search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா இந்தியா தொடர்"

    • இந்திய அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    கெபேஹா:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.

    இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்த பயிற்சியில் ஈடுபட வசதியாக ஒதுங்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரிங்கு சிங் புதுமுக வீரராக இடம் பிடித்தார்.

    தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோ நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் (4 ரன்) நன்ரே பர்கர் வீசிய அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிட்டவில்லை. அடுத்து வந்த திலக் வர்மா 10 ரன்னில் நடையை கட்டினார்.

    இதைத் தொடர்ந்து கேப்டன் லோகேஷ் ராகுல், தொடக்க வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 65 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவர் தொடர்ச்சியாக அடித்த 2-வது அரைதம் இதுவாகும். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் தளர்ந்து போனது.

    அணியின் ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது (26.2) சாய் சுதர்சன் (62 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) லிசாத் வில்லியம்ஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் சிக்கினார். அதன் பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சஞ்சு சாம்சன் 12 ரன்னில் போல்டு ஆனார். மறுமுனையில் 18-வது அரைசதம் விளாசிய லோகேஷ் ராகுல் 56 ரன்னிலும் (64 பந்து, 7 பவுண்டரி) ரிங்கு சிங் 17 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

    அக்ஷர் பட்டேல் (7 ரன்), குல்தீப் யாதவ் (1 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 ரன்), அவேஷ் கான் (9 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. 46.2 ஓவர்களில் இந்திய அணி 211 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் நன்ரே பர்கர் 3 விக்கெட்டும், பீரன் ஹென்ரிக்ஸ், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    பின்னர் 212 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு டோனி டி ஜோர்ஜியும், ரீஜா ஹென்ரிக்சும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். ஹென்ரிக்ஸ் 52 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வான்டெர் டஸன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய டோனி டி ஜோர்ஜி 109 பந்தில் தனது முதலாவது சதத்தை எட்டினார்.

    தென்ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி டி ஜோர்ஜி 119 ரன்களுடனும் (122 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் மார்க்ரம் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. கடைசி ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    ×