என் மலர்
விளையாட்டு

புனே:
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது
புனேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 329 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
ரிஷப்பண்ட் 62 பந்தில் 78 ரன்னும் ( 5 பவுண்டரி, 4 சிக்சர் ), தவான் 56 பந்தில் 67 ரன்னும் ( 10 பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யா 44 பந்தில் 64 ரன்னும் ( 5 பவுண்டரி , 4 சிக்சர் ) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 3 விக்கெட்டும் , ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், சாம் கரண் , டாப்ளே , பென் ஸ்டோக்ஸ் , மொய்ன் அலி, லிவ்விங் ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது வீரராக களம் இறங்கிய சாம் கரண் வெற்றிக்காக கடுமையாக போராடினார். அவர் 83 பந்தில் 95 ரன் எடுத்து ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். டேவிட் மலன் 50 ரன்னும், லிவ்விங்ஸ்டோன் 36 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டும் , நடராஜன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்தியா ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 66 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்று இருந்தது. 3 வடிவிலான தொடரையும் கைப்பற்றி சாதித்தது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து வீரர்களுக்கு கிடைத்தது. சாம் கரண் ஆட்டநாயகன் விருதையும், பேர்ஸ்டோவ் ( 3 ஆட்டத்தில் 219 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி அதிருப்தி அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும். அவருக்கு இந்த விருதை கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் 10 ஓவர் வீசி 67 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அதோடு 20 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இதேபோல தொடர்நாயகன் விருதை புவனேஷ்குமாருக்கு கொடுத்து இருக்க வேண்டும். அவர் 6 விக்கெட் கைப்பற்றினார். ரன்களை அதிகமாக கொடுக்காமல் சிக்கனமாக வீசினார்.
கேட்ச்களை நிறைய தவற விட்டோம். இது ஏமாற்றம் அளிக்கிறது. கேட்ச்களை தவற விடுவதால் சில சமயம் போட்டியின் முடிவே பாதகமாகிவிடும். எங்களது பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து விட்டனர்.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.
சர்வதேச போட்டிகள் முடிவடைந்ததால் இந்திய வீரர்கள் இனி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஆடுவார்கள். ஐ.பி.எல். போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழக வேகப்பந்து வீரர் நடராஜன் முக்கிய பங்கு வகித்தார்.
கடைசி ஓவரை அவர் சிறப்பாக வீசியதால் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் சாம்கரண் விளையாடினார். அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த ஓவரில் சாம்கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
இதையொட்டி நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகிறது. கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘‘கடைசி ஓவர்களை ஹர்திக்பாண்ட்யாவும், நடராஜனும் சிறப்பாக வீசினார்கள்’’ என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-
யார்க்கர் பந்து வீச்சு என்பது அழிந்து வருகிறது. உலகம் முழுக்க நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் யார்க்கர் பந்துவீச்சை, பவுலர்கள் சுலபமாக வீசுவார்கள் என நினைப்பீர்கள். இப்போது அதை துல்லியமாக வீசுவது கடினமானது. சரியாக வீசாவிட்டால், பந்து சிக்சருக்கு பறக்கும்.
பதட்டமான தருணத்தில் நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். சாம்கரண் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசப்பட்டது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கும் ஆட்டத்தில் நடராஜனின் இதயத்துடிப்பு எப்படி இருந்திருக்கும்? துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைசிவரை இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக போராடிய சாம்கரண் கூறும்போது, ‘‘கடைசி ஓவரை நடராஜன் சிறப்பாக வீசினார். அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார்’’ என்றார்.
இதேபோல சமூக வலை தளங்களிலும் நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
டெல்லியில் நேற்றுடன் நிறைவடைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி 15 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வியப்பூட்டினர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கத்தை அள்ளியது.
ஆண்களுக்கான டிராப் அணிகள் பிரிவில் கைனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான், லாக்ஷே ஷெரான் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர், மைக்கேல் ஸ்லம்கா, அட்ரியன் டிரோப்னி, பிலிப் மரினோவ் உள்ளிட்டோரை கொண்ட சுலோவக்கியா அணியை சந்தித்தனர். தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய இந்தியா அதன் பிறகு 4-4 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. கடைசி கட்ட ரவுண்டுகளில் இலக்கை துல்லியமாக சுட்ட இந்திய குழுவினர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர். வாகை சூடிய பிரித்விராஜ் தொண்டைமான் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பெண்கள் பிரிவிலும் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. இதில் ஸ்ரேயாசி சிங், ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை சுலபமாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. அதே சமயம் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 2-10 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
பதக்கப்பட்டியலில் மொத்தம் 22 நாடுகள் இணைந்துள்ளன. இதில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இது தான். அமெரிக்கா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம்) 2-வது இடத்தையும், இத்தாலி 2 தங்கம், 2 வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து மற்ற நாட்டு துப்பாக்கி சுடுதல் சம்மேளனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்த இந்திய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரனிந்தர் சிங், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு செய்யப்படும் என்றும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முறை 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 15 இடங்களுக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.238 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
எதிர்பார்த்தது போலவே நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 03.897 வினாடிகளில் வெற்றி பெற்று, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவரை விட 0.745 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று போட்டி வருகிற 18-ந்தேதி இத்தாலியில் நடக்கிறது.
இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து விட்டது.
இதற்கிடையே மராட்டிய மாநிலம் மும்பையில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.
இது குறித்து 47 வயதான தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்து இருக்கிறது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனக்கும், நாட்டில் உள்ள பலருக்கும் உதவிகரமாக இருந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மும்பை மற்றும் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில் தெண்டுல்கருடன் இணைந்து உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். யுவராஜ்சிங், ஷேவாக், இர்பான் பதான், முகமது கைப் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு உள்ளேன். தொடர்ந்து பரிசோதனையும் மேற்கொண்டு வந்தேன். இதில், சில லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனால், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்ற இருக்கிறேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்ரிநாத், சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் உடைமாற்றும் அறையை தெண்டுல்கர் மற்றும் யூசுப் பதானுடன், பத்ரிநாத் ஒன்றாக பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






