என் மலர்
விளையாட்டு
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மொகாலி:
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
இலங்கை: திமுத் கருணாரத்னே (கே), லஹிரு திரிமான்னே, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமாரா.
ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தியுள்ளார்.
கவுகாத்தி:
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
கவுகாத்தியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தமிழக அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கௌஷிக் காந்தி 10 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய பாபா அபராஜித் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பாபா இந்திரஜித் நிலைத்து நின்று விளையாடினர். அவருக்கு சாய்கிஷோர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
அவர் 132 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இந்திரஜித் ஆட்டமிழந்தார். அதேபோல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சாய் கிஷோர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் தமிழக அணி 7 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. நாராயண் ஜெகதீஷன் 10 ரன்னுடனும் முகமது 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் அணி சார்பில் ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், அங்குல் ராய் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மொகாலி:
இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன்.
எனவே, நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியல்: அக்ஸர் , சிராஜ், ஸ்ரேயாஸ் முன்னேற்றம்
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன.
கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடி, இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பை வென்றுள்ளன.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. இதை சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்டது. மகளிர் கிரிக்கெட்டைக் குறிப்பிடும் வகையில் அது அமைந்திருந்தது.
இதையும் படியுங்கள்...டி20 கிரிக்கெட் ஐ.சி.சி.தர வரிசை பட்டியல் - 15 இடத்திற்கு தள்ளப்பட்டார் கோலி
டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
சென்னை:
நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் நடைபெறும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் எஸ்.ஆர்.எம். , எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்ய பாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம், பி.கே.ஆர், எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம், பாரதியார் கிளப் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஏ.கே.சித்திர பாண்டியன் நினைவு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை போட்டி அமைப்புக் குழுச் செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட வலுதூக்குதல் சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.
சென்னை:
சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்கம் மற்றும் மெர்வின் பிட்னஸ் மையம் சார்பில் சென்னை மாவட்ட பெஞ்ச் பிரஸ் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி வில்லிவாக்கத்தில் நடந்தது.
சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். இதில் மேக்ஸ்ஜிம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பட்டத்தை பெற்றது.மெர்வின் பிட்னஸ் மையம் 2-வது இடத்தையும், ஆக்சி ஜென் ஜிம் 3-வது இடத்தை பிடித்தது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மொகாலி:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா -இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மொகாலியில் நாளை (4-ந் தேதி) தொடங்குகிறது.
ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து 3 வடிவிலான போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்டில் விளையாடி (டிசம்பர்-ஜனவரி) 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துடன் (நவம்பர்-டிசம்பர்) டெஸ்டில் விளையாடியது. 2 போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே கடைசியாக 2017-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்தது. சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இந்த டெஸ்ட் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் விராட் கோலிக்கும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் அவருக்கு இது 100-வது டெஸ்டாகும்.
புஜாரா, ரகானே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக முதல் முறையாக இந்திய அணி டெஸ்டில் விளையாட உள்ளது.
இதனால் புஜாராவின் 3-வது வரிசையிலும், ரகானேவின் 5-வது இடத்திலும் யார் இடம் பெறப் போகிறார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
புஜாரா, ரகானே இடத்துக்கான போட்டியில் சுப்மன் கில், விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இருக்கிறார்கள்.
ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். 3-வது வரிசையில் சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெறலாம். விராட்கோலி 4-வது வரிசையில் ஆடுவார். 5-வது வீரராக ரிஷப்பண்ட் விளையாடலாம். ஒருவேளை அவர் தனது வரிசையான 6-ம் நிலையில் ஆடினால் விகாரிக்கு 5-வது இடம் கிடைக்கலாம்.
சுழற்பந்து வீரர்களில் ஜடேஜா, அஸ்வின், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ஷமி , உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ் இடம்பெறுவார்கள். குல்தீப் யாதவ் இடம்பெற்றால் ஒரு வேகப்பந்து வீரர் கழற்றி விடப்படுவார்.
20 ஓவர் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிக்கும். கருணாரத்னே தலைமையிலான அந்த அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 45-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 44 போட்டியில் இந்தியா 20-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 17 டெஸ்ட் டிரா ஆனது.
இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை தீபக் சாஹர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில் தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சென்னை அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.
கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.
இந்த காயம் குணமடைய குறைந்தது 8 வார காலம் ஆகும் என்றும், அதனால் அவர் ஐ.பி.எல்.-ல் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்களை தவற விடுவார் என்றும் கிரிக்கெட் வாரிய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதில் 2 முறை 2-வது இடத்தை (2005, 2017) பிடித்ததே சிறந்த நிலையாகும்.
மவுண்ட் மவுன்கானு:
ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன.
கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.
12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 7 ஆட்டத்தில் விளையாடும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
வருகிற 28-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. அரையிறுதி ஆட்டங்கள் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி ஏப்ரல் 3-ந் தேதியும் நடக்கிறது.
நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதில் 2 முறை 2-வது இடத்தை (2005, 2017) பிடித்ததே சிறந்த நிலையாகும்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 6-ந் தேதி எதிர்கொள்கிறது.
நியூசிலாந்துடன் 10-ந் தேதியும், வெஸ்ட் இண்டீசுடன் 12-ந் தேதியும், இங்கிலாந்துடன் 16-ந் தேதியும், ஆஸ்திரேலியாவுடன் 19-ந் தேதியும், வங்காளதேசத்துடன் 22-ந் தேதியும், தென் ஆப்பிரிக்காவுடன் 28-ந் தேதியும் மோதுகிறது.
இந்தியா மோதும் அனைத்து ஆட்டங்களும் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
தரவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 3 ஆட்டங்களிலும் அவர் அரைசதம் அடித்ததால் தர வரிசையில் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு டி20 தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே போல் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 4 இடம் குறைந்து 10-வது இடத்துக்கு பின்தங்கினார்.
ரோகித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வேக பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, ஏ.டி.கே. மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.
கோவா:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 8-வது போட்டி தொடர் கோவாவில் நடை பெற்று வருகிறது. நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.
கேரளா அணி தரப்பில், சஹல் சமத் ஒரு கோல் அடித்தார். மற்றொரு வீரர் அல்வரோ 2 கோல்களை பதிவு செய்தார். மும்பை சிட்டி அணி வீரர் டியாகோ தமது அணிக்காக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்தது. இதன் மூலம் 9-வது வெற்றியை பெற்றுள்ள அந்த அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மும்பை:
சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை, கிரேட் ஏ+, ஏ, பி, சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.
இதில், கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் நீடிக்கின்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஏ பிரிவில் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த இஷாந்த் சர்மா, ரஹானே, புஜாரா ஆகியோர் இந்த ஆண்டு பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
அக்ஸர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சி பிரிவில் இருந்து பி பிரிவிற்கு முன்னேறியுள்ளனர். இது தவிர ஸ்ரேயாஸ் அயரும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அதே போல் கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு சி பிரிவில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பி பிரிவில் இருந்த விருத்திமான் இந்த ஆண்டு சி பிரிவில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் தவிர உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் சி பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.






