என் மலர்
விளையாட்டு
வெலிங்டன்:
நியூசிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதால் இதில் டிரா செய்தாலே தொடரை வெல்ல முடியும் என்ற நிலை நியூசிலாந்துக்கு இருந்தது. அதே நேரத்தில் தொடரை சமன் செய்ய வெற்றிபெற வேண்டிய கட்டாயம் வெஸ்ட் இண்டீசுக்கு இருந்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 78 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது. தற்காலிக கேப்டன் டாம்லாதம் (27 ரன்) புளூன்டெல் (14), முன்னாள் கேப்டன் டெய்லர் (9) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
4-வது விக்கெட்டான வில்யங்-ஹென்றி நிக்கோலஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. யங் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.ஆனால் நிக்கோலஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தைத் தொட்டார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்திருந்தது. நிக்கோலஸ் 117 ரன்னிலும் ஜமிசன் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசிய அவருக்கு ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் 2 விக்கெட் சாய்த்தார். 20 ஓவர் தொடரில் அவர் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா தொடரை வெல்ல அவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. தனது முதல் சர்வதேச போட்டிகளிலேயே அவர் முத்திரை பதித்தார்.
நடராஜனின் பந்துவீச்சை கேப்டன் விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் நடராஜனின் பந்து வீச்சை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டி உள்ளார். அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:-
டெஸ்ட் அணியில் இஷான் சர்மா இடம்பெறாத நிலையில் அவரது இடத்தில் நடராஜனை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். ஏனெனில் அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் நடராஜனை சேர்க்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
1982-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இத்தாலி கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் பாலோ ரோஸ்சி. அந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்ற பாலோ ரோஸ்சி பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்ததும் அடங்கும். சர்வதேச போட்டிகளில் இத்தாலி அணிக்காக 20 கோல்கள் அடித்து இருக்கும் அவர் கிளப் போட்டிகளில் 134 கோல்களும் அடித்துள்ளார்.
ஓய்வுக்கு பிறகு கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றி வந்த பாலோ ரோஸ்சி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 64 வயதான பாலோ ரோஸ்சி நேற்று முன்தினம் இரவு தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். பாலோ ரோஸ்சி மறைவுக்கு இத்தாலி நாட்டு அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லா மற்றும் அந்த நாட்டு கால்பந்து சங்க நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.
இதைத்தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டி தொடருக்கு தயாராகும் விதமாக ரஹானே தலைமையிலான இந்தியா ‘ஏ’-டிராவிஸ் ஹெட் தலைமையிலான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையே சிட்னியில் நடந்த முதலாவது 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் முதல் இன்னிங்சில் ரஹானே ஆட்டம் இழக்காமல் 117 ரன்னும், புஜாரா 54 ரன்னும், 2-வது இன்னிங்சில் விருத்திமான் சஹா ஆட்டம் இழக்காமல் 54 ரன்னும் எடுத்தனர். மற்றபடி யாரும் சோபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 125 ரன்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் ஸ்டகெட்டி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது 3 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடைபெறுவதால் அதற்கு ஒத்திகையாக அமையும் விதத்தில் இந்த பயிற்சி ஆட்டமும் பகல்-இரவாக நடைபெறுகிறது.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் சீன் அப்போட், ஜோ பர்ன்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மார்க் ஸ்டகெட்டி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த பயிற்சி ஆட்டத்தில் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் பாதிப்படைந்த தொடக்க ஆட்டக்காரர் வில் புகோவ்ஸ்கி இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் டேவிட் வார்னர் ஆடாததால் அந்த இடத்துக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணி ஆலோசித்து வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய ஜோ பர்ன்ஸ் இந்த ஆட்டத்தில் ஜொலித்தால் வாய்ப்பை பெறலாம். கேமரூன் கிரீன், ஸ்வெப்சன் ஆகியோரும் தங்களது ஆட்டத்தை பொறுத்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
இந்திய ஆடும் லெவன் அணி இந்த ஆட்டத்தில் வீரர்கள் காட்டும் திறமையை வைத்து இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் இணைந்து களம் இறங்குவது பிரித்வி ஷாவா, சுப்மான் கில்லா, லோகேஷ் ராகுலா? என்பதற்கு இந்த ஆட்டத்தை வைத்து முடிவு காணப்படலாம். 5 சிறப்பு பவுலருடன் களம் இறங்குவதா? அல்லது 4 பவுலர் மற்றும் பகுதி நேர பவுலர், பேட்ஸ்மேனுமான ஹனுமா விஹாரியை சேர்க்கலாமா? என்பது குறித்தும் முடிவு செய்யப்படும். மற்றபடி அணியின் வழக்கமான இடங்களில் ஆடும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் விராட்கோலி விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ‘களம் இறங்கி விட்டு பாதியில் வெளியேறுவது தனக்கு பிடிக்காது என்றும் விளையாடினால் முழுமையாக விளையாடுவேன். உடல் தகுதி குறித்து அணியின் பிசியோதெரபிஸ்டுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன்’ என்று விராட்கோலி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அடுத்த மாதம் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவரை கவனிக்கும் பொருட்டு முதல் டெஸ்ட் முடிந்ததும் நாடு திரும்ப இருக்கும் அவர் டெஸ்ட் போட்டிக்கு நன்றாக தயாராக பயிற்சி ஆட்டத்தில் ஆடுவார் என்று நம்பப்படுகிறது. விராட்கோலி விளையாடாவிட்டால் ரஹானே அணியை வழிநடத்துவார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மாட்ரிட்டில் அரங்கேறிய ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி, மான்செங்பாக் (ஜெர்மனி) அணியை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் வலம் வந்தது. 9-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் லூகாஸ் வஸ்குஸ் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் கரிம் பென்ஜிமா தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார்.
31-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் கோல் அடித்தது. முதல் கோலை அடித்த கரிம் பென்ஜிமா இந்த கோலையும் தலையால் முட்டி அடித்து அசத்தினார். பதில் கோல் திருப்ப மான்செங்பாக் அணியினர் எடுத்த கடும் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செங்பாக் அணியை வீழ்த்தியது.
6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிராவும், 2 தோல்வியும் கண்டு இருந்த ரியல் மாட்ரிட் அணி இந்த வெற்றியின் மூலம் தனது பிரிவில் 3-வது இடத்தில் இருந்து அதிரடியாக முன்னேறி முதலிடத்தை (10 புள்ளிகள்) பிடித்ததுடன், கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றது. அத்துடன் லீக் சுற்றை ஒரு முறையும் கடக்காமல் இருந்தது இல்லை என்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டது. இதேபிரிவில் நடந்த இன்டர் மிலன் (இத்தாலி)-ஷக்தர் டான்ஸ்க் (உக்ரைன்) அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது.
‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் லோகோமோடிவ் (ரஷியா) அணியை தோற்கடித்து 5-வது வெற்றியை ருசித்ததுடன், முதலிடத்தையும் தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) 2-0 என்ற கோல் கணக்கில் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணியை சாய்த்து 2-வது இடத்தை பிடித்தது. இந்த பிரிவில் இருந்து பேயர்ன் முனிச் (16 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (9 புள்ளிகள்) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன.

மும்பை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் எஞ்சிய 3 டெஸ்டில் விளையாட மாட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வீராட் கோலி விளையாடாமல் போனது இந்திய அணிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வீராட் கோலி விட்டு செல்லும் வெற்றிடம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் கூறும்போது, ‘தனி ஒரு வீரரை நம்பி ஒரு அணி இருக்க முடியாது’ என்றார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வீராட் கோலி மாதிரி அனுபவ வீரர் பேட்டிங் வரிசையில் இல்லாதது இந்தியாவுக்கு பாதகம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேநேரத்தில் 11 வீரர்களும் சேர்ந்து விளையாடுவதுதான் கிரிக்கெட். தனி ஒரு வீரரை சார்ந்து ஒரு அணி இருக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் வீராட் கோலி விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்ப திறமை வாய்ந்த இளம் வீரர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்து இருக்கிறது. வேகப்பந்து, சுழற்பந்து என அனைத்திலும் வலிமையுடன் இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நாம் பந்துவீச்சு மூலம் சவால் கொடுப்போம்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
கடந்த முறை (2018-19)ஆஸ்திரேலியா மண்ணில் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது. சென்னை அணியில் ஜாகுப் சில்வெஸ்டர் 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
மும்பை அணி தரப்பில் ஹெர்னன் சந்தனா 45-வது நிமிடத்திலும், ஆடம் லி போன்ட்ரே 75-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த மும்பை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். முந்தைய ஆட்டத்திலும் அந்த அணி தோல்வி கண்டு இருந்தது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பார்சிலோனாவில் நடந்த ‘ஜி’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் (இத்தாலி)-பார்சிலோனா (ஸ்பெயின்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே யுவென்டஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதன் பலனாக 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்தார். 20-வது நிமிடத்தில் அந்த அணியின் இன்னொரு வீரர் வெஸ்டன் மெக்கென்னி ‘சிசர் கிக்’ மூலம் பந்தை கோலுக்குள் திணித்தார். இதனால் முதல் பாதியில் யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பதில் கோல் திருப்ப பார்சிலோனா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்சி உள்ளிட்ட அந்த அணி வீரர்கள் 7 முறை கோலை நோக்கி அடித்த ஷாட்களை யுவென்டஸ் அணியின் கோல் கீப்பர் பப்போன் அபாரமாக தடுத்து நிறுத்தினார். இதற்கிடையில் 52-வது நிமிடத்தில் கிட்டிய மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் கோல் அடித்தார்.
முடிவில் யுவென்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை பந்தாடியது. அத்துடன் கடந்த அக்டோபர் மாதத்தில் சொந்த மண்ணில் நடந்த பார்சிலோனாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்ட (0-2) தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. பார்சிலோனாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக யுவென்டஸ் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை. 2018-ம் ஆண்டில் யுவென்டஸ் அணிக்கு மாறிய பிறகு ரொனால்டோ, மெஸ்சியை களத்தில் எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் யுவென்டஸ், பார்சிலோனா அணிகள் தலா 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இருப்பினும் இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் மோதலில் அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் யுவென்டஸ் அணி முதலிடத்தை பிடித்தது. பார்சிலோனா அணி 2-வது இடத்தை தனதாக்கியது. இரு அணிகளும் தங்கள் பிரிவில் இருந்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின.
இதற்கிடையே இந்த போட்டி தொடரில் பாரீஸ்சில் நேற்று முன்தினம் நடந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)-இஸ்தான்புல் பசாக்செஹிர் அணிகள் இடையிலான ஆட்டம் 16-வது நிமிடத்தில் எழுந்த பிரச்சினையை அடுத்து கைவிடப்பட்டது. நடுவர் ஒருவர், இஸ்தான்புல் அணி வீரரை கருப்பு இனத்தை குறிக்கும் வகையில் பேசியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இரு அணியினரும் எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் இந்த ஆட்டம் பாதியில் முடிவுக்கு வந்தது.






