என் மலர்tooltip icon

    உலகம்

    • பணக்குவியலின் மீது தொழிலதிபரின் கையை பிடித்தபடி காதலி நடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
    • பயனர்கள் பலரும் தொழிலதிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பணக்கட்டுகளை கம்பளமாக விரித்து, அதன் மீது தனது காதலியை நடக்க வைத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    'மிஸ்டர் நன்றி' என்ற பெயரில் பிரபலமானவராக அரியப்படும் செர்ஜி கோசென்கோ என்பவர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தொழிலதிபரின் காதலி ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது பணக்கட்டுகளை படிக்கட்டுகளாக அடுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் கம்பளம் போன்று பணக்கட்டுகளை விரித்து வைத்திருக்கும் காட்சிகள் உள்ளது.

    அந்த பணக்குவியலின் மீது தொழிலதிபரின் கையை பிடித்தபடி காதலி நடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 4.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தொழிலதிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என ஒரு பயனரும், இது மிகவும் மோசமானது, பணத்தை அவமதிப்பது வெட்கக்கேடானது என சில பயனர்களும் பதிவிட்டுள்ளனர்.

    • கொல்லப்பட்டுவிட்டதாக சிங்கள ராணுவம் அப்போதே அறிவித்தது.
    • உயிருடனேயே இருக்கிறார் என்றும் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இலங்கையில் தனித்தமிழ் நாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் இயக் கத்தின் தலைவர் உலகத் தமிழர்களால் மாவீரன் என்று அழைக்கப்படும் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்டப்போரில் கொல்லப்பட்டுவிட்டதாக சிங்கள ராணுவம் அப்போதே அறிவித்தது.

    ஆனால் தமிழ் ஈழ ஆர்வலர்கள் சிலர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை என்றும் இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இருந்து வெளியேறிய அவர் தற்போது வரையில் உயிருடனேயே இருக்கிறார் என்றும் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாகரனை போன்று அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகாஆகியோரும் உயிருடனேயே இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விடு தலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பொட்டு அம்மானும் உயிருடன்தான் இருக்கிறார் என்கிற பர பரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவில் தலைவராக இருந்த பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக அவரது தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பொட்டு அம்மானின் தற்போதைய புகைப்படத்தை தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவ ரான வினயரசு வெளியிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, `பொட்டு அம்மானின் தற்போதைய புகைப்படம் உலகத் தமிழர்களால் பரப்பப்பட்டு வருகிறது. அது எங்கு, எப்போது எடுக்கப்பட்ட படம்? என்பது தெரிய வில்லை. பொட்டு அம்மானை பொருத்த வரையில் அவர் எப்போதும் முகத்தை சற்று மேலே உயர்த்தி தான் பார்ப்பார். இந்த புகைப்பட மும் அது போன்று தான் உள்ளது என்றார்.

    இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது பிரபாகரனுடன் பொட்டு அம்மானும் இலங்கையில் இருந்து அவருடன் வெளியேறிவிட்டதாகவே தற்போது தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

    மூன்று வாகனங்களில் பிரபாகரன் குடும்பத்தினர் தப்பி சென்றதாகவும் அவர்களோடு பொட்டு அம்மானும் சென்று விட்டதாகவும் புதிய தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கூறும் போது, `பொட்டு அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தலைவராக பொறுப்பேற்ற பிறகு புலனாய்வு பிரிவு பலமானது.

    பிரபாகரனின் மெய்க்காப்பாளராகவும் பொட்டு அம்மான் பணிபுரிந்துள்ளார். அவரை பற்றி இதற்கு முன்னரும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016-ம் ஆண்டில் இருந்து பொட்டு அம்மான் தமிழ கத்தில் பதுங்கி இருந்து ரகசிய பெயருடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால் இதனை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது என்றும் கூறி உள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பினர் அனைவருமே ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிவரும் நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தொடர்ந்து அந்த அமைப்பில் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மானும் உயிரோடு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் காரணமாக இலங்கையைச் சேர்ந்த உளவு பிரிவினரும் உஷாராகி கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.
    • வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது.

    சராசரி உயரத்தைவிட அதிக உயரம் கொண்டவர்கள் மற்றவர்களால் அதிகம் கவனிக்கப்படுவார்கள். அந்த வகையில் சீனாவை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் 7.3 அடி உயரத்துடன் கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஜாங்ஜியு என்ற பெயர் கொண்ட அந்த வீராங்கனை சீன தேசிய அணிக்கான 18 வயதிற்குட்பட்டோருக்கான பிபா மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனார். 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.

    அந்த வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் அந்நாட்டு அரசுடன் ஏற்பட்ட ஒப்ந்தம் காரணமாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜூலியன் அசாஞ்சே சுதந்திரமாக நாடு திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி மேத்யூ மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், ஜூலியன் அசாஞ்சே பற்றி பேசும் போது அவரது நடவடிக்கைகள் எங்களது கூட்டணியை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஆப்கனிஸ்தான், ஈராக் என அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

    15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை உலகம் மறந்துவிட்டது. அவற்றை நினைவுகூறும் போது, விக்கிலீக்ஸ் தான் முதன்முதலில் அமெரிக்க ஆவணங்கள், ரகிசய விவரங்கள் உள்ளிட்டவைகளை பொது வெளியில் கசியவிட்டது. அவற்றை உலகமே பார்க்கட்டும் என்று அவ்வாறு செய்தது. இதன் காரணமாக அரசுடன் நேரடி தொடர்பில் இருந்த ஏராளமான அதிகாரிகள் வெளிச்சத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் செய்த சம்பவங்கள் அமெரிக்க தேர்தலில் ரஷிய உளவுத்துறை தலையிட வழிவகுத்தது, என்று தெரிவித்தார். 

    • நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

     


    தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் அசாதாரண சூழல் உருவானது.

    இதையடுத்து, கென்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், நிதி மசோதா 2024-இல் உள்ள அம்சங்கள் குறித்து தொடர் பேச்சுவார்த்தை மற்றும் கென்ய மக்களின் குரலை கேட்டேன். இதைத் தொடர்ந்து அந்த மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பேசிவிட்டனர். மசோதா குறித்து நாடுமுழுக்க ஒருமித்த கருத்து நிலவியது. இதன் காரணமாக உயிரிழப்புகள், பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டதோடு அரசியலமைப்பு இழிவுப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். 

    • பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.
    • சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் குல்பீர் கவுர் (வயது 43). இவருடைய மனைவி ஹர்மன்பீரித் கவுர் (31). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்கள் அங்குள்ள நகரில் மளிகை கடை மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இந்தியாவில் இருந்து தன்னுடைய உறவினர் மகனான 18 வயது நிரம்பாத சிறுவனை அமெரிக்கா தம்பதி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா அழைத்து வந்துள்ளனர். அவனை இங்கு பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைப்பதாக அவருடைய உறவினர்களிடம் பொய் சொல்லி ஆசை காட்டி சிறுவனை கூட்டி வந்துள்ளனர்.

    அமெரிக்கா வந்தவுடன் அந்த சிறுவனின் பாஸ்போர்ட்டை வலுகட்டாயமாக பிடுங்கி கொண்டு தாங்கள் நிர்வகித்து வந்த பெட்ரோல் பங்க் மற்றும் மளிகை கடையில் வேலை பார்க்க விட்டுள்ளனர். தினமும் 17 மணி நேரம் வேலை, சரியான உணவு கொடுக்காமல் வேலை வாங்கி உள்ளனர்.

    சுமார் 3 ஆண்டுகளாக விடுமுறை எதுமின்றி கொத்தடிமைபோல தம்பதியிடம் அந்த சிறுவன் வேலை பார்த்துள்ளான். வீடியோ கால் மூலம் தனது பெற்றோரிடம் அந்த சிறுவன் பேச முயற்சித்ததையும், தனது மகனை பார்க்க வேண்டும் என அவனுடைய பெற்றோரின் விருப்பத்தையும் ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்துள்ளனர்.

    சிறுவனின் பெற்றோர் எப்படியோ நிலைமையை தெரிந்துக்கொண்டு அந்த தம்பதியிடம் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு தங்களுடைய மகனை மீட்டனர். இதுகுறித்து வர்ஜீனியா போலீசிலும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கோர்ட்டு விசாரணை நடந்து வந்தது. அதில் தம்பதி மேல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

    இதனயைடுத்து இந்தியாவில் இருந்து சிறுவனை அழைத்து வந்து இங்கு கொத்தடிமைபோல் நடத்திய ஹர்மன்பீரித் கவுருக்கு 11 ஆண்டுகள் 3 மாதமும், அவருடைய கணவர் குல்பீர் கவுருக்கு 7 ஆண்டுகள் 3 மாதமும் சிறை தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 கோடியே 84 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    63 வயதான அந்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அடி வயிற்றில் தையல் போட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து, நபர் அவரது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருமலும் வந்துள்ளது.

    அவர் தும்பிய வேகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் இருந்து குடல் வெளியே வந்தது. இதனால், பயந்துபோன நபர் தனது சட்டையால் வயிற்றை மூடிக் கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.

    மருத்துவ உதவியாளர்கள் விரைவாக வந்து, காயத்தை சரி செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் வலி நிவாரணிகளை வழங்கினர்.

    மூன்று சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்கள், குடல்களை மீண்டும் வயிற்றுக்குள் கவனமாக வைத்து சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்தனர்.

    காயங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    இருப்பினும், தும்மலால் குடல் வெளியேறிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
    • பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.

    பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.

    இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.

    எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.

    இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.

    வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.

    பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.

    இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.

    நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.

    • கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது.
    • அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

    ஜெனீவா:

    ஆல்கஹால் மற்றும் போதை பொருளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

    உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் மதுவினால் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்றே குறைந்திருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 20-ல் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 சதவீதம் ஆகும். அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.

    2019-ம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக 13 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    மதுவினால் 2019-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 16 லட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    இவர்களில் 4,74,000 பேர் இதய நோய்களாலும், 4,01,000 பேர் புற்றுநோயாலும், 7,24,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்ளிட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    9 ஆண்டுக்கு முன் 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019-ம் ஆண்டில் 5.5 லிட்டராகக் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.

    • அக்டோபர் 1-ந்தேதி பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
    • ஜூலை மாதம் நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட இருக்கிறார்.

    அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

    இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

    இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.

    ஜூலை 9 மற்றும் 11-ந்தேதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது ரஷிய அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக அவர் வரவேற்பார்கள்.

    தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ந்தேதி முடிவடைகிறது. அக்டோபர் 1-ந்தேதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.

    ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அங்குள்ள ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இளம்பெண் ஒருவர் சேலை அணிந்து கொண்டு வளையங்களை உடலில் சுற்றி வளைத்து 'முக்காலா... முக்காபுலா...' பாடலுக்கு 'ஹூலா ஹூப்' வகை நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'ஹூலா ஹூப்' என்பது இடுப்பை சுற்றி சுழலும் ஒரு பொம்மை வளையம் ஆகும். வீடியோவில் நடனம் ஆடும் பெண் இந்திய கலைஞரான எஷ்னா குட்டி என்பவர் ஆவார். இவர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனவர்.

    தற்போது அவரின் இந்த வித்தை வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
    • 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.

    போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

    மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.

    மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.

    2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    ×