சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு சிட்டி பஸ்களும், தனியார் பஸ்களும் நிறைய உள்ளன.

    கோவில் திறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12 மணிவரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

    • மகாளய என்றால் கூட்டாக வருதல் என்பது பொருள்.
    • மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.

    மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

    இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    இந்த 14 நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

    ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

    • தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும்.
    • சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

    3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச்செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.

    8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

    10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...திருப்யத...திருப்யத என்று முடியும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காகப்பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.

    ரிஷபம்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். மாற்று இனத்தவரால் தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.

    கடகம்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    சிம்மம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டம் தீட்டுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களின்போது விழிப்புணர்ச்சி தேவை.

    துலாம்

    திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    விருச்சிகம்

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திட்டமிட்டபடியே சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

    மகரம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். வருமானம் திருப்தி தரும்.

    கும்பம்

    சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    மீனம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    ×