என் மலர்
விளையாட்டு
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் மெடிசன் கீஸ் மற்றும் டோனா வெக்கிச் மோதினர்.
- மற்றொரு ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மற்றும் டயானா ஷ்னைடர் மோதினர்.
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் கீஸ் மற்றும் குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் மோதினர்.
இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் கீஸ் 6-2, 6-3 என்ற கணக்கில் குரோஷிய வீராங்கனையை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ரஷ்ய வீராங்கனை டயானா ஷ்னைடர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதனையடுத்து 2-வது ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் டயானா 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்வியாடெக் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-0, 3-7, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் ஸ்வியாடெக் மற்றும் மேடிசன் கீஸ் கீஸ் மோதவுள்ளனர்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரசல், ரோவ்மான் பொவேல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
- டாஸ்மின் பிரிட்ஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா 140 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா வால்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் சதம் விளாசி அசத்தினார்.
இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- குஜராத் அணியின் 209 இலக்கை 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டியது.
- ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவரில் 212 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உலக சாதனை படைத்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கோரை வேகமாக துரத்திய அணியாக ராஜஸ்தான் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக 2018-ம் ஆண்டு, மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 16 ஓவர்களில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை துரத்தியதே சாதனையாக இருந்த நிலையில், ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
டி20 வரலாற்றில் அதிவேகமாக 200+ ரன்களைச் சேசிங் செய்த அணிகள்
15.5 ஓவர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், 2025*
16.0 ஓவர்கள் - சர்ரே vs மிடில்செக்ஸ், 2018.
16.0 ஓவர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், 2024
16.0 ஓவர்கள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 2025
16.3 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023
இது தவிர, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா மூன்று முறை இதனைச் செய்துள்ளது. அதேசமயம் உலகளில் மிடில்செக்ஸ் அணி மட்டுமே 4 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரதிகா 78 ரன்கள் எடுத்தார்.
இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.
முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.
அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-
பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா)
சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
பெலிண்டா கிளார்க் - 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
வெண்டி வாட்சன் - 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
188 - தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017
171* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017
154 - பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025
143* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022
138* - ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005
- 27 பந்தில் அரைசதமும், 35 பந்தில் சதமும் விளாசினார்.
- 7 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் என 94 ரன்கள் ஓடாமலேயே எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 209 ரன்கள் குவித்தது. பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசினார். 94 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்கர் மூலமாகவே கிடைத்தன. இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.5 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
17 பந்தில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி, 35 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம், குறைந்த பந்தில் சதம் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார்.
14 வயதில் பயமறியாமல் அதிரடியாக விளையாடிய அவரை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது. சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், சூர்யவன்ஷியின் திறமையை பாராட்டி 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த வருடம் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரமான ஆட்டத்திற்குப் பிறகு போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மாநில அரசு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடி புதிய சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார்.
- டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி 2011-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பீகார் மாநிலம் சமஸ்கிபூர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் பிறந்தார். தலைநகர் பாட்னாவில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் இருக்கிறது.
தனது இளம் வயதில் பீகார் அணிக்கு ரஞ்சி டிராபியில் அறிமுகம் ஆனார். அவருக்கு அப்போது 12 வயதாகும். முதல் தர போட்டியில் விளையாடியதன் மூலம் ஐ.பி.எல்.லில் ஆட தகுதி பெற்றார்.
13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஐ.பி.எல்.லில் ரூ.1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது தனது 14 வயதில் சதம் அடித்து சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார்.
சூர்யவன்ஷியின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக அவரது தந்தை சஞ்சீவ் விவசாய நிலத்தை விற்றுள்ளார். 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். 16 முதல் 17 வயதுடைய பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டு விளையாடினார். மகனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அவரது தந்தை வழங்கினார். கடினமான உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது கிடைத்திருக்கிறது. மிக இளம் வயதில் சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஷர்துல் தாக்கூருக்கு எதிரான முதல் பந்தில் சிக்சர் அடித்து தனது ஐ.பி.எல்.லில் வாழ்க்கையை அவர் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் போற்றும் நபராக வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஐ.பி.எல்.லில் முத்திரை பதித்துள்ளார்.
டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
- 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதை பிறகு ஆர்.சி.பி.(50 ரன்), ராஜஸதான் ராயல்ஸ் (6 ரன்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது. அதன் பிறகு மும்பையிடமும் (9விக்கெட்), சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் (5 விக்கெட்) தோற்றது.
சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது . எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும். நியூ சண்டிகரில் நடந்த போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்று இருந்தது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 6- வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
- 20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.
- சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.
ஐ.பி.எல். போட்டியில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன் இலக்கை 25 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் இந்த வெற்றிக்கு தொடக்க வீரரும், 14 வயதே நிரம்பியவருமான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டமே காரணமாகும்.
ஐ.பி.எல்.லில் தனது 3-வது போட்டியிலேயே அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 11 சிக்சர்களும் அடங்கும். சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை சூர்ய வன்ஷி படைத்தார். அதே நேரத்தில் இந்திய வீரர்களில் அதிவேகத்தில் சதம் அடித்து புதிய வரலாறு நிகழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் (பெங்களூரு) 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக 30 பந்தில் சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக வைபவ் சூர்யவன்ஷி இருக்கிறார். இந்திய வீரர்களில் யூசுப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 2010-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை இளம் வீரர் சூர்யவன்ஷி முறியடித்தார்.
ஐ.பி.எல்.லில் அதிவேகத்தில் சதம் அடித்த முதல் 3 வீரர்களில் கெய்ல் (30 பந்து), சூர்யவன்ஷி (35), யூசுப் பதான் (37) உள்ளனர்.
20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். அவருக்கு 14 வயது 32 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மகாராஷ்டிரா வீரர் விஜய் ஜோல் மும்பைக்கு எதிராக 18 வயது 118 நாட்களில் சதம் அடித்து இருந்தார்.
ஐ.பி.எல். போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்து இருந்தவர் மனீஷ் பாண்டே. 2009-ம் ஆண்டு அவர் தனது 19 வயது 253 நாட்களில் செஞ்சுரி அடித்து இருந்தார். இந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். மேலும் இளம் வயதில் அதிவேகத்தில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்களில் அவர் முரளி விஜய்யுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்தார்.
சி.எஸ்.கே. அணிக்காக ஆடிய முரளி விஜய் 2010 -ல் மும்பைக்கு எதிராக 11 சிக்சர்கள் அடித்தார். சூர்யவன்ஷி நேற்று 11 சிக்சர்கள் அடித்து அதை சமன் செய்தார்.
முரளி விஜய், சூர்ய வன்ஷி ஆகியோருக்கு அடுத்தப்படியாக சஞ்சு சாம்சன் 10 சிக்சர் அடித்துள்ளார். சர்வதேச வீரர்களில் கெய்ல் 17 சிக்சர்களும், மேக்குலம் 13 சிக்சர்களும், டி வில்லியம்ஸ் 12 சிக்சர்களும் ஒரு ஆட்டத்திலும் அடித்துள்ளனர்.
சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.
- தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
- இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன்.
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் அந்த சமயம் சர்வதேச போட்டிகள் இல்லாத வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சரிகட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டில் ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் கூறுகையில், 'ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும். அடுத்த டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கும் காலக்கட்டமான 2028-ல் இருந்து அதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 94 ஆட்டங்கள் என்றால் போட்டிக்குரிய நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டி இருக்கும்.
போட்டி அட்டவணைக்கு ஏற்ப காலக்கட்டத்தை உருவாக்க, இரு நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் விவாதிக்கிறோம்.
அதே சமயம் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாகத் தான் இருக்கிறது. தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் கோப்பையை வெல்லவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அவ்வப்போது நன்றாக ஆடுகிறது. இந்த அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால், இந்த சீசனில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். அவ்வாறு நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.' என்றார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (மும்பை, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அளிக்காததும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் (51 ரன்) ரன்னை வாரி வழங்கியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (364) அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா கணிசமான பங்களிப்பை அளித்தால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் நம்பிக்கை அளிக்கின்றனர்.
கொல்கத்தா அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்) என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்த கொல்கத்தா அணி, பஞ்சாப்புடன் இரண்டாவது முறையாக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது. இதில் 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் மழை பலமாக கொட்டியதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.
கொல்கத்தா அணிக்கு பேட்டிங் பெரும் தலைவலியாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக சுனின் நரினுடன் களம் கண்ட குயின்டான் டி காக் சோபிக்காததால் ரமனுல்லா குர்பாஸ் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அந்த அணியில் கேப்டன் ரஹானே (271 ரன்) தவிர யாரும் 200 ரன்னை கூட தாண்டவில்லை. வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து இயல்பான அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பலம் சேர்க்கிறார்கள்.
உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் 7-வது வெற்றியை குறிவைத்து டெல்லி அணி களம் காண்கிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் எல்லா ஆட்டங்களும் முக்கியம் என்பதால் கொல்கத்தா அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
டெல்லி: பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அஷூதோஷ் ஷர்மா அல்லது மொகித் ஷர்மா.
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரோமன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சகாரியா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- வைபவ் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.
அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






