என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உக்ரைனுக்கு பொருளாதார உதவி வழங்குவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
    • தைவானுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலை குறைக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

    வாஷிங்டன்:

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வந்தன. ஆனால் சமீப காலமாக உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் குறைந்து வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு பொருளாதார உதவி வழங்குவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    மேலும் அரசு பணிகளுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேறவிடாமல் அங்குள்ள எதிர்க்கட்சிகள் தடுத்தன. இந்தநிலையில் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அதேசமயம் தைவானுக்கு வழங்கும் உதவியை அதிகரிக்க ஆதரவு கூடுகிறது. ஏனெனில் ரஷியாவை விட சீனாவே அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

    தைவானுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலை குறைக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல்
    • இருபக்கமும் சேர்ந்து பலி ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.

    ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.

    சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.

    இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    • எஸ்பி403 சட்டத்திற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன
    • பாகுபாட்டை களைய முன்னரே பல சட்டங்கள் உள்ளன என கவர்னர் தெரிவித்தார்

    அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் சாதிப்பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக கூறி, அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து இந்து மதத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான அயிசா வகாப் எனும் உறுப்பினரால் கடந்த மார்ச் 22 அன்று "எஸ்பி403" (SB403) எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

    ஆனால், இம்மசோதா சட்டமாவதை அம்மாநில கவர்னர் கெவின் நியூசாம் (Gavin Newsom) தனது "வீட்டோ" (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டார்.

    நேற்று, இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் சம உரிமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம். சாதி உள்ளிட்ட எந்த பாகுபாடுகளாலும் மக்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வகையில் பாதுகாக்க இங்கு ஏற்கெனவே பல வலுவான சட்டங்கள் உள்ளன. பாலினம், இனம், உடல் நிறம், மதம், பூர்வீகம் மற்றும் நாடு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக மக்களிடையே பாகுபாடு காட்டுவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய சட்டம் தேவையில்லை என கருதுவதால் நான் இதில் கையெழுத்திட போவதில்லை.

    இவ்வாறு கெவின் நியூசாம் தெரிவித்தார்.

    "சாதி எனும் சர்ச்சைக்குரிய வார்த்தையை வேண்டுமென்றே சேர்த்து, மக்களின் சிவில் உரிமைகளை தடுக்கும் முயற்சியாக இந்துக்களிடையே அச்சத்தையும் பிரிவையும் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை சட்டமாக்காமல் தடுத்ததன் மூலம் கவர்னர் நியூசாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறார்" என கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக அம்மாநிலத்தில் வாழும் தெற்காசிய மற்றும் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால், இச்சட்டத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்த ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) அமைப்பினர், சட்டசபை உறுப்பினர் வகாப், மற்றும் வேறு சில அமைப்புகள் தற்போதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
    • தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்

    நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.

    சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.

    இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    டிரம்ப் கூறியிருப்பதாவது:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.

    இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.

    • தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.
    • அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

    உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷியா - அமெரிக்கா மோதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் ரஷியாவில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷிய அரசு வெளி யேற்றியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த 2 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, எங்கள் தூதரக அதிகாரிகளை ரஷிய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது.

    அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

    • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது.
    • சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன.

    uவாஷிங்டன்:

    அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்திலும் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

    சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இரு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஜோ பைடன்-ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை தான் சந்திக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் சந்திப்பு குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடைபெற சாத்தியம் உள்ளது" என்றார்.

    வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியுபெங்யு கூறும்போது, "சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன. இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட வேண்டும். உறுதியான நடவடிக்கை களுடன் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தையை மேம்படுத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார். ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் ஜோபைடன்-ஜின்பிங் சந்திப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    • பக்ஸீ'ஸ் பெட்ரோல் நிலையங்களின் ஒப்பனை அறைகளின் தூய்மை பிரபலமானது
    • சைபர் செக்யூரிட்டி துறை அதிகாரிக்கு ப்ளக் பாயின்டில் ஏதோ வித்தியாசமாக இருப்பது தெரிந்தது

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள க்ளூட் (Clute) நகரில் 1982ல் தொடங்கப்பட்டு பல மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி நிறுவனம், புகழ் பெற்ற பக்ஸீ'ஸ் (Buc-ee's). இந்நிறுவனம் மின்சார வாகன சார்ஜர்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள், குளியலறை சாதனங்கள், உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் என பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    பக்ஸீ'ஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஒப்பனை அறைகளின் சுத்தமும், பராமரிக்கப்படும் முறையும், தூய்மையும் உலக புகழ் வாய்ந்தது. இதன் நிறுவனர் ஆர்ச் ஆப்லின் (Arch Aplin).

    இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் வாசெக் (Don Wasek). இவரது மகன், 28 வயதான மிட்செல் வாசெக் (Mitchell Wasek).

    டான் வாசெக்கிற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் ட்ராவிஸ் எனும் ஏரிக்கரையில் மிக பெரிய பங்களா உள்ளது. அங்கு ஒரு அழைப்பின் பேரில் ஆண்கள் பெண்கள் நிறைந்த ஒரு குழு சென்றது. அவர்களை மிட்செல் வாசெக் உபசரித்தார். அவர்கள் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர்.

    அக்குழுவில் ராணுவத்தில் சைபர் செக்யூரிட்டி துறையில் பணிபுரியும் ஒருவரும் உடனிருந்தார். தனது செல்போனை சார்ஜ் செய்ய ப்ளக் பாய்ன்ட்டுகளை தேடிய அவருக்கு அதில் வித்தியாசமாக ஏதோ ஒன்று தெரிந்தது. அவர் அதனை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தார். அதன் வழியாக குளியலறையில் ஒரு கேமிரா மறைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 

    இதனையடுத்து அவர், அந்த கேமிராவை யாருக்கும் தெரியாமல் தன்னுடன் எடுத்து சென்றார். அதனை வெளியில் சென்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதில் மைக்ரோ கார்டு எனப்படும் வீடியோக்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் சாதனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் ஆய்வு செய்ததில் அவரும் அவருடன் வந்த பெண் உட்பட அந்த இல்லத்திலும், டல்லாஸ் நகரில் மிட்செல்லின் வீட்டிலும் எடுக்கப்பட்ட 13க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் குளியலறை, படுக்கையறை மற்றும் ஒப்பனை அறை நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் இருந்தன.

    இதையடுத்து, டல்லாஸ் நகர காவல்துறையிடம் இது குறித்து புகார அளிக்கப்பட்டது. அவர்கள் கேமிரா மற்றும் மைக்ரோகார்டு ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் 2021லிருந்து பல முறை இத்தகைய சம்பவங்களை மிட்செல் படம் பிடித்து பதிவு செய்துள்ளார் என தெரிய வந்தது.

    இதனையடுத்து, மிட்செல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது அந்நாட்டு சட்டப்படி 28 குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தூய்மைக்கு பெயர் பெற்ற நிறுவனத்தின் அதிபரின் மகன் ஈடுபட்ட கீழ்தரமான செயல் டெக்ஸாஸில் பரபரப்பாக விமர்சிக்கப்படுகிறது.

    • பிரையன்னாவிற்கு ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை கிடைத்து வந்தது
    • ஆசிரியைகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார் பிரையன்னா

    அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).

    முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியையான பிரையன்னா, ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு இருந்த கல்வி கடன் மற்றும் சில பொருளாதார சிக்கல்களால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க அவர் கணவருடன் சேர்ந்து ஆபாச படங்களில் நடித்து, அவற்றை லண்டனை சேர்ந்த ஒரு பிரபல வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இதன் மூலம் பல ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்தொடர்ந்தனர். இதில் அவரது வருவாய் அதிகரித்தது.

    பிரையன்னாவிற்கு மாதாமாதம் சுமார் ரூ.6 லட்சம் ($8000) அதிகப்படியாக கிடைத்து வந்தது.

    இந்நிலையில், ஒரு பள்ளி ஆசிரியையான அவரை வீடியோவில் அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், அம்மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் இது குறித்து புகாரளித்தார். இதனையடுத்து, அவரை அத்துறையும், அவர் பணிபுரிந்த பள்ளி நிர்வாகமும் விசாரணை செய்தது.

    இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் ஆலோசித்து வந்தது.

    ஆனால், பிரையன்னா தற்போது தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது முடிவை குறித்து அவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் உணர்ச்சிமயமாக விவாதிக்கப்படுகிறது.

    பிரையன்னா அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

    நான் கல்வி கற்று கொடுத்த மாணவர்கள் இச்செய்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்னால் பள்ளிக்கு கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியை பணிக்கு நான் திரும்பினால் அனைத்தும் முன்பு போல் இருக்காது என நான் அறிவேன். ஒரு மதிப்பு வாய்ந்த முன்னுதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நான் மாணவர்களுக்கு பாட திட்டத்தில் உள்ளதை மட்டுமே பயிற்றுவித்தேன். என்னுடைய சித்தாந்தங்கள் எதையும் அவர்களிடம் புகுத்தவில்லை. என்னை குறித்த மக்களின் எண்ணங்களை நான் கட்டுப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தில் ஒரு பெண் காவல் அதிகாரி அதிக வருமானத்திற்காக இதே போன்று வலைதளத்தில் மாடலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை பணி நீக்கம் செய்ய மக்கள் கோருவதும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பலர் உறங்கி விட்டனர்
    • தற்போது வரை அப்பெண்ணால் சரி வர பயமின்றி உறங்க முடியவில்லை

    கடந்த 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) மாநில க்ளீவ்லேண்டு (Cleveland) நகரிலிருந்து கலிபோர்னியா (California) மாநில லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    மூவர் அடுத்தடுத்து அமரும் இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டதால், அதில் அமர்ந்து வந்த அவர் பயணத்திற்கு இடையே உறங்கி விட்டார். சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பல பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். மேலும், விமானத்தில் இருக்கைகளின் முதுகுப்பகுதி உயரமாக வடிவமைக்கப்படுவதால் முன் வரிசையிலோ பின் வரிசையிலோ என்ன நடக்கிறது என்பது சக பயணிகளுக்கு தெரிவதில்லை.

    அப்பெண்ணிற்கு அடுத்த இருக்கையில், 50 வயதான மொஹம்மத் ஜாவத் அன்சாரி என்பவர் அமர்ந்திருந்தார். அப்பெண் ஆழ்ந்து உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.

    உடனடியாக விழித்து கொண்ட அப்பெண் ஆடைகளை சரி செய்து கொண்டு, அன்சாரியின் கையை தள்ளி விட்டு, அந்த இருக்கையில் இருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றார். மேலும், இது குறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகாரளித்தார்.

    விமானம் தரையிறங்கியதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    இந்த அத்துமீறலால் அப்பெண் அதிர்ச்சியடைந்து பயந்து விட்டார். அந்த விமான பயணம் முழுவதும் அவர் அழுது கொண்டே வந்தார். இதனை பயணத்தில் இருந்த பல பயணிகள் நேரில் கண்டு சாட்சியமும் அளித்தனர். அன்சாரியின் இந்த செயலால் தற்போது வரை அந்த பெண்ணிற்கு சரிவர உறங்க முடியவில்லை.

    ஆனால், அன்சாரி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்சாரிக்கு சுமார் ரூ. 35 லட்சம் ($40,000) அபராதமும், 21 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

    • உறவுக்கார ஆணை, அந்த தந்தை துப்பாக்கியால் சுட்டார்
    • அவர் சுட்டதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம்.

    நேற்று அங்குள்ள விட்டேகர் அவென்யு (Whitaker Avenue) 7500 பிளாக்கில் ஒரு வீட்டில் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு வீடியோ கேம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் அவர்களின் ஒரு உறவுக்கார ஆணும் ஈடுபடும்படி ஆனது.

    வாக்குவாதம் சண்டையாக மாறியதில் அந்த 18 வயதிற்கு உட்பட்டவரும், உறவுக்கார ஆணும் வேறு ஒரு அறைக்கு சென்று விட்டனர். தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே அவர்களை தேடி கோபத்துடன் வந்த தந்தை, அந்த உறவுக்கார ஆணை, தன் துப்பாக்கியால் சுட்டு விட்டு அறைக்கு வெளியே சென்றார்.

    உடனடியாக சுடப்பட்ட அந்த ஆணும், அந்த 18 வயதிற்குட்பட்டவரும் அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ அழைத்தனர்.

    காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதிகாரிகள் வந்த போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த தந்தை, அதிகாரிகளை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் 2 அதிகாரிகளுக்கு கால்களிலும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவுக்கார ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    • 6 மாத காலத்திற்கு $20,793 வாடகைக்கு இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்
    • வேறு இடத்திற்கு செல்ல $1 லட்சம் டாலர் அலெக்ஸாண்டரிடம் எலிஸபெத் கோரினார்

    அமெரிக்காவில் வசித்து வரும் புகழ் பெற்ற பல் மருத்துவர் அலெக்ஸாண்டர் ஜொவனோவிக் (Aleksandar Jovanovic). இவர், தனக்கு சொந்தமான பங்களா ஒன்றை செப்டம்பர் 2021ல் தங்கும் விடுதி போல் குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விட எண்ணி ஏர்பிஎன்பி (Airbnb) வலைதளத்தில் விளம்பரமும் செய்தார்.

    இதனை கண்டு இவரை தொடர்பு கொண்ட எலிஸபெத் ஹர்ச்ஹார்ன் (Elizabeth Hirschhorn) என்பவருக்கு 6 மாத காலத்திற்கு சுமார் ரூ.17,31,580 ($20,793) வாடகைக்கு விட சம்மதித்தார். இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு முறை பங்களாவில் ரிப்பேர் வேலை செய்ய அலெக்ஸாண்டர் சென்ற போது, அது சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டார். அதனை மீண்டும் சரி செய்யும் வரை ஒரு ஓட்டலில் தங்குமாறும் அதற்காகும் செலவை கொடுப்பதாகவும் எலிஸபெத்தை அவர் கேட்டு கொண்டார். ஆனால், அதற்கு எலிஸபெத் மறுத்தார்.

    அடுத்ததாக தனது வீட்டில் வந்து தங்குமாறு அலெக்ஸாண்டர் கேட்க, அதற்கும் எலிஸபெத் மறுத்தார்.

    2022 ஏப்ரலில் அவர்களது ஒப்பந்தம் காலாவதியானது. ஆனால், எலிஸபெத் பங்களாவை காலி செய்ய மறுத்தார்.

    வீட்டை மறுசீரமைப்பு செய்ய விரும்பிய அலெக்ஸாண்டர், கட்டிடங்களின் பாதுகாப்பு துறையை அணுகி விண்ணப்பம் செய்து, வீட்டை காலி செய்யுமாறு எலிஸபெத்திற்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

    உடனடியாக அதிகாரிகளை அணுகிய எலிஸபெத் தன்னை அலெக்ஸாண்டர் சட்ட விரோதமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் தான் வெளியேற மறுகுடியிருப்பிற்கான கட்டணமாக சுமார் ரூ.83 லட்சம் ($100,000) அலெக்ஸாண்டர் தர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

    இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பங்களாவை ஆய்வு செய்து அதில் பல கட்டிட வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு குடியேற்றத்திற்கு தகுதியானதுதான் என நிரூபித்து விட்டுத்தான் அலெக்ஸாண்டர் வெளியேறும் உத்தரவை அனுப்ப முடியும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதனால் எலிஸபெத் மீது அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்தார்.

    "அலெக்ஸாண்டர் தனது பங்களாவை வாடகைக்கு விடுவதற்கு முறையான பதிவுகளை பெறாமலேயே வாடகைக்கு விட்டுள்ளார். அதில் அனுமதி பெறாமல் ஒரு ஷவர் வேறு நிறுவி உள்ளார். பதிவு பெறாமல் வாடகைக்கு விட முயன்றது சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் முறையில் அடங்கும். அலெக்ஸாண்டர் முறையான பதிவு பெற முயற்சிக்க வேண்டும். அவர் தவறுகளை சரி செய்து வழிமுறைகளை சீராக்கும் வரை எலிஸபெத் அங்கு வசிக்கலாம்" என வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இது வீட்டை மிக சுலபமாக வாங்கும் ஒரு வழிமுறை என அலெக்ஸாண்டர் தரப்பில் பலர் விமர்சிக்கின்றனர்.

    வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர் வீட்டை காலி செய்ய மறுத்து, காலி செய்ய வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகையை கேட்பதும், நீதிமன்றத்தில் பல வருடங்கள் வழக்குகள் நடைபெறுவதும், இதுவரை இந்தியாவில் மட்டுமே அதிகம் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவிலும் இது தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • மஸ்க், 2022ல் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார்
    • மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு விளம்பர நிறுவனங்கள் தயங்குகின்றன

    அமெரிக்காவில் 2006ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும் வலைதளமான இதில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வார்த்தைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகள் என பல வடிவங்களில் பதிவிடலாம்.

    உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம், 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அந்நிறுவனத்தை முன்னிறுத்த பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வரும் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார்.

    அவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம், மாதாமாதம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு 55 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. விளம்பர நிறுவனங்கள் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் சிந்திப்பதால் விளம்பரங்களை தர தயங்குகின்றனர் என தெரிகிறது.

    அமெரிக்காவில் பெறப்படும் விளம்பர வருமானம், 2021 டிசம்பரில் இருந்ததை விட 2022 டிசம்பரில் 78% குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை மொத்த விளம்பர வருமானம் ஆண்டுக்காண்டு 60 சதவீதம் குறைந்துள்ளது.

    விளம்பர வருவாய் குறைந்து வருவதை ஓப்பு கொண்ட எலான் மஸ்க் ஒரு சில சமூக ஆர்வலர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

    தற்போதைய தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோ எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பர நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் எக்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி விட்டதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து எக்ஸ் லாபம் ஈட்ட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

    ×