என் மலர்
விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் போது பேட்டிங்கில் அதிகமான அதிரடி காட்ட வேண்டியது அவசியமாகும். இதே போல் புதுமையான ஷாட்டுகளை அடிப்பதற்கு நிறைய பயிற்சியும் தேவை. இதனால் பேட் சீக்கிரமாகவே உடைந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது எனது பேட் ஒன்று அல்லது 2 மாதங்கள் தாக்குப்பிடிக்கும். ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் கொரியர் சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது, கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்தேன்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் மற்றும் வெளியில் இருக்கும் வீரர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குள் உணரச் செய்யும் வகையில் கேப்டன் பேச வேண்டும். இது ரிக்கிபாண்டிங்கிடம் (மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர்) இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்’ என்றார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. மே மாதத்தில் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது. தினமும் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை ஸ்டேடியத்தில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
‘களிமண்’ தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இங்கு 12 முறை பட்டம் வென்று சரித்திரம் படைத்திருக்கும் நடால் மறுபடியும் வெற்றிக்கொடி நாட்டும் முனைப்புடன் உள்ளார். இந்த முறையும் மகுடம் சூடினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் வழக்கமாக வெயிலுடன் வறண்ட வேகமான ஆடுகளத்தில் விளையாடி பழக்கப்பட்ட நடால், தற்போதைய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, புதிய வகை பந்து பயன்படுத்தப்பட இருப்பது போன்றவை எல்லாம் முன்பு எப்போதும் இல்லாததை விட கடும் சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் தனது முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். காயம் காரணமாக பெடரர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
நடாலுக்கு, ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), சமீபத்தில் அமெரிக்க ஓபனை கைப்பற்றிய டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் டேனில் மெட்விடேவ், பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜோகோவிச் முதல் சுற்றில் தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் மிகைல் மிர்ரை (சுவீடன்) எதிர்கொள்கிறார். அமெரிக்க ஓபனில் பந்தை நடுவர் மீது அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜோகோவிச், அதற்கு பிரெஞ்ச் ஓபனில் பரிகாரம் தேட முயற்சிப்பார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக நடந்த இத்தாலி ஓபனில் அவர் கோப்பையை சொந்தமாக்கியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்.
கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான டொமினிக் திம்முக்கு முதல் சுற்று கொஞ்சம் கடினமாக அமைந்துள்ளது. அவர் முன்னணி வீரர் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதுகிறார்.
பெண்கள் பிரிவில் காயம் மற்றும் கொரோனா பீதியால் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளிஸ்கோவா, கிவிடோவா (இருவரும் செக்குடியரசு), ஸ்விடோலினா (உக்ரைன்), அஸரென்கா (பெலாரஸ்), முகுருஜா (ஸ்பெயின்), சோபியா கெனின் (அமெரிக்கா) உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடையே பட்டம் வெல்வதில் பலத்த போட்டி நிலவுகிறது. ஹாலெப் முதல் சுற்றில் 78-ம் நிலை வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவுடன் (ஸ்பெனின்) களம் காணுகிறார்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.325 கோடியாகும். இதில் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.14 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ஏறக்குறைய ரூ.7 கோடியும் வழங்கப்படும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.52 லட்சம் கிடைக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் எந்த அணி முதல் வெற்றியை பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோற்று இருந்தது.
இரு அணிகளும் இதுவரை 17 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 10 போட்டியிலும், ஐதராபாத் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து மீண்டும் தோல்வியை தழுவியது.
துபாயில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.
பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்) ரிஷப்பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), தவான் 27 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டும், சாம்கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 44 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.
டுபெலிசிஸ் அதிகபட்சமாக 35 பந்தில் 43 ரன் (4 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டும், அக் ஷர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னில் தோற்று இருந்தது.
டெல்லியிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பனித்துளி இல்லை. ஆனால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது பேட்டிங்கில் உத்வேகம் இல்லை. தொடக்கம் முதலே நன்றாக அமையவில்லை. இதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.
பேட்டிங்கில் உத்வேகம் இல்லாதது அணியை மிகவும் காயப்படுத்தியது.
ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, சுழற்பந்து வீரர்ரையோ சேர்த்தால் அது பேட்ஸ்மேனுக்கு அது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அடுத்த போட்டிக்கு அம்பதி ராய்டு வந்து விடுவார். அப்போது எல்லாம் சரியாகி விடும். அணி சமநிலை பெற்று விடும்.
பந்து வீச்சை பொறுத்த வரை நேர்த்தியாக அமைய வில்லை. பவுலர்களை மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகி விடாது. அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது.
டெல்லி அணியின் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது:-
வீரர்களின் ஆட்டத்திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் அணி பலன் அடைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ரபடாவும், ஆன்ரிச் நோட்ஜே எங்கள் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. இருவரும் எங்கள் அணிக்கு முக்கியமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 29-ந் தேதி எதிர்கொள்கிறது.






