search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி
    X
    டோனி

    பேட்டிங்கில் உத்வேகம் இல்லை- தோல்வி குறித்து டோனி கருத்து

    துபாயில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து மீண்டும் தோல்வியை தழுவியது.

    துபாயில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்) ரி‌ஷப்பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி), தவான் 27 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டும், சாம்கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 44 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    டுபெலிசிஸ் அதிகபட்சமாக 35 பந்தில் 43 ரன் (4 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டும், அக் ‌ஷர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னில் தோற்று இருந்தது.

    டெல்லியிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பனித்துளி இல்லை. ஆனால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது பேட்டிங்கில் உத்வேகம் இல்லை. தொடக்கம் முதலே நன்றாக அமையவில்லை. இதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.

    பேட்டிங்கில் உத்வேகம் இல்லாதது அணியை மிகவும் காயப்படுத்தியது.

    ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, சுழற்பந்து வீரர்ரையோ சேர்த்தால் அது பேட்ஸ்மேனுக்கு அது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

    அடுத்த போட்டிக்கு அம்பதி ராய்டு வந்து விடுவார். அப்போது எல்லாம் சரியாகி விடும். அணி சமநிலை பெற்று விடும்.

    பந்து வீச்சை பொறுத்த வரை நேர்த்தியாக அமைய வில்லை. பவுலர்களை மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகி விடாது. அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது.

    டெல்லி அணியின் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    வீரர்களின் ஆட்டத்திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் அணி பலன் அடைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ரபடாவும், ஆன்ரிச் நோட்ஜே எங்கள் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. இருவரும் எங்கள் அணிக்கு முக்கியமானவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 29-ந் தேதி எதிர்கொள்கிறது.

    Next Story
    ×