என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
    கேப் டவுன்:

    இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. 

    இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்  மூலம் அவர் பேட்ஸ்மேனை 97 முறை  (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 25 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.

    முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.

    ரிஷப் பண்ட், எம்.எஸ்.டோனியின் சாதனையை தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில்  தமிழகம் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  310 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜாக்சன் 134 ரன்கள் குவித்து அவுட்டானார். விஷ்வராஜ் ஜடேஜா 52 ரன்னும், வாசவதா 57 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டும், சிலம்பரசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 50 ரன்னில் அவுட்டானார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 70 ரன் எடுத்தார். மிகவும் பரபரப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை தமிழக அணி எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில், சர்வீசஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழகம் மற்றும் இமாசல பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

    குல்தீப் யாதவ் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் வெளிநாட்டில் சுழற்பந்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்து தன்னை காயப்படுத்தியதாக தெரிவித்தார்.

    2019-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அப்போது இந்திய அணி பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி, குல்தீப் யாதவை புகழ்ந்து பேசினார். அவர் கூறும்போது, “ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலத்தில் முடிவு வரும். தற்போது குல்தீப் யாதவ் காலம் தொடங்கி விட்டது. வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் குல்தீப்தான் நம்பர் ஒன் பவுலர்” என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறும்போது, “ரவிசாஸ்திரி மீது அதிக மதிப்பு உள்ளது. ஆனால் அவர் பேட்டி கொடுத்த அந்த வினாடியில் நான் முற்றிலும் நொறுங்கி விட்டேன். சக வீரர்கள் வெற்றியில் மகிழ்ச்சி கொள்பவன் நான். குல்தீப் சிறப்பாக செயல்பட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.

    ஒரு வீரரை புகழ்வதற்காக மற்றவரை கீழே தள்ளக் கூடாது. ரவிசாஸ்திரி கூறிய கருத்து என்னை பஸ்சுக்கு கீழே தள்ளி விட்டது போல் இருந்தது. ஆனாலும் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். ஏனென்றால் அது எனது அணியின் வெற்றி என்று கூறினார்.

    இந்த நிலையில் அஸ்வின் கூறிய கருத்துக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு பயிற்சியாளராக ஒரு வி‌ஷயத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரின் ரொட்டியிலும் வெண்ணையை தடவி விடுவது எனது பணி அல்ல. பயிற்சியாளராக எனது பொறுப்பு. அனைவருக்கும் பிடித்தாற்போல் பேசுவது அல்ல. எனது வேலை உண்மையை சொல்வதுதான்.

    பயிற்சியாளர் ஒருவரை அழைத்து சவால் விட்டால் இனி நான் பயிற்சிக்கே செல்ல மாட்டேன் என்று வீட்டில் படுத்து அழுவது ஒரு ரகம். ஆனால் என்னை போன்றோர் அவர்களின் சவாலை நிறைவேற்றி காட்டுவேன் என்று உழைப்பது ஒரு ரகம்.

    சிட்னியில் நடந்த டெஸ்டில் குல்தீப் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். வெளிநாட்டில் முதல் அல்லது 2-வது டெஸ்டில் விளையாடும் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை பாராட்டினேன்.

    அப்படி அவர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் வெளிநாட்டில் சுழற்பந்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என்றேன்.

    எனது கருத்து அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அது அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைக்கும்.

    பஸ்சுக்கு அடியில் அஸ்வினை தள்ளி விட்டேன்தான். ஆனால் அதுபற்றி அஸ்வின் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் டிரைவரிடம் பஸ்சை இரண்டு அடிக்கு முன்பே நிறுத்த சொல்லி விட்டேன். இதனால் அஸ்வின் நொறுங்க மாட்டார்.

    நான் அன்று அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் அஸ்வின் தனது உடற் தகுதியை மேம்படுத்தி இன்று உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளராக இருக்க மாட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அஸ்வினையும், தற்போது உள்ள அஸ்வினையும் பாருங்கள். உண்மையை சொல்லி வீரர்களின் திறமையை வெளிகொண்ட வருவதே எனது பணி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், கடைசியாக இந்திய அணிக்காக 2016-ம் ஆண்டு விளையாடினார்.
    இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    ஹர்பஜன் சிங்

    1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

    ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டும், 28 டி20 போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
    தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது.

    இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் (தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக) சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணி தனது முதல் ஆட்டத்தில் யு மும்பை அணியிடம் தோற்றது.

    இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை- தபாங் டெல்லி அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
    உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமானது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.

    டுவான் ஒலிவியர்

    உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்த தொடர் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடர் இருக்கும். இது ஒரு உற்சாகமான சவால். விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமாக இருக்கும். ஆனால் அதை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன்.

    உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன். என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சிறப்பாக செயல்படுவது முக்கியம்.

    இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    கேப் டவுன்:

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் அடித்துள்ளார்.  தற்போது வரை 27 சதங்கள், 27 அரை சதங்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரில் 199 ரன்கள் அடித்தால் 8,000 ரன்கள் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.

    இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சேவாக் ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

    27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    துபாய்:

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நேற்று தொடங்கியது.

    இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று எதிர்கொண்டது. டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையில் களம் இறங்கியது. 

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இந்தியா 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்நூர் சிங் 120 ரன்கள் எடுத்தார். கேப்டன் யாஷ் துல் அரை சதமடித்து 63 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    லங்கா பிரீமியர் லீக்கில் காலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ, காட்மோர் ஆகியோர் அரைசதமடித்து அசத்தினர்.
    ஹம்பந்தோட்டா:

    லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். காட்மோர் 57 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் குர்பாஸ் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  

    இதையடுத்து, 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே கிளாடியேட்டர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் 39 ரன் எடுத்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இறுதியில், காலே கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    ஜாஃப்னா அணி சார்பில் வஹிந்து ஹசரங்கா, சதுரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.

    தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.
    பெங்களூர்:

    8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை, பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், உ.பி.யோதா, அரியானா ஸ்டீல்சர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றன.

    தொடக்க ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதின. இதில் மும்பை 46-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

    அதைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் வீரர்கள் கோட்டை விட்டனர்.

    3-வதாக நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- உ.பி.யோதா அணிகள் மோதின. இதில் பெங்கால் வாரியர்ஸ் 38-33 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

    பெங்கால் வாரியர்ஸ் தரப்பில் இஸ்மாயில் 11 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும், மணீந்தர் சிங் 7 புள்ளிகளும் எடுத்தனர். உ.பி.யோதா அணி சார்பில் பர்தீப் நர்வால் அதிகபட்சமாக 8 புள்ளி எடுத்தார்.

    இன்றும் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத்- ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன. 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி- புனே, 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா- பாட்னா அணிகள் மோதுகின்றன. 
    விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர் என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலி டெஸ்டுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் தான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் சரியாக இருக்காது என்று கருதியே தேர்வுக்குழு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தாகவும் அவர் தெரிவித்தார். இது கூட்டு முடிவு என்றும் அவர் கூறி இருந்தார்.

    கங்குலியின் கருத்துக்கு நேர்மாறாக கோலி இதற்கு விளக்கம் அளித்தார். 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகும் முடிவுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிந்தது.

    தென் ஆப்பிரிக்க தொடர் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் மவுனம் காத்து வருகிறது. கோலியிடம் இருந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர், முன்னாள் வீரர் மதன்லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கேப்டன் ஷிப் குறித்து தேர்வுக்குழு தலைவர்தான் பேச வேண்டும். இதில் கங்குலிக்கு எந்த வேலையும் இல்லை என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.

    முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு தேர்வுக்குழு சார்பில் கருத்து தெரிவிக்க எந்த வேலையும் இல்லை. வீரர்கள் தேர்வு அல்லது கேப்டன்ஷிப் குறித்த எந்த பிரச்சினையையும் தேர்வுக்குழு தலைவர்தான் பேசவேண்டும்.

    கிரிக்கெட் வாரியமும், தேர்வுக்குழுவினரும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள். ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் சரியாக இருக்காது என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன்.

    ஒரு கேப்டன் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அல்லது நீக்கப்படுகிறார். இது கங்குலியின் அதிகார வரம்பு அல்ல. இந்த சூழ்நிலையை கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. சிறப்பான முறையில் கையாண்டு இருக்க வேண்டும்.

    விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். அவரை மதித்திருக்க வேண்டும். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர்.

    இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறி உள்ளார். 

    தென்ஆப்பிரிக்கா தொடரில் முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி, கேம் சேஞ்சராக முகமது ஷமி திகழ்வார் என ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா மண்ணில அசத்தி வேகப்பந்து வீச்சாளர்களின் இந்தியாவில்  ஜாகீர்கானும் ஒருவர்.

    8 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 2013-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார். டர்பனில் 2010-ம் ஆண்டு 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அனுபவம் வாய்ந்த ஜாகீர் கான், தென்ஆப்பிரிக்கா தொடரில் முகமது ஷமி பந்து வீச்சில் முக்கிய வீரராக திகழ்வார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘ஜோகன்னஸ்பர்க்கில் நீங்கள் விளையாடும்போது, 1753 மீட்டர் உயரத்திற்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவது சவாலான ஒன்று. ஒவ்வொரு பந்து வீச்சாளர்களும் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய உடற்தகுதிக்கு இந்த உயரம் ஒரு பரிசோதனை.

    அதை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள்  மகிழ்ச்சியாக பந்து வீசலாம். ஏனென்றால், ஆடுகளங்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக இருக்கும். இந்திய பந்து வீச்சாளர்கள் சாவல்களை எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன்.

    முகமது ஷமி

    முகமது ஷமியின் வெற்றியை பார்க்கும்போது எனக்கு மிகப்பெரியதாக தெரிகிறது. அவருடைய பயணம் மிகச் சிறந்தது. அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் சிறந்த பவுலராக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    முகமது ஷமி அபாரமான சாதனை பெற்றுள்ளார். பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார். முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவதுதான் அவருடைய சிறப்பம்சம்.

    அவர் கேம்-சேஞ்சிங் பவுலர். மற்ற பந்து வீச்சாளர்களும் ஒரு ஸ்பெல்லில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினால் போட்டியில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு இருக்கும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அந்த திறமை ஷமியுடன் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர் என்றால் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை’’ என்றார்.
    ×