என் மலர்
விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வில்லியம்சன், போல்ட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். வில்லியம்சன் முதல் போட்டியில் ஆட மாட்டார். 2-வது மற்றும் 3-வது போட்டிக்கு கேப்டனாக இருப்பார். முதல் ஆட்டத்தில் சான்ட்னெர் கேப்டனாக பணியாற்றுவார்.
இதற்கிடையே கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாக நியூசிலாந்து பயணத்தில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
தமிழக கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்து வீசியவருமான வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. தனது மாயாஜாலா சிறப்பான பந்து வீச்சின் மூலம் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் உள்ள பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் காயத்தினால் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவரது திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் பேட் கம்மின்ஸ், சக அணி வீரர் ஸ்மித்திற்கு பந்து வீசாத சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவராக திகழ்கிறார். இவருக்கு பந்து வீச பெரும்பாலான பவுலர்கள் விரும்புவதில்லை. இவரை எளிதில் வீழ்த்துவது கடினம்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக பேட் கம்மின்ஸ் திகழ்கிறார். வேகம், பவுன்சர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைக்கிறார். இருந்தாலும் ஒரே அணியில் விளையாடுவதால் ஸ்மித்திற்கு பந்து வீசும் சூழ்நிலை அமையவில்லை. இது மகிழ்ச்சியானது என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘கடந்த வாரம் கேன் வில்லியம்சன் இரட்ரை சதம் அடித்ததை பார்த்தேன். ஆகவே, நியூசிலாந்தில் நான் விளையாடவில்லை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் விளையாட்டு என வரும்போது எதிரியாக நினைக்கும் எதிரணி பேட்ஸ்மேனை விட சற்று கூடுதல் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வீர்கள். பேட்ஸ்மேன் ஒருவர் ஆடுகளத்தில் விளையாட வரும் இதை நீங்கள் உணர்வீர்கள்.
இது ஒட்டுமொத்தமாக எப்படி பாதிக்கும் என்பது குறித்து நான் மிகப்பெரிய அளவில் சிந்தித்தது கிடையாது. நான் குழந்தை பருவத்தில் இருந்து வளரும்போது, டி.வி. ஆன் செய்தால், இந்த வகையிலான போட்டி நடக்கும்.
லாராவிற்கு மெக்ராத் பவுலிங் போடுவது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதால் நீங்கள் பார்ப்பீர்கள். இதுபோன்ற தருணத்தை நான் விரும்புகிறேன். இந்த சம்மர் சீசனில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்காவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் டி காக், தற்போது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டு பிளிஸ்சிஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான குயின்டான் டி காக் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவருடைய வேலைப்பளுவை (WorkLoad) கணக்கில் கொண்டு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியை கொடுக்காமல் இருந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம். இலங்கை அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 சீசனில் குயின்டான் டி காக் டெஸ்ட் அணி கேப்டனாகவும் இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. குயின்டான் டி காக், 2, டெம்பா பவுமா, 3. எய்டன் மார்கிராம், 4. டு பிளிஸ்சிஸ், 5. பெயுரான் ஹென்ரிக்ஸ், 6. டீன் எல்கர், 7. கேஷவ் மகாராஜ், 8. லுங்கி நிகிடி, 9. வான் டெர் டுஸ்சென், 10. அன்ரிக் நோர்ஜோ, 11. கிளென்டன் ஸ்டர்மன், 13. வியான் முல்டர், 14. கீகன் பீட்டர்சன், 15. கைல் வெரியின்.
இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. கொரோனா அதிகரித்து வந்த காரணத்தால் பயிற்சி ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு இங்கிலாந்து வீரர்கள் அவசரமாக சொந்த நாடு திரும்பினர். தொடர் தள்ளிவைக்கப்பட்டது.
அந்தத் தொடரை வருகின்ற ஜனவரி மாதம் நடத்த இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் திட்டமிட்டன. அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் டெஸ்டும், ஜனவரி 22-ந்தேதி 2-வது டெஸ்டும் காலே மைதானத்தில் நடக்கிறது. டெஸ்ட் போட்டியின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து விளையாடியுள்ள 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இடம் பெற்றும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டவருமான ஜானி பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்தியா டெஸ்ட் தொடரின்போது பங்கேற்பார்கள். இங்கிலாந்து அணி புத்தாண்டை முடித்துக்கொண்டு ஜனவரி 2-ந்தேதி இலங்கை புறப்படுகிறது.
16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி விவரம்:-
1. ஜோ ரூட் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜேம்ஸ் ஆண்டர்சன், 4. ஜானி பேர்ஸ்டோவ், 5. டோம் பெஸ், 6. ஸ்டூவர்ட் பிராட், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. சாம் கர்ரன், 10. பென் போக்ஸ், 11. டான் லாரன்ஸ், 12. ஜேக் லீச், 13. ஒல்லி ஸ்டோன், 14. கிறிஸ் வோக்ஸ், 15. மார்க் வுட்.
சிட்னியில் நடைபெற்று வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் தெறிக்க விட, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 108 ரன்னில் சுருண்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷுப்மான் கில் களம் இறங்கினர்.
பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர். பிரித்வி ஷா 29 பந்தில் 40 ரன்களும், ஷுப்மான் கில் 58 பந்தில் 43 ரன்களும் அடித்தனர்.
அதன்பின் வந்த அனைவரும் சொதப்பினர். பும்ரா தாக்குப்பிடித்து விளையாடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா 194 ரன்னில் சுருண்டது.
பின்னர் ஆஸ்திரேலியா ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜோர் பேர்ன்ஸை ரன்ஏதும் எடுக்கவிடாமல் டக்அவுட்டில் ளெியேற்றினார்.

அடுத்து வந்த நிக் மேடின்சன் 19 ரன்னிலும், மெக்டெர்மோட் டக்அவுட்டிலும் வெளியேறினர். மார்கஸ் ஹாரிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி 32 ரன்னில் ஆட்டமிழக்க அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்னில் சுருண்டது. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி பந்து வீச்சில் அனல் பறந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முகமது ஷமி, நவ்தீப் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் நாதன் கவுல்டர்-நைல் சிறப்பாக பந்து வீச, மேக்ஸ்வெல் அதிரடி காட்ட மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி பேட்டிங் செய்தது. நாதன் கவுல்டர்-நைல் சிறப்பாக பந்து வீசி பிரிஸ்பேன் ஹீட் அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.5 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
பின்னர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் ஹில்டன் கார்ட்ரைட் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 46 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 26 பந்தில் 46 ரன்களும் அடிக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீனியர் வீரரான இஷாந்த் சர்மா இந்திய அணியில் இல்லாதது, அந்த அணிக்கு பலவீனம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது, 2-1 எனத் தொடரை கைப்பற்றியது, அப்போது பும்ரா 21 விக்கெட்டும், ஷமி 16 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் இஷாந்த் சர்மா 3 போட்டியில் 11 வீழ்த்தினார்.
வருகிற 17-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடங்குகிறது. இந்த முறை இந்திய அணியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா காயத்தால் இடம் பெறவில்லை.
இஷாந்த் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனம்தன் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இஷாந்த் சர்மா குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா இல்லாதது இந்தியாவுக்கு அநேகமாக மிகப்பெரிய இழப்பாக இருக்கலாம். தற்போது அதிகமான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சிறந்த பந்து வீச்சாளர். அவர் இல்லாமல், இந்தியாவில் பந்து விச்சு வலுவிழந்து போகலாம். அவர்கள் இஷாந்த் சர்மாவுடன் விளையாட விரும்பியிருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
பும்ரா அடித்த பந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் தலையை பலமாக தாக்கியதால் கன்கசன் மூலம் வெளியேறினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற இந்தி போட்டியில், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி கார்த்திக் தியாகி பந்தால் தாக்கப்பட்டு கன்கசன் மூலம் வெளியெறினார்.
இன்று 2-வது பயிற்சி ஆட்டம் தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இது சிட்னி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முன்னணி வீரர்கள் சொதப்ப பும்ரா சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான கேமரூன் கிரீன் பந்து வீசினார். அப்போது கிபும்ரா அடித்த பந்து நேராக வந்தது. அதை கிரீன் பிடிக்க முயன்றார். பந்து கையில் சிக்காமல் வலது பக்கம் காதுக்கு மேல் தலையில் பலமாக தாக்கியது. இதனால் கிரீன் நிலைகுலைந்தார்.
ஆஸ்திரேலிய அணி மருத்துவர் பரிசோதித்தபோது, கிரீன் சற்று மயக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கன்கசன் (திடீர் தாக்குதலால் மூளையளர்ச்சி) மூலம் வெளியேறினார்.
கிரீன் முதல் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான கிரீன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வில் புகோவ்ஸ்கியும் விளையாடும் நிலையில் இருந்தார். தற்போது இருவரும் கன்கசன் மூலம் வெளியேற, ஆஸ்திரேலியா அணிக்கு சற்று பாதகத்தை கொடுத்துள்ளது.
காயம் அடைந்திருந்த ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்ததால், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். முதல் இரண்டு டெஸ்டில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த அவர், தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து, தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.
ஐபிஎல் தொடரின்போது தொடைப்பகுதியில் (ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி) காயம் ஏற்பட்டதால் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா செல்லவில்லை. இந்தியா திரும்பி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை மேற்கொள்ள சென்றார்.
அங்கு காயம் குணமடைந்து உடற்தகுதியை பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் உடற்தகுதியை ரோகித் சர்மா நிரூபித்துவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உடற்தகுதி பெற்ற ரோகித் சர்மா, நாளை அல்லது நாளைமறுநாள் ஆஸ்திரேலியா புறப்பட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா சென்ற பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் 17-ந்தேதி தொடங்கும் முதல் போட்டியிலும், 26-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ரோகித் சர்மா பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை.
ஆனால் ரோகித் சர்மா உடற்தகுதி பெற்றுவிட்டார் என்பதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சிட்னியில் இன்று தொடங்கிய பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 194 ரன்களில் சுருண்டது. பிரித்வி ஷா, ஷுப்மான் கில், பும்ரா தாக்குப்பிடித்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.
இந்த ஆட்டம் இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரித்வி ஷா 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த ஹனுமா விஹாரி 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டர் வரிசையில் ரகானா (4), ரிஷப் பண்ட் (5), சகா (0) சைனி (4), முகமது ஷமி (0) ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் சீன் அப்போட், ஜேக் வைல்டர்முத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி இலங்கையில் போட்டியை முடித்துவிட்டு, ஜனவரி 27-ந் தேதி சென்னை வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 60 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டி இருப்பதால், பெரும்பாலான போட்டிகள் ஒரே இடங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை, அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம மைதானத்தில் நடக்கிறது. பிப்ரவரி 5 முதல் 9-ந் தேதி வரையிலும், பிப்ரவரி 13 முதல் 17-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
3-வது (பகல்-இரவு) மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் (பிப்ரவரி 24-28, மார்ச் 4-8) நடக்கிறது.
20 ஓவர் போட்டிகள் அகமதாபாத்திலும் (மார்ச் 12, 14, 16, 18, 20), ஒருநாள் போட்டிகள் புனேயிலும் (மார்ச் 23, 26, 28) நடக்கிறது.
இதற்கிடையே முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டியை மொகாலியில் நடத்ததான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் இந்திய பந்துவீச்சுக்கு உகந்தது என்பதால் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னைக்கு வருவதுதான் மிகவும் எளிதானது. கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். இதன் காரணமாகவும் சென்னை சேப்பாக்கம் மைதானம் முதல் 2 டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெஸ்டில் இந்திய அணி இங்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இந்த டெஸ்டில்தான் கருன்நாயர் டிரிபிள் சதம் அடித்திருந்தார். ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஸ்டேடியத்துக்குள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த மாதம் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






