என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3-வது போட்டியில் வெற்றி: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
- முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
- வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கொழும்பு:
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 124 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் டோஹித் ஹிரிடோய் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.






