search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்ரிநாத்
    X
    பத்ரிநாத்

    தெண்டுல்கர், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து விட்டது.

    இதற்கிடையே மராட்டிய மாநிலம் மும்பையில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.

    இது குறித்து 47 வயதான தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்து இருக்கிறது.

    கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனக்கும், நாட்டில் உள்ள பலருக்கும் உதவிகரமாக இருந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் மும்பை மற்றும் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் தெண்டுல்கருடன் இணைந்து உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். யுவராஜ்சிங், ஷேவாக், இர்பான் பதான், முகமது கைப் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு உள்ளேன். தொடர்ந்து பரிசோதனையும் மேற்கொண்டு வந்தேன். இதில், சில லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அதனால், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்ற இருக்கிறேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்ரிநாத், சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் உடைமாற்றும் அறையை தெண்டுல்கர் மற்றும் யூசுப் பதானுடன், பத்ரிநாத் ஒன்றாக பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×