என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் சாதனை அசாதாரணமானது.
- இந்தியாவை விட ஆஸ்திரேலிய மண்ணில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோலி ரன்வேட்டை நடத்தினால் இந்தியா தொடரை வெல்லும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னால் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் சாதனை அசாதாரணமானது. இன்னும் சொல்லப்போனால் அவர் இந்தியாவை விட ஆஸ்திரேலிய மண்ணில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்டுகளில் ஆடி 6 சதங்கள் அடித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால், அதிக ரன் குவிக்கும் வீரராக விராட் கோலி இருக்க வேண்டும். அவருடன் ரிஷப் பண்டும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டும்' என்றார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் ஆடிய போது மழை பெய்தது.
செயிண்ட் லூசியா:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 3-1 என கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை சாகிப் மஹ்முதுவுக்கு வழங்கப்பட்டது.
- நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
- ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.
இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.
இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.
- இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் கோப்பை வென்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பல்லேகலே:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்க் சாப்மேன் 76 ரன்களும், மிட்ச் ஹே 49 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் வாண்டர்சே, தீக்சனா தலா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் இறுதிவரை போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பதும் நிசங்கா 28 ரன்னும், ஜனித் லியாங்கே 22 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 74 ரன்னும், தீக்சனா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், அரியானா அணி 36-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.
மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 30-28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.
- விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார்.
- தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
மூன்றாவதாக தாய்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. நேற்று சீனாவுடன் நடந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் இன்று ஜப்பானுடன் இந்தியா பலப்பரீட்சை செய்தது இந்தியா.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார். 37 வது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுர் கோல் விளாசினார். இதன்படி 3- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
எனவே தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அரையிறுதீயில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.
- தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
- தமிழ் தலைவாஸ் 7-வது இடத்திலும் உள்ளன.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் முதல் இடத்திலும், புனேரி பால்டன் 3வது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6-வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 7-வது இடத்திலும் உள்ளன.
- நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம்.
- முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியதால் இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை வீழ்த்த மும்முறமாக தயாராகி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:-
இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால் இப்போது இருக்கும் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம்.
ஆனாலும் அவர் இப்பொழுதும் நமக்கு எதிராக ரன் அடிக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த்:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயத்தை சந்தித்து வருவதை அடுத்து இளம் வீரர்களான சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.
- சில சூழ்நிலைமைகளில் நீங்கள் தோற்றாலும் அது வெற்றிதான்.
முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார். இப்போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.
8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை வீழ்த்தினார். மைக் டைசனுக்கு ரூ.170 கோடி கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டது குறித்து மைக் டைசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சில சூழ்நிலைமைகளில் நீங்கள் தோற்றாலும் அது வெற்றிதான். நேற்றைய இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். கடைசியாக ஒருமுறை பாக்சிங் ரிங்கிற்குள் வந்ததை நினைத்து நான் வருத்தப்படவில்லை.
நான் கிட்டத்தட்ட கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டேன். எனக்கு 8 முறை ரத்தம் ஏற்றப்பட்டது. மருத்துவமனையில் பாதி இரத்தத்தையும் 25 பவுண்டுகள் எடையையும் இழந்தேன். உடல்நலத்துடன் இருக்கவே நான் போராட வேண்டியிருந்தது. ஆனால் அதில் நான் வெற்றி பெற்றேன்.
நான் உறுதியுடன் ரிங்கிற்குள் இருப்பதை என் குழந்தைகள் பார்க்க வேண்டும். என் வயதில் பாதியை உடைய ஒரு திறமையான போராளியுடன் 8 ரவுண்டுகள் சண்டையிட்டேன். இது மிக சிறந்த அனுபவம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- வங்கதேசதம் டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது.
- சுழல் பந்துவீச்சாளர் கெவின் பின் பிலே மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வங்கதேசதம் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி செல்ல உள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே இழந்துவிட்டன.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னாள் கேப்டன் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான வேகப் பந்துவீச்சு ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெவின் இம்லாச், ஆண்டர்சன் பிலிப்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர் கெவின் பின் பிலே மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக அனுபவ வீரர் கெமார் ரோச் உடன் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷாமர் ஜோசப் என சிறப்பான வேகப்பந்துவீச்சு யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக கிரேக் பிராட்வய்ட் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதியும் 2-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ம் தேதியும் துவங்குகிறது. இதற்குப் பிறகு இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கிரேக் பிராத்வைட் (கே), ஜோசுவா டா சில்வா (வி.கீ), அலிக் அதானாஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன், மைக்கேல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், மற்றும் கெமர் ரோச்.






