என் மலர்
விளையாட்டு
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 10-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் அரங்கேறுகிறது.
கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டி நடைபெறுவதாலும், கடும் கட்டுப்பாடுகள் எதிரொலியாவும் இந்த முறை எந்தவொரு அணிக்கும் சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. பொதுவான இடத்தில் தான் அனைத்து ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 5 லீக் ஆட்டங்கள் மும்பையில் நடக்கிறது. அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஐ.பி.எல். வரலாற்றில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதுடன் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதனால் கடும் விமர்சனத்தை சந்தித்த டோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனுக்கு ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடம் இருந்து பரிமாற்றம் மூலம் வாங்கியது. அத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த் ஆகிய வீரர்களை தன்வசப்படுத்தி தனது பலத்தை அதிகரித்துள்ளது.
இந்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கி 2 வாரம் நடந்தது. டோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சென்னை அணி விமானம் மூலம் நேற்று மும்பை சென்றது. மும்பையில் நடைபெறும் முதல் கட்ட லீக் ஆட்டங்களுக்கு தயாராக அங்குள்ள ஸ்டேடியத்தில் இன்று முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.
தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த சீசனில் கடைசி நேரத்தில் சென்னை அணியில் இருந்து விலகிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்த முறை களம் இறங்க ஆவலுடன் உள்ளார். மும்பை சென்றுள்ள அவர் அங்குள்ள ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 7 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும் அவர் அணியினருடன் இணைகிறார். இதேபோல் சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்களும் விரைவில் பயிற்சி முகாமில் இணைய இருக்கின்றனர்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு போட்டிக்கு பிறகு டோனி எங்களிடம் பேசுகையில் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு மார்ச் மாதம் சென்னை வந்து விடுவேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் சொன்னபடியே வந்து பயிற்சியை தொடங்கினார். இந்த சீசனுக்காக எங்கள் அணி நன்றாக தயாராகி இருக்கிறது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என நாங்கள் மிகவும் நம்புகிறோம்’ என்றார்.
புனே:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் நாளை (26-ந் தேதி) பகல்-இரவாக நடக்கிறது.
இந்த ஆட்டத்திலும் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தவான், லோகேஷ் ராகுல், கேப்டன் வீராட் கோலி, குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
தங்களது முதல் ஆட்டத்திலேயே குர்னால் பாண்ட்யாவும், பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்திருந்தனர்.
ஸ்ரேயாஷ் அய்யர் காயம் அடைந்து விலகி உள்ளதால், அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் அல்லது ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் ஸ்ரேயாஷ் அய்யர் இடத்தில் களம் இறங்கலாம். ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால், ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு குறைவே.
ரிஷப்பண்ட் சமீப காலமாகவே சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் அவருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் நிலையும் இருக்கிறது. அவர் இடம் பெற்றால் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். ராகுலும் இருப்பார்.ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அணி நிர்வாகம் இதுகுறித்து முடிவு செய்யும்.
இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே அந்த அணி டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்ததால், நாளைய ஆட்டத்தில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடுவார்கள்.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கேப்டன் மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கேப்டன் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே.
இரு அணிகளும் நாளை மோதுவது 102-வது ஆட்டம் ஆகும். இதுவரை நடந்த 101 போட்டியில் இந்தியா 54-ல், இங்கிலாந்து 42-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 271 ரன் எடுத்தது. 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 153 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.
அந்த அணி 476 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை புதுமுக வீரர் பதும் நிசன்கா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் டெஸ்டிலேயே அவர் செஞ்சுரி அடித்து சாதித்தார். 6-வது வீரராக ஆடிய நிசன்கா 103 ரன்னும், டிக்வெலா 96 ரன்னும், பெர்னாண்டோ 91 ரன்னும், திரிமானே 76 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச், கார்ன்வால் தலா 3 விக்கெட்டும் , கெய்ல் மேயர்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
375 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து இருந்தது.
கேம்பெல் 11 ரன்னில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டம் இழந்தார். பிராத் வெயிட் 8 ரன்னும், போனெர் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் இன்று தொடங்குகிறது. 2011-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடிய போது, அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.
முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓட உள்ளனர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது. இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தீபம் ஓட்டம் பெருத்த ஆர்ப்பரிப்புடன் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் சமூக இடைவெளி, கட்டாயம் முககவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வருகிற 9-ந்தேதி தொடங்கும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை புதிய சீருடையுடன் களம் இறங்குகிறது. 2008-ம் ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான சீருடையுடன் வலம் வந்த சென்னை அணி முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது. தேசத்தை பாதுகாக்கும் ராணுவ படையினரை கவுரவிக்கும் வகையில் ராணுவ சீருடைக்குரிய நிறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீருடையின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘ராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் எங்கள் அணியின் சீருடையில் ராணுவ சீருடையின் வண்ணத்தை இணைத்துள்ளோம். ராணுவ வீரர்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்’ என்றார்.
புதுடெல்லி:
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என ஆக மொத்தம் 15 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது.
இன்று காலை இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் தங்கம் கிடைத்தது. இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் இதை பெற்றுக் கொடுத்தார். போபாலை சேர்ந்த 20 வயதான அவர் 462.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். தோமர் ஏற்கனவே ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான சஞ்சீவ் ராஜ்புத், நீரஜ்குமார் ஆகியோரால் 5 மற்றும் 8-வது இடங்களையே பிடிக்க முடிந்தது.
ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் பெனி 461.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும், டென்மார்க்கை சேர்ந்த ஸ்டீபன் ஒல்சன் 450.9 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
அதன்பின்னர் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தங்கம் வென்று அசத்தினார். ராகி சர்னோபத் வெள்ளிப்பதக்கம், மனு பாகெர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்த பிரிவில் 3 பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்து வரும் இந்திய அணிக்கு விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இன்டீஸ் - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இன்டீஸ் 271 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இது இலங்கையின் ஸ்கோரை விட 102 ரன் கூடுதலாகும். 102 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து இருந்தது.
பெர்னான்டோ 91 ரன்னும், திரிமானே 76 ரன்னும், தனஞ்செய டிசெல்வா 46 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்து இருந்தனர்.
இலங்கை அணி தற்போது 153 ரன் முன்னிலையில் உள்ளது. கைவசம் 6 விக்கெட் டுகள் இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். தங்களது முதல் போட்டியிலேயே இருவரும் சாதனை புரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
30 வயதான குர்னால் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆல்ரவுண்டரான அவருக்கு முதல் முறையாக நேற்று ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
7-வது வீரராக களம் இறங்கிய அவர் 31 பந்தில் 58 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். குர்னால் பாண்ட்யா 26 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிவேகத்தில் 50 ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு நியூசிலாந்து வீரர் ஜான்மோரிஸ் இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப்போட்டியில் 35 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். அவரது 31 ஆண்டுகால சாதனையை குர்னால் பாண்ட்யா முறியடித்தார்.
25 வயதான பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அவர் 8.1 ஓவர் வீசி 54 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரசித் கிருஷ்ணா படைத்தார்.
இதற்கு முன்பு நோயல்டேவிட், வருண் ஆரோன், சுபர்தோ பானர்ஜி, ஹர்த்திக் பாண்ட்யா, திலிப் தோசி, டினுயோகனன், பூபேந்தர்சிங் சீனியர், பி.சந்திரசேகர், பியூஸ் சாவ்லா ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் 3 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
பிரசித் கிருஷ்ணாதான் முதல்முறையாக அறிமுக போட்டியில் 4 விக்கெட்டை கைப்பற்றி முத்திரை பதித்தார்.
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது.
தொடக்க வீரர் ஷிகர்தவான் 106 பந்தில் 98 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), லோகேஷ் ராகுல் 43 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), குர்னால் பாண்ட்யா 31 பந்தில் 58 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 56 ரன்னும் எடுத்தனர்.
பென்ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 251 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 66 பந்தில் 94 ரன்னும் (6 பவுண்டரி, 7 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜேசன்ராய் 35 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
பிரசித்கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷர்துல்தாகூர் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், குர்னால் பாண்ட்யா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பெற்ற மிகவும் இனிமையான வெற்றிகளில் ஒன்றாகும். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளும் சிறப்பாக இருந்தது.
பிரசித்கிருஷ்ணாவும், குர்னால் பாண்ட்யாவும் தங்களது அறிமுகப் போட் டியிலேயே அபாரமாக செயல்பட்டனர். ஷர்துல்தாகூர், புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. பேட்டிங்கில் தவான், ராகுல் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார்கள். ராகுலும், குர்னால் பாண்ட்யாவும் அதிரடியாக ஆடியதால் அதிகளவில் ரன்களை குவிக்க முடிந்தது.
வீரர்களின் திறமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு இடத்திற்கும் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-
ஆடுகளம் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் காணப்பட்டது. அதே சமயம் சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் பெரிய ஸ்கோரை குவிக்கலாம். 10, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்பதை சிறந்ததாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறு மார்கன் கூறினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 26-ந் தேதி புனேயில் நடக்கிறது.
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 56 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அவர் சர்வதேச போட்டிகளில் சொந்த மண்ணில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார். 195 ஆட்டத்தில் அவர் 10 ஆயிரம் ரன்னை கடந்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங் 219 போட்டிகளில் இந்த சாதனையை படைத்து இருந்தார்.
சொந்த மண்ணில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் கோலி ஆவார். சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14,192 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டியை 3-1 என்ற கணக்கிலும், டி 20 போட்டியை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் 30 வயதான குருணால் பாண்ட்யா சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.
அதன்பிறகு களம் இறங்கி 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான்.
இதற்கு முன் 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 31 ஆண்டு கால சாதனையை குருணால் பாண்ட்யா முறியடித்தார்.
இன்னிங்ஸ் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுவனம் அவரிடம் பேட்டி கண்ட போதும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது தந்தை கடந்த ஜனவரி மாதம் மறைந்தார். அந்த சோகத்தை நினைத்து உருகிய குருணால் பாண்ட்யாவுக்கு பேச முடியாமல் நாக்கு தழுதழுத்தது.
அரை சதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியபடி கண்ணீர் சிந்தினார். பிறகு அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா், அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.
போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தனது தந்தையை நினைவுபடுத்தி குருணால் பாண்ட்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன். எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிக பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன். இது உங்களுக்கானது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கானது என பதிவிட்டுள்ளார்.






