search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெங்சர்க்கார் - கங்குலி
    X
    வெங்சர்க்கார் - கங்குலி

    கங்குலிக்கு எந்த வேலையும் இல்லை: தேர்வுக்குழு தலைவர் தான் கேப்டன் குறித்து பேச வேண்டும் - வெங்சர்க்கார்

    விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர் என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலி டெஸ்டுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் தான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் சரியாக இருக்காது என்று கருதியே தேர்வுக்குழு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தாகவும் அவர் தெரிவித்தார். இது கூட்டு முடிவு என்றும் அவர் கூறி இருந்தார்.

    கங்குலியின் கருத்துக்கு நேர்மாறாக கோலி இதற்கு விளக்கம் அளித்தார். 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகும் முடிவுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிந்தது.

    தென் ஆப்பிரிக்க தொடர் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் மவுனம் காத்து வருகிறது. கோலியிடம் இருந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர், முன்னாள் வீரர் மதன்லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கேப்டன் ஷிப் குறித்து தேர்வுக்குழு தலைவர்தான் பேச வேண்டும். இதில் கங்குலிக்கு எந்த வேலையும் இல்லை என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.

    முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு தேர்வுக்குழு சார்பில் கருத்து தெரிவிக்க எந்த வேலையும் இல்லை. வீரர்கள் தேர்வு அல்லது கேப்டன்ஷிப் குறித்த எந்த பிரச்சினையையும் தேர்வுக்குழு தலைவர்தான் பேசவேண்டும்.

    கிரிக்கெட் வாரியமும், தேர்வுக்குழுவினரும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள். ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் சரியாக இருக்காது என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன்.

    ஒரு கேப்டன் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அல்லது நீக்கப்படுகிறார். இது கங்குலியின் அதிகார வரம்பு அல்ல. இந்த சூழ்நிலையை கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. சிறப்பான முறையில் கையாண்டு இருக்க வேண்டும்.

    விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். அவரை மதித்திருக்க வேண்டும். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர்.

    இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறி உள்ளார். 

    Next Story
    ×