என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை.

    ஐதராபாத் எதிராக 14 ரன்னும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1 ரன்னும் கோலி எடுத்தார். அதோடு பஞ்சாப்புக்கு எதிராக அவரது பீல்டிங்கு மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுலின் 2 கேட்ச்களை விராட் கோலி தவற விட்டார்.

    இந்த ஆட்டத்தை வர்ணனை செய்த முன்னாள் கேப்டன் காவஸ்கர், விராட் கோலியின் ஆட்டம் குறித்து விமர்சித்தார். அதோடு அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவையும் வம்புக்கு இழுந்தார்.

    ஊரடங்கு காலத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சியை (கோலியும், அனுஷ்காவும் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய வீடியோ) நானும் பார்த்தேன்.

    ஆனால் இது அவருக்கு பெரிய அளவில் உதவப் போவதில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது அவருக்கே தெரியும் என்று காவஸ்கர் சிரித்தபடி தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்து இருந்தார். கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா? என்று அவர் சாடியிருந்தார்.

    இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் எங்கே அனுஷ்கா குறை கூறுகிறேன். நான் அவரை குற்றம் சாட்டவில்லை. அவர் விராட் கோலிக்கு பந்து வீசிய வீடியோவை பார்த்து மட்டும்தான் பேசினேன்.

    ஊரடங்கு காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியதை வேடிக்கையான விளையாட்டு என்றுதான் கூறினேன். விராட் கோலியின் தோல்விக்கு நான் அவரை எந்த இடத்திலும் குற்றம் சாட்டவில்லை.

    எனது கருத்து என்ன வென்றால் ஊரடங்கு காலத்தில் விராட் கோலி உள்பட எந்தவித ஒரு வீரருமே பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நான் பாலியல் ரீதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. யாராவது அதை விளக்கி இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    இவ்வாறு காவஸ்கர் கூறியுள்ளார்.
    தீபக் சாஹரின் முதல் ஓவர் 2-வது பந்தில் பிரித்வி ஷா ‘டக்அவுட்’ ஆக வேண்டிய நிலையில், அரைசதம் அடித்து டெல்லி அணியையும் வெற்றி பெற வைத்துவிட்டார்.
    ஐபிஎல் தொடரின் 7-வது ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் ஆடுகளங்கள் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இருந்து வருகிறது.

    இரவில் பனிப்பொழிவு இருக்கும் என நினைத்து டாஸ் வென்ற எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ரன்கள் விளாசிவிட்டது. இதற்கு அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷாதான் முக்கிய காரணம். அவர் 43 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.

    நேற்றைய ஆடுகளத்தில் தடால் புடால் என அடித்து விளையாட முடியாத சூழ்நிலை. போட்டி தொடங்கியதும் தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். பிரித்வி ஷா பந்தை எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்காத பிரித்வி ஷா 2-வது பந்தை எதிர்கொண்டார்.

    ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வந்த பந்தை பிரித்வி ஷா கவர் டிரைவ் ஆட முயன்றார். பந்து பேட்டை உரசியது போன்று சென்றது. பிரித்வி ஷாவுடன் உடனடியாக பின்னால் திரும்பி பார்க்கவில்லை. தீபக் சாஹரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் உன்னிப்பாக கவனிக்கும் விக்கெட் கீப்பராக இருந்து எம்எஸ் டோனிக்கும் பேட்டில் உரசிய சத்தம் கேட்காமல் போய்விட்டது. அவரும் அப்பீல் கேட்க விரும்பவில்லை.

    பிரித்வி ஷா

    பின்னர் ரீ-பிளேயில் பந்து பேட்டில் லேசாக உரசிச் சென்றது தெரிய வந்தது. எம்.எஸ். டோனி ஆட்டம் தொடங்கிய 2-வது பந்து என்பதால் சற்று கவனக்குறைவாக இருந்தாரோ? என்னவோ தெரியவில்லை. கவனிக்காமல் விட்டுவிட்டார்.

    அந்த வாய்ப்பை பயன்படுத்திய பிரித்வி ஷா அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசியதுடன், 64 ரன்கள் குவித்து சென்னையை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்று விட்டார். எம்.எஸ். டோனியின் சிறு கவனக்குறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு எனச் சொல்லலாம்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
    சென்னை:

    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து துக்கத்தில் பங்கெடுத்தனர்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ‘எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர் எஸ்.பி.பி. மறைந்து விட்டார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றபோது எனக்கு விருப்பமான பாடலின் சில வரிகளை தனியாக பாடி காட்டினார். அந்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன். அதே போல் இன்னொரு முறை அவரிடம் இருந்து பாடல் கேட்க ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாக இருக்கப்போகிறது’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    அசத்தலான பந்து வீச்சினால் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
    துபாய்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

    டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் அடித்தது.

    இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 64 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் அவுட்டாகினர். ரிஷப் பண்ட் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் அவுட்டாகினர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.

    ஜாதவ் 26 ரன்னிலும் டூ பிளசிஸ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி 15 ரன்னில் அவுட்டானார்.

    டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ரன்கள் எடுக்க முடியவில்லை.

    இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.
    பிரித்வி ஷா அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரியுடன் டெல்லி 9 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது.

    3-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே அடித்தது. 

    4-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

    5-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இதில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பளர் பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் அடித்தது டெல்லி. இதனால் பவர் பிளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது.

    7-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரில் பிரித்வி ஷா இரண்டு பவுண்டரி விரட்டினார். ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் தவான் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்தார்.  இந்த இரண்டு ஓவரில் டெல்லி அணிக்கு 26 ரன்கள் கிடைத்தது.

    9-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் பிரித்வி ஷா இரண்டு பவுண்டரி விளாசினார்.

    10-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் அடித்து 35 பந்தில் அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் அடித்தது.

    11-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்த ஓவரில் டெல்லி 6 ரன்கள் அடித்தது.

    12-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    13-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிரித்வி ஷா ஸ்டம்பிங் ஆனார். அவர் 43 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார்.

    டெல்லி அணி 14-வது ஓவரில் 8 ரன்களும், 15-வது ஓவரில் 11 ரன்களும், 16-வது ஓவரில் 10 ரன்களும் அடித்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் டெத் ஓவரிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    17-வது ஓவரில் 12 ரன்களும், 18-வது ஓவரில் 11 ரன்களும், 19-வது ஓவரில் 4 ரன்களும், கடைசி ஓவரில் 14 ரன்களும் என 41 ரன்கள் அடித்ததால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
    யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்-க்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
    டி20 கிரிக்கெட் என்றாலே சற்றென்று நினைவுக்கு வரும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். பேட்ஸ்மேனாக என்னென்ன சாதனைகள் படைக்க முடியுமோ? அந்த சாதனைகள் எல்லாம் படைத்திருப்பார். தற்போது வயது கடந்த நிலையில், உடற்தகுதி பிரச்சனையால் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பெறவில்லை. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர்தான் விளையாட முடியும். வேகப்பந்து வீச்சாளர்களில் காட்ரெல், நீசம், பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் விளையாடினர். 

    முதல் ஆட்டத்தில் காட்ரெல், ஜோர்டான், மேக்ஸ்வெல், பூரன் விளையாடினார்கள். கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் மேக்ஸ்வெல் அல்லது பூரன் ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில் கெய்லை விளையாட வைக்க முடியாமல் இருப்பது மிகவும் கடினமான முடிவு என்று அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் டி20-யில் மகிப்பெரிய மேட்ச் வின்னர். இப்படிப்பட்ட மேட்ச் வின்னரை விளையாடாமல் இருக்க வைப்பது எங்களுக்கு கடினமான முடிவு. லாக்டவுன் காலத்திற்குப்பிறகு அவர் பயிற்றி மேற்கொண்டு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறார்.

    அவர் சிறந்த முறையில் பந்தை அடித்து வருகிறார். தொடரின் சில இடங்களில் அவர் எங்கள் அணியின் முக்கியமான நபராக இருப்பார்’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று 3-வது முறையாக தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசனின் 7-வது லீக் ஆட்டம் துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணியில் அஸ்வின், மோகித் சர்மா நீக்கப்பட்டு அவேஷ் கான், அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. முரளி விஜய், 2. ஷேன் வாட்சன், 3. டு பிளிஸ்சிஸ், 4. கேதர் ஜாதவ், 5. ருத்துராஜ் கெய்க்வாட், 6. எம்எஸ் டோனி, 7. ஜடேஜ, 8. பியூஷ் சாவ்லா, 9. ஹாசில்வுட், 10, தீபக் சாஹர், 11. சாம் கர்ரன்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஷிகர் தவான், 2. பிரித்வி ஷா, 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. சிம்ரோன் ஹெட்மையர், 6. ரபடா, 7. நோர்ட்ஜ், 8. அக்சார் பட்டேல், 9. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 10. அவேஷ் கான், 11. அமித் மிஸ்ரா.
    லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார் என கவாஸ்கர் கூற, அனுஷ்கா சர்மா கோபத்தில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நெற்று நடைபெற்றது. இதில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு கேட்ச்களை தவறவிட்ட விராட் கோலி, ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது வர்ணனையாளராக செயல்பட்டு சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சிக்கும் வகையில் ‘‘லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவியின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார்’’ எனக் கூறினார்.

    அனுஷ்கா சர்மா எப்போதுமே விராட் கோலி விளையாட்டையும், தன்னையும் தொடர்புபடுத்தி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சுனில் கவாஸ்கரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மிஸ்டர் கவாஸ்கர், உங்களுடைய தகவல் வெறுக்கத்தக்கது. அது உண்மை. ஆனால், ஒருவடைய கணவரின் ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை குற்றம் கூறியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

    நீங்கள் போட்டியின்போது வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்களுக்கு இணையாக எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?’’ உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
    நியூசிலாந்து தொடரின்போது சித்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், சச்சின் தொடக்க வீரராக களம் இறங்கினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர். தொடக்க காலத்தில் சச்சின் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. இளம் வீரராக இருந்ததனாலும் அவரை யாரும் தொடக்க வீரர்களாகவும் பார்க்கவில்லை.

    1990-ம் ஆண்டு இந்தியா நியூசிலாந்து சென்றது. அப்போது சச்சினுக்கு தொடக்க வீரராக களம் இறங்க ஆசை இருந்தது. தன் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் அசாருதீனிடம் தைரியமாக சென்று தொடக்க வீரராக களம் இறங்க ஆசை என்று கேட்டு வாங்கியது குறித்து சச்சின் தெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார்.

    அந்த சம்பவம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘அசாருதீன் கேப்டன், அஜித் வடேகர் பயிற்சியாளர். நவ்ஜோத் சிங் எங்களிடம், கழுத்து பகுதியில் வலி இருப்பதால் விளையாட முடியாது என்று கூறினார். நான் அஜித் வடேகரிடம், என்னை தொடக்க வீரராக களம் இறக்க ஆலோசனை செய்யலாம், ஏனென்றால் என்னுடைய ஷாட் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் என்று கூறினேன். அசாருதீனிடம் நான் ஏமாற்றம் அடைந்தால், அதன்பின் ஒருபோதும் உங்களிடம் வந்து நிற்கமாட்டுன் என்றேன்.

    நான் அவரிடம், ஒரு வாய்ப்பு போதும் என்றேன். ஏனென்றால், மைதானம் சென்று தொடக்கத்தில் என்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று நினைத்தேன். அதைவிட, பார்ட்னர்ஷிப் அமைத்து தொடக்கத்தில் விக்கெட் இழக்கவில்லை என்றால், என்னால் அதிரடியாக விளையாடி நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தேன். இருவரும் ஒத்துக் கொண்டனர். நீங்கள் நம்பிக்கை வைத்தால், என்னை மீண்டும் அழைக்கலாம் என்றேன்’’ என்றார்.

    இந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் 49 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    சச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    இந்தநிலையில் சாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான்கில் பீல்டிங்கின் போது டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்த புகைப்படத்தை தான் சாரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மேலும் அதில் ஹார்ட்டுகளை (இதயம்) பதிவிட்டுள்ளார். இதனால் சாராவும், சுப்மான்கில்லும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பும் 2 முறை சாராவும், சுப்மான்கில்லும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் தான் தற்போது மீண்டும் புகைப்படத்தை சாரா வெளியிட்டிருப்பது அவர்கள் இருவரும் காதலில் உள்ளனர் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது என்ற கருத்து நிலவி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ‘யோ-யோ’ பயிற்சி குறித்து விராட் கோலியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    புதுடெல்லி:

    அனைவரும் உடற்பயிற்சி பெற ஊக்குவிக்கும் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

    இதையொட்டி, காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி பங்கேற்று வீரர்களுடன் பேசினார்.

    அப்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ‘யோ-யோ’ பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்தேன். கேப்டனும் இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டுமா? எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது? என்று கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த கோலி, “வீரர்களுக்கான உடல் தகுதிக்கு இந்த தேர்வு மிகவும் முக்கியமானது. உலக தரத்திலான பயிற்சியை ஒப்பிடும் போது நமது அணியின் உடற்பயிற்சி குறைவாகவே இருக்கும். இதை ‘யோ-யோ’ பயிற்சி மூலம் அதிகரிக்கிறோம்” என்று கூறினார்.

    இது தவிர, ஓட்டப் பந்தய பயிற்சி குறித்தும் பிரதமரிடம் கோலி விரிவாக எடுத்து கூறினார். அப்போது இது போன்ற பயிற்சிகளில் தோல்வி அடைந்தால் என்னால் கூட இந்திய அணியில் இடம் பெற முடியாது. இதுதான் அனைவரையும், அனைத்து வகையிலும் உடலை வலுவாக வைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.

    உடல் வலிமையுடன் இருந்தால்தான் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாஜாரியா, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை அப்ரான் ஆஷிக், மாரத்தான் வீரர் மலிந்த் சோமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    துபாயில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூடுதலாக 40 ரன் கொடுத்ததால் தோல்வி அடைந்தோம் என்று பெங்களூர் அணி கேப்டன் வீராட்கோலி தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று துபாயில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பஞ்சாப் 97 ரன்னில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (132 ரன், 69 பந்து 14 பவுண்டரி 7 சிக்சர்) சதம் அடித்தார்.

    பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 17 ஓவரில் 109 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் வீராட்கோலி 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னொய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் பெற்றனர். நேற்றைய ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் கொடுத்த 2 கேட்ச்களை வீராட்கோலி தவறவிட்டது திருப்புமுனையாக அமைந்தன.

    தோல்வி குறித்து வீராட் கோலி கூறியதாவது:-

    பந்து வீச்சின்போது நடுப் பகுதியில் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் கூடுதலாக 30 முதல் 40 ரன்னை விட்டுக்கொடுத்து விட்டோம். அவர்களை (பஞ்சாப்) 180 ரன்னுக்குள் கட்டுப் படுத்தியிருந்தால் நாங்கள் முதல் பந்தில் இருந்தே நெருக்கடியுடன் விளையாடி இருக்க மாட்டோம்.

    விளையாட்டில் இது போன்று நடக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கு நல்ல ஆட்டமும் கிடைக்கும், மோசமான ஆட்டமும் கிடைக்கும். தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்வதுதான் முக்கியம். நான் 2 கேட்ச்களை தவற விட்டேன். இது எனது நாளாக அமைய வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லோகேஷ் ராகுல் கூறும்போது, ‘இந்த வெற்றி முழுமையான அணி செயல் பாட்டால் கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் எனது பேட்டிங்கில் முழுமையான கட்டுப்பாடி இருக்கும் என்று நான் நம்பவில்லை.

    இதனால் சிறிது பதட்டம் ஏற்பட்டாலும் சில பந்துகளை நான் எதிர்கொண்டு விட்டால் பின்னர் ஆட்டத்தில் நிலைநிறுத்திக் கொள்வேன் என்பதை அறிந்து இருந்தேன். இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்’ என்றார்.

    ×