என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் டிக்கெட் இலவசமாக வழங்க ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

    3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (19-ந் தேதி) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது.

    ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் முடிந்தது.

    தற்போது இம்மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி.யை சேர்ந்தவர்கள் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ‘பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டியை காண இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.

    ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி. படையினர் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்’ என்றார்.

    ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தங்கி இருக்கிறார்கள். இதைப்போல் மைதானத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டது குறித்து ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ஓட்டல்களில் அறைகள் ஓராண்டுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது.

    ஓட்டல் அறைகளை நாங்கள் புக் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமே அறைகளை புக்செய்தது என்றார்.

    குத்துச்சண்டை போட்டியின் போது மூளை அதிர்ச்சியால் பாதிப்படைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே உயிரிழந்தார். அவருக்கு வயது 27.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும்,  ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர்.

    போட்டியின் 10 வது ரவுண்டில், இருவரும் மோதிக்கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான்கு நாட்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே நேற்று உயிரிழந்தார்.

    பேட்ரிக் மரணமடைந்த செய்தியை,  பேட்ரிக் டே மற்றும் கான்வெல் இருவரது விளம்பரதாரரான லூ டிபெல்லா அறிவித்தார்.

    இது குறித்து லூ டிபெல்லா கூறுகையில், ‘இது போன்ற நேரங்களில், குத்துச்சண்டை போட்டிகளில் உள்ள ஆபத்தை விளக்குவதோ அல்லது நியாயப்படுத்துவதோ மிக கடினம், இந்த சூழ்நிலையில் குத்துச்சண்டை போட்டிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எங்களிடம் பதில்கள் இல்லை என்றாலும் இது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. பேட்ரிக் டே வுக்கு தலை வணங்குகிறோம்’ என்றார்.

    கான்வெல், கூறுகையில், ‘போட்டியை நான் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். அவரை வெற்றி கொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததே தவிர அவரை காயப்படுத்துவதோ, தாக்குவதோ என் நோக்கமாக இருக்கவில்லை. குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து இத்துடன் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

    இந்த ஆண்டு மட்டும் உலக அளவில், குத்துச்சண்டை போட்டி மைதான வளையத்திற்குள், 3 குத்துச்சண்டை வீரர்கள் இந்த மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனக்கும் எல்லோரையும் போல் உணர்வு, கோபதாபங்கள் உண்டு. ஆனால் களத்தில் மற்ற தனிநபர்களை காட்டிலும் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்று டோனி கூறினார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 38 வயதான டோனி, தானாகவே முன்வந்து ஓய்வு கேட்டு இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை. அவர் தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    களத்தில் பதற்றமின்றி அமைதியாக செயல்படும் டோனியை ‘கேப்டன் கூல்’ என்று செல்லமாக அழைப்பார்கள். இது குறித்து டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறுகையில், ‘எனக்கும் எல்லோரையும் போல் உணர்வு, கோபதாபங்கள் உண்டு. ஆனால் களத்தில் மற்ற தனிநபர்களை காட்டிலும் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அதனால் தான் எனது கோபம் வெளியே தெரிவதில்லை. உங்களை போல் நானும் சில நேரங்களில் கோபமும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். வருத்தமடைந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் எது முக்கியம் என்றால், உணர்வுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிக்கலில் இருந்து மீண்டு அடுத்து என்ன திட்டமிடலாம், அடுத்து யாரை பயன்படுத்தலாம் என்று யோசிக்கும்போது, எனது உணர்ச்சிகளை நல்ல முறையில் கட்டுப்படுத்த முடிகிறது’ என்றார்.

    இதற்கிடையே டோனியின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கமிட்டியினரை வருகிற 24-ந்தேதி சந்தித்து பேச இருக்கிறேன். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வேன். அதன் பிறகு எனது கருத்தை சொல்வேன். அத்துடன் டோனியுடனும் பேசுவேன்’ என்றார்.
    சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முடிவில் சமநிலை (டை) ஏற்பட்டால், முன்பு போல் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது என்றும் போட்டியில் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை தொடரும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

    ஐ.சி.சி.யின் முடிவை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘போட்டியில் மோதும் இரு அணிகளுக்கு இடையே வெற்றி வித்தியாசம் கிடைக்காத நிலையில் ஒரு அணி வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று முடிவு செய்து இருப்பது முக்கியமானது மட்டுமின்றி முடிவை பெறுவதற்கான நியாயமான வழிமுறையாகவும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தாதாவுக்கு (சவுரவ் கங்குலியின் செல்லப்பெயர்) வாழ்த்துகள். நீங்கள் எப்பொழுதும் செய்து இருப்பது போல் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    குஜராத்தில் நடைபெற்ற புரோ கப்டி லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் யு மும்பா அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    புரோ கபடி லீக் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் மும்பை அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது தமிழ்நாடு.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் ‘சி’ பிரிவில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் வந்தன.

    கடைசி லீக்கில் இரு அணிகளும் மோதியதால் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெயரை எடுப்பதில் இரு அணிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

    டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

    அபிநவ் முகுந்த் 68 பந்தில் 79 ரன்களும், முரளி விஜய் 106 பந்தில் 94 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவரில் 130 ரன்கள் குவித்தது. அதன்பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் சேர்த்தார். இதனால் தமிழ்நாடு எளிதான 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தமிழ்நாடு 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்தது.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குஜராத் 196 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று 36 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. குஜராத் 8 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    குஜராத்தில் நடைபெற்ற புரோ கப்டி லீக் தொடரின் முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி தபாங் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    புரோ கபடி லீக் தொடரில் முதல் அரையிறுதி போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியதில் இருந்தே டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால் முதல் பாதியில் 26-18 என டெல்லி அணி முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் பெங்களூரு புல்ஸ் அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் டெல்லி அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், தபாங் டெல்லி அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களுருவை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி 6-வது முறையாக யூரோப்பியன் தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.
    ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படும்.

    2018-19 சீசனில் லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்தார். இதனால் அவருக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது. இத்துடன் மெஸ்சி 6 முறை தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார்.

    பிரான்ஸில் நடைபெற்றும் லீக் 1-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடும் கிலியன் மப்பே 33 கோல்கள் அடித்து நூலிழையில் விருதை தவறவிட்டார்.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த சயாகா தகாஹாஷியை எதிர்கொண்டார். இதில் சாய்னா 15-21, 21-23 நேர்செட்டில் தோல்வியடைந்தார்.

    சீனா மற்றும் கொரியா ஓபனில் 32 பேர் கொண்ட சுற்றில் வெளியேறிய நிலையில், தற்போது முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.

    முதல் செட்டில் சாய்னாவும் ஜப்பான் வீராங்கனையும் ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலையில் இருந்தனர். அதன்பின் ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி 11-8 என முன்னிலைப் பெற்றார். இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் தகாஹாஷி சாய்னாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது நெருக்கடியை சாய்னாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் தகாஹாஷி 20-13 என முன்னிலைப் பெற்று, அதன்பின் 21-15 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டிலும் இடைவேளை வரை இழுபறியாகவே சென்றது. தகாஹாஷி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் தகாஹாஷி 15-10 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் தகாஹாஷி 15-13 என முன்னிலைப் பெற்ற பிறகு, ஆட்டம் 20-20 என சமன் பெற்றது. இறுதியில் தகாஹாஷி 23-21 என வெற்றி பெற்றார்.
    ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஐஓஏ பரிசீலனை செய்து வருகிறது.
    உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி அடுத்த வருடம் ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடக்கிறது. போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜப்பான் செய்து வருகிறது.

    ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த வருடம் ஜூலை மாதம் 29-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 57 பேரி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் காலத்தில் வெப்பத்தின் தாக்கல் கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. 30 டிகிரி பாரன்ஹிட்டிற்கு மேல் வெப்பம் இருக்கும் என்பதால் மாரத்தான், நடைபயணம் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மாரத்தான் மற்றும் நடைபயணம் (Race Walking) போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளில் பாதிபேர் முழுமையான தூரத்தை கடக்க முடியவில்லை. அவர்கள் மயங்கி சரிந்தனர்.

    இதேபோல் ஒலிம்பிக் தொடரிலும் நடந்த விடக்கூடாது என ஒருங்கிணைப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். இதனால் மாரத்தான் மற்றும் நடை பயணம் ஆகிய பந்தயங்களை டோக்கியோவில் இருந்து 800 கி.மீட்டர் தொலைவில் உள்ள சப்போரோ நகருக்கு மாற்ற பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    சப்போரோவில் 1972-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. டோக்கியோவை விட நான்கு அல்லது ஐந்து டிகிரி வெப்பம் குறைவாக இருக்கும்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டதை கண்டு ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர்.
    தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர். 28 வயதாகும் இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இடம் பிடித்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பேட்ஸ்மேன் வரிசையிலும் களம் இறக்கப்பட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்திருந்தார். இரண்டு முறை காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இந்தியா திரும்பினார்.

    அதன்பின் இதுவரை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவரது உடலமைப்பு விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போன்று இருக்காது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடலமைப்பை கொண்டுள்ளார்.

    விஜய் சங்கரை ட்ரோல் செய்த டுவிட்டர்வாசிகள்

    தனது கடந்த கால படத்தையும், தற்போதைய சிக்ஸ் பேக் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
    ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர், என்னிடம் ‘நீ ஒரு முட்டாள்’ என்று திட்டினார் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ். பெர்த்தில் உள்ள வாகா (WACA) மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடினார். போட்டியின்போது வீரர்கள் அறையில் இருந்த கல்தூணை வலது கையால் ஓங்கி குத்தினார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    காயத்தால் மிட்செல் மார்ஷ் ஆறு வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் என்னை முட்டாள் என திட்டினார் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில் ‘‘அவர் என்னிடம் வந்து நீ ஒரு முட்டாள் என்று சுறுக்கமாக ஒரு வார்த்தையால் திட்டிவிட்டுச் சென்றார். என்னுடைய செயல்பாடு குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.  இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்பது உறுதி’’ என்றார்.
    ×