என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் சாதனையை பண்ட் படைக்கவுள்ளார்.
    • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட், டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கவுள்ளார்.

    அதன்படி இப்போட்டியில் ரிஷப் பண்ட் மேற்கொண்டு 122 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். ரிஷப் பண்ட் 2594 ரன்களுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார். அவர் மேலும் ஆறு சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறுவார். தற்போது இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் 91 சிக்சர்களை அடித்து முதலிடத்திலும், ரோகித் சர்மா 88 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
    • முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். கடந்த இரு போட்டிகளில் பார்த்ததை விட லார்ட்ஸ் ஆடுகளத்தில் புற்கள் கொஞ்சம் அதிகமாக உள்ளது. முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

    சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.
    • நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.

    இந்நிலையில் லண்டனில் யுவ்ராஜ் சிங்கின் Youwecan ட்ரஸ்ட் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கோலி "நீங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்" எனக் கூறியுள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
    • வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 124 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் டோஹித் ஹிரிடோய் அரை சதம் அடித்தார்.

    இதன் மூலம் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    • இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
    • சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திற்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

    லண்டன் லார்ட்ஸ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார்.

    மான்செஸ்டர்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றூம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் இடம் பெறாத இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார். காயம் காரணமாக டி20 தொடரில் பாதியில் விலகிய கேப்டன் நாட் சிவெருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மையா பவுச்சர் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.

    இங்கிலாந்து மகளிர் அணி விவரம்:

    நாட் சிவெர் (கேப்டன்), எம். அர்லோட், சோபியா டங்லி, எம்மா லாம்ப், டாமி பிமோன்ட், அமி ஜோன்ஸ், மையா பவுச்சர், அலிஸ் கேப்சி, கேத் கிராஸ், அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லாரென் பைலர், லின்சே சுமித், லாரென் பெல்.

    • எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இல்லாமல் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா இடம் பெற உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் போட்டிக்கும் 2ஆவது போட்டிக்கும் இடையில் 7 நாட்கள் இடைவெளி இருந்தபோதிலும், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டது.

    பும்ரா இல்லாமல் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த முடியும் என இந்திய அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் பும்ராவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி 10 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    நாளைமறுநாள் தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார். இந்த போட்டியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார். பாரம்பரிய பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    • ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

    புலவாயோ:

    தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 367 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் தனகா சிவாங்கா, மடிகிமு தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே அணி 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியதால் தென் ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்தது. சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும், முல்டர், கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைடனோ 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிக் வெல்ச் அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் கிரெய்க் எர்வின் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டும், செனூரன் முனுசாமி 3 விக்கெட்டும், கோடி யூசுப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது.
    • பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

    உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 12.9% உயர்ந்து 18.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 13.8 சதவீதம் உயர்ந்து இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

    அசோசியேட் ஸ்பான்சர் எனும் இடங்களை மட்டுமே My11Circle, Angel One, RuPay மற்றும் CEAT - டயருக்கு விற்பனை செய்ததன் மூலம், பிசிசிஐ ரூ.1,485 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய சுழற்சியை விட 25 சதவீதம் அதிகமாகும்.

    டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது. இதற்காக அந்த நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது.

    ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு 2024-ல் 227 மில்லியனாக இருந்தது. தற்போது 269 மில்லியனாக உயர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் (மும்பை) 242 மில்லியனுடன் 2-வது இடத்திற்கும், சிஎஸ்கே 235 மில்லியனுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

    குறிப்பாக பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற எந்த அணியை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

    • இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படுபவர் சவுரவ் கங்குலி.
    • 2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்தவர் கங்குலி.

    கிரிக்கெட் ரசிகர்களால் "தாதா" என்று அன்பாக அழைக்கப்படுபவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. இவர் தனது 53-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய தேசிய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தற்போது அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், விஸ்டன் இந்தியாவின் தலையங்கக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

    கொல்கத்தாவில் பிறந்த கங்குலி, தனது மூத்த சகோதரர் சினேஹாசிஷ் மூலம் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ், சுனிஸ் கவாஸ்கர், சச்சின், தோனி என எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தாலும் இவர் ஒருவரின் பெயர் இடம்பெறாமல் அந்த பட்டியல் பூர்த்தி அடையாது. அவர்தான் 'கிரிக்கெட்டின் தாதா' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி.

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படும் கங்குலி இந்திய அணிக்கு புதிய பாய்ச்சலை கொண்டு வந்ததில் முக்கியமானவர்.

    ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தரப் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து 1992-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

    2000-ம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் பதவி விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2004 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது.

    2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்து இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வ்ந்தார். இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி திருப்பிய கங்குலி வெளிநாடுகளிலும் வெற்றி பெறக்கூடிய ஒரு வலிமையான அணியாக இந்தியாவை மாற்றினார்.

    கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனியை அறிமுகப்படுத்தியவர் கங்குலி தான். தோனியின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்பளித்ததில் கங்குலிக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்வரிசையில் களமிறங்கிய தோனியை முன்வரிசையில் ஆட வைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றியவர் கங்குலி.

    மேலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைப் போன்ற பல ஸ்டார் வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தி அவர்களையும், அணியையும் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் கங்குலி.

    இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மைதானத்திலேயே சட்டையை கழற்றி ஆகரோஷமாக கொண்டாடினார்.

    இதனையடுத்து 2002-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அப்போது கேப்டன் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் தனது சட்டையைக் கழற்றி கொண்டாடிய நிகழ்வு இன்றும் பேசப்பட்டு வருகிறது.

    சிறந்த பேட்ஸ்மேன், பவுலராகவும் வலம் வந்த சவுரவ் கங்குலி வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன்களில் முக்கியமானவர். குறிப்பாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை இவரையே சேரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கங்குலி கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சில காலம் பணியாற்றிய கங்குலி இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக விளங்கினார்.

    இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய கங்குலியின் ஆக்ரோஷமான பாணியும், தலைமைப் பண்பும், இளம் வீரர்களை ஊக்குவித்து, அணியை வலிமையாக்கியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுகிறது.

    ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் (9-வது இடம்), இதில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் (சச்சின் மற்றும் இன்சமாம் உல் ஹக்கிற்கு அடுத்து). அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள். டெஸ்ட் போட்டிகளில் 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 வெற்றிகளைப் பெற்றார்.

    • தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
    • இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    லக்னோ:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். ஆஸ்திரேலியா சென்ற இந்திய 'ஏ' அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.

    இதற்கிடையே யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த அந்தப் பெண் முதல்-மந்திரியின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.

    அந்தப் பெண் தனது புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தேன். திருமணம் செய்வதாக கூறி பலமுறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் யாஷ் தயாள் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 24-ந்தேதி இந்த புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பெண் புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்திய தண்டனை சட்டம் 69-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஏமாற்றுதல் அல்லது தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.

    இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    யாஷ் தயாள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    • ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
    • ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.

    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன்கில்லின் அபாரமான பேட்டிங்கும் (430 ரன்), ஆகாஷ்தீப், முகமது சிராஜ் (17 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் காரணமாக இருந்தது.

    இந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 6) ஆகாஷ் தீப்பை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் கில்லுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற அவரை பாராட்டுகிறேன். 2-வது இன்னிங்சில் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

    இந்த டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை முற்றிலுமாக வெளியேற்றிய அணுகுமுறை நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் பந்து வீசிய நேர்த்தியை சொல்ல தேவையில்லை. ஆகாஷ்தீப் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.

    இவ்வாறு டெண்டுல்கர் கூறி உள்ளார்.

    ×