என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து விட்டது.

    இதற்கிடையே மராட்டிய மாநிலம் மும்பையில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.

    இது குறித்து 47 வயதான தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்து இருக்கிறது.

    கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனக்கும், நாட்டில் உள்ள பலருக்கும் உதவிகரமாக இருந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் மும்பை மற்றும் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் தெண்டுல்கருடன் இணைந்து உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். யுவராஜ்சிங், ஷேவாக், இர்பான் பதான், முகமது கைப் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு உள்ளேன். தொடர்ந்து பரிசோதனையும் மேற்கொண்டு வந்தேன். இதில், சில லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அதனால், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்ற இருக்கிறேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்ரிநாத், சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் உடைமாற்றும் அறையை தெண்டுல்கர் மற்றும் யூசுப் பதானுடன், பத்ரிநாத் ஒன்றாக பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 330 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    புனே:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
     
    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர்.  இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களிலும்,  ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்-டேவிட் மாலன் ஜோடி நிதானமாக விளையாடியது.
    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ள நிலையில் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 224 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்றைய 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 27 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    10-வது நாளான இன்று காலை ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் தங்க பதக்கத்துக்கான போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் விஜய்வீர்சித்து, குர்பிரீத்சிங், ஆதர்ஷ்சிங், அமெரிக்காவின் கீத் சாண்டர்சன், ஷாக் ஹாப்சன் லெவரெட், ஹென்றி டர்னர் ஆகியோரை கொண்ட அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 10-2 என்ற புள்ளி கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதனால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.


    இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    புனே:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் 1 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்:-

    ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், டி.நடராஜன், பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர்குமார், குர்ணால் பாண்ட்யா.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், அடில் ரஷித், மார்க்வுட், ரீஸ் டாப்லி.
    வங்காள தேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹேமில்டன்:

    வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடந்தது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. தேவன் கான்வாய் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 52 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

    வில்யங் 30 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 35 ரன்னும் (3 பவுண் டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அஃபிஃப் ஹொசைன் 45 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனால் மூன்று 20 ஓவர் கொண்ட போட்டி தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

    புனே:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இரு அணிகளும் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஒருநாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதேபோல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து ஆறுதலுக்காக ஒருநாள் தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.

    இந்த நிலையில் குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்ததை 2-வது போட்டியில் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளிவிட்டார்.

    குர்ணால் பாண்ட்யா 5-வது பந்து வீச்சாளராக இருக்க முடியாது. அவரை 10 ஓவர்கள் வீசும் ஒரு பவுலராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஆடுகளங்களில் யசுவேந்திர சாஹல் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை.

    ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யா இருவரும் இணைந்து 10 ஓவர்கள் வீச அனுமதிக்கலாம். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், 4-வது, 5-வது மற்றும் 6-வது பந்து வீச்சாளர்கள் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும்.

    புதுமுக வீரரான பிரசித் கிருஷ்ணா மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்து வீசுகிறார். எனவே அவரை டெஸ்ட் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    2-வது போட்டியில் குர்ணால் பாண்ட்யா 6 ஓவர் வீசி 72 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதையும் எடுக்கவில்லை. ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பந்துகூட வீசவில்லை.

    கவாஸ்கருக்கும், எனக்கும் இடையே எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத நிலையில் அவர் என்னை பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன் என பேர்ஸ்டோ கூறியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் 31 வயதான ஜானிபேர்ஸ்டோ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்சில் விளையாடி அதில் மூன்றில் டக்-அவுட் ஆகியிருந்தார். ‘களத்தில் பேர்ஸ்டோவின் பேட்டிங்கை பார்க்கும் போது அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது’ என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் டி.வி. வர்ணனையின் போது விமர்சித்தார்.

    தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பட்டைய கிளப்பி வரும் (94 ரன், 124 ரன்) பேர்ஸ்டோவிடம் கவாஸ்கரின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘முதலில் கவாஸ்கர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. இரண்டாவது, கவாஸ்கருக்கும், எனக்கும் இடையே எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத நிலையில் அவர் என்னை பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன், டெஸ்ட் போட்டியை எப்படி அனுபவித்து உற்சாகமாக விளையாடுவேன் என்பது குறித்து அவர் என்னிடம் போன் செய்து கேட்டால் அதை வரவேற்க தயாராக உள்ளேன். ஏற்கனவே சொன்னது போல் என்னுடைய செல்போனை ஆன் செய்து தான் வைத்துள்ளேன். அவர் விரும்பினால் எனக்கு போன் செய்தோ அல்லது மெசேஜ் அனுப்பியோ தாராளமாக பேசலாம்’ என்றார்.
    பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது.
    பாரீஸ்:

    ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 17-21, 17-21 என்ற நேர்செட்டில் 28 நிமிடங்களில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 18-21, 9-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத்-விஷ்ணு வர்தன் ஜோடி 21-17, 21-17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து இணையான காலும் ஹெம்மிங்-ஸ்டீவன் ஸ்டால்வுட்டை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா, 6-4 என்ற நேர்செட்டில் டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மேட்விடேவ் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் யென் ஹூன் லூவை (சீனதைபே) எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-1, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் 83-வது இடத்தில் இருக்கும் பின்லாந்தின் இமில் ருசுவோரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னர் (அமெரிக்கா), கச்சனோவ் (ரஷியா) வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் டாம்ஜனோவிச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். நவோமி ஒசாகா தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை அமன்டா அனிசிமோவாவிடம் வீழ்ந்து நடையை கட்டினார். இதேபோல் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 2-6, 1-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் லிட்மிலா சாம்சோனாவிடம் தோல்வியை தழுவினார். மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), மரியா சக்காரி (கிரீஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
    இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

    “இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 

    இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுகாதார பணியாளர்களுக்கும், நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்றிருந்தார். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், இருப்பினும் தனக்கு அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும் சச்சின் கூறியுள்ளார். அவர் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    சச்சினை தொடர்ந்து அவரது லெஜண்ட் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
    நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புனே:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் ஆறுதலுக்காக ஒருநாள் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

    நேற்றைய போட்டியில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இதை இந்தியாவை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் நன்றாக பயன்படுத்தி கொண்டனர்.

    பேட்டிங்கில் நன்றாக இருக்கும் இந்திய அணி பந்துவீச்சில் பலவீனத்துடன் காணப்படுகிறது. கடைசி ஆட்டத்தில் இதை சரி செய்வது அவசியமாகும். குல்தீப் யாதவ் நீக்கப்படலாம். 10 ஓவர் பந்து வீசிய அவர் நேற்று 84 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. முதல் ஆட்டத்திலும் இதே நிலை தான். இதனால் அவரது இடத்தில் யசுவேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெறலாம். மற்றபடி மாற்றம் எதுவும் இருக்காது.

    இங்கிலாந்து வீரர்கள் நேற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தொடக்க வீரர் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகள் நாளை மோதுவது 103-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 102 போட்டிகளில் இந்தியா 54-ல், இங்கிலாந்து 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய பகல்-இரவு ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 10 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.

    புனே:

    இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 52 பந்தில் 4 பவுண்டரி, 10 சிக்சருடன் 99 ரன் எடுத்தார்.

    இதன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். மார்கன் 17 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் 148 ரன் குவித்தார். பட்லர் 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 12 சிக்சர் அடித்தார்.

    குல்தீப் யாதவ் ஓவரில் 8 சிக்சர்கள் விளாசப்பட்டன. இதன் மூலம் அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்த 3-வது பவுலர் என்ற மோசமான நிலையை அவர் பெற்றார். ரஷீத்கான் 11 சிக்சர்களும், மொய்ன் அலி 9 சிக்சர்களும் விட்டுக் கொடுத்தனர்.

    ×