என் மலர்
விளையாட்டு

புனே:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் புனேவில் தொடங்குகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியை லோகேஷ் ராகுல் செய்தார். அவர் மேலும் 5-வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 43 பந்தில் 62 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் விக்கெட் கீப்பிங் செய்தால் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீங்கள் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கும் வரை எப்போதும் போட்டி அதிகமாகவே இருக்கும். அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இது ஒவ்வொருவரையும் சிறந்த விளங்க தூண்டுகோலாக இருக்கிறது. அணியில் உங்கள் இடத்தை நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்றால் உங்களால் வெளியே உட்கார முடியாது.
இது ஒரு நல்ல விஷயம். எங்கள் அணி மிகவும் திறமை வாய்ந்தது. வீரர்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அணியில் ஒரு வீரராக நீங்கள் உங்களை ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
ஒருநாள் போட்டியில் 5-வது வீராக களம் இறங்கியதால் 20 ஓவர் போட்டியில் செய்வதை (அதிரடி ஆட்டம்) விட இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருக்கலாம்.
சிறிது நேரத்துக்கு ஓரிரு நல்ல ஷாட்டுகளை அடித்ததால் சிறப்பாக விளையாடி முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெலிங்டன்:
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது.
டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது. டெவன் கான்வே (126 ரன் 110 பந்து, 17 பவுண்டரி) டேரில் மிட்செல் (100 ரன் 92 பந்து, 9பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் சதம் அடித்தார்.
இருவரும் ஒருநாள் போட்டியில் தங்களது முதல் சதத்தை பூர்த்தி செய்தனர். வங்காளதேச தரப்பில் ரூபல் ஹூசைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி வங்காளதேச அணி, நியூசிலாந்தின் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. வங்காளதேச அணி 25.3 ஓவரில் 82 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து இருந்தது. முகமது அப்துல்லா மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற வங்களாதேச அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3-வது ஒருநாள் போட்டியையும் வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனுபவ வீரர்களான அஸ்வின், ரகானே, சுமித் ஆகியோரின் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே மட்டும் அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார்.
விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னில் ஆல் அவுட்டானது. கார்ன்வெல் 61 ரன்னிலும், பானர் 31 ரன்னிலும், கேம்ப்பெல் 42 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டும், சமீரா மற்றும் பெர்னான்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
102 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமான்னே பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 76 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய ஒஷாடா பெர்னாண்டோ 91 ரன்னில் வெளியேறினார்.
இலங்கை புதுமுக வீரர் பதும் நிசன்கா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் டெஸ்டிலேயே அவர் செஞ்சுரி அடித்து சாதித்தார். 6-வது வீரராக ஆடிய நிசன்கா 103 ரன் குவித்தார்.
அந்த அணி 476 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் போனர் சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் வெளியேறினார். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டநாயகன் விருது போனருக்கு வழங்கப்பட்டது.. இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்தார். பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயற்சித்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்த போது, தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்தது. இந்திய அணியின் மருத்துவ குழுவினருடன் ஆலோசித்த ஸ்ரேயாஸ் அய்யர், காயத்துக்கு வருகிற 8-ந்தேதி ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார். ஆபரஷேன் நடந்தால் குறைந்தது 4 மாதங்கள் அவரால் விளையாட முடியாது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் அய்யர், வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் முழுமையாக விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்.-ல் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் கொரோனா தடுப்பு வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இது மிகப்பெரிய பின்னடைவு. அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது உங்களுக்கு தெரியும். வலிமையான வீரராக மீண்டு வருவேன். விரைவில் களம் திரும்புவேன். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய வேண்டி ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்துகளை படித்தேன். உங்களது அன்பையும், ஆதரவையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17-7 என்ற கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 10-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே இதன் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்து இருந்தனர். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் இறுதி சுற்றில் அஞ்சும் மோட்ஜில், ஸ்ரேயா சக்சேனா, காயத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 43-47 என்ற புள்ளி கணக்கில் போலந்து அணியிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் தகுதி சுற்று முடிவில் ஸ்வப்னில் குசேல், சைன் சிங், நீரஜ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலிடத்தை பிடித்தும், இஸ்வான் பெனி, ஜவான் பெக்லிர், பீட்டர் சிடி ஆகியோர் அடங்கிய ஹங்கேரி அணி 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா-ஹங்கேரி அணிகள் நேற்று மோத இருந்தன. ஆனால் ஹங்கேரி அணியின் வீரர் பீட்டர் சிடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியின் எஞ்சிய 2 வீரர்கள் அவருடன் இணைந்து போட்டியில் பங்கேற்க மறுத்து விட்டனர். இதனால் ஹங்கேரி அணி போட்டியில் இருந்து விலகியது. எனவே இறுதிப்போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கப்பதக்கத்துக்கான மோதலில் இந்திய அணி, 3-வது இடத்தை பிடித்த அமெரிக்க அணியை சந்திக்கிறது.
7-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 10 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.






