என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மராட்டியத்தில் நடக்கும் அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்க மராட்டிய மந்திரி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 26-ந் தேதி முதல் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடர் மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் மராட்டிய மாநிலம் மும்பை, புனேயில் மட்டும் நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிரபவுர்ன், டி.ஒய்.படேல் ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் 55 போட்டிகளும், புனே மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெறுகிறது.

    பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கான இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டித் தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்தில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அனுமதியை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கும் அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சமீபத்தில் மராட்டிய மந்திரி ஆதித்யதாக்கரேவை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசியபோது மராட்டியத்தில் நடக்கும் அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்க மந்திரி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா- இலங்கை அணிகள் தர்மசாலாவில் மோதிய 3-வது 20 ஓவர் போட்டியில் 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    உக்ரைன் மீதான போரில் பெலாரஸ் நாடு ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த நாட்டின் வீரர், வீராங்கனைகளுக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் சங்கம் தடை விதித்துள்ளது.
    முனிச்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் தடை விதிக்கின்றன.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷியா மீது தடை விதிக்க விளையாட்டு அமைப்புகளுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    சர்வதேச கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பும் கூட்டாக அறிவித்தன.

    அதேபோல உலக அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதித்து உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

    மேலும் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியிலும் ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ரஷியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடத்தப்படாது என்று சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

    டென்னிஸ்

    இந்த நிலையில் ரஷியா மீது சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனமும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழுவின் முடிவு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவருடனான சந்திப்பைத் தொடர்ந்து ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த முடிவு மார்ச் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. மேலும் அறிவிப்பு வரும் வரை இந்த தடை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீதான போரில் பெலாரஸ் நாடு ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த நாட்டின் வீரர், வீராங்கனைகளுக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் சங்கம் தடை விதித்துள்ளது.

    எகிப்தின் கைரோவில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுவரை ரஷிய வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி அவர்களால் அப்போட்டியில் பங்கேற்க இயலாது.

    கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஜேசன் ராய் குஜராத் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜாசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த நிலையில் 31 வயதான ஜேசன் ராய் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ல் இருந்து திடீரென விலகியுள்ளார். கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவர் குஜராத் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ள நிலையில் அவரது விலகல் அணி நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுப்மான் கில்லை தவிர்த்து அந்த அணியில் பிரத்யேக தொடக்க ஆட்டக்காரராக ஜேசன் ராய் மட்டுமே இருந்தார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
    ரங்கியாரா:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகிற 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த நிலையில் ரங்கியாராவில் நேற்று நடந்த தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஹெல்மெட்டில் பவுன்சர் பந்து தாக்கியதில் காயம் அடைந்து பாதியில் வெளியேறிய தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா இந்த ஆட்டத்தில் 66 ரன்கள் (67 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். தீப்தி ஷர்மா 51 ரன்னும், யாஸ்திகா பாட்டியா 42 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 3 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    லின்கானில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 321 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மெக் லானிங் (87 ரன்), அலிசா ஹீலி (64 ரன்), ஆஷ்லிக் கார்ட்னெர் (60 ரன்), பெத் மூனி (55 ரன்) அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹன்னா ரோவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிவைன் அதிரடியாக ஆடி வலுவான தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 119 ரன்னாக உயர்ந்த போது (20.2 ஓவரில்) சுசி பேட்ஸ் 63 ரன்களில் கேட்ச் ஆனார். இதைத்தொடர்ந்து அமெலி கெர், சோபி டிவைனுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சை நொறுக்கியதுடன், இலக்கையும் சுலபமாக எட்ட வைத்தது. இந்த கூட்டணியை உடைக்க ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் 9 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் பலன் கிட்டவில்லை.

    நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 325 ரன்கள் திரட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி கண்டது. சோபி டிவைன் 161 ரன்னுடனும் (117 பந்து, 23 பவுண்டரி, 4 சிக்சர்), அமெலி கெர் 92 ரன்னுடனும் (75 பந்து, 13 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்சிவால்ட் வெள்ளிப்பதக்கமும், ரஷியாவின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
    கெய்ரோ:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றில் 584 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து டாப்- 8 வீரர்களில் ஒருவராக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் பிரமாதப்படுத்தினார்.

    இலக்கை துல்லியமாக சுட்டு முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளிய 19 வயதான சவுரப் சவுத்ரி 16 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். உலக போட்டியில் அவரது 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஜெர்மனியின் மைக்கேல் ஸ்சிவால்ட் வெள்ளிப்பதக்கமும், ரஷியாவின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் இஷா சிங் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். கிரீஸ் வீராங்கனை அன்னா கோராககி தங்கப்பதக்கம் வென்றார்.

    மொகாலியில்,இந்திய அணி வெற்றி பெற்றால் அது கோலிக்கு மிகப் பெரிய பரிசாக அமையும் என்று பும்ரா குறிப்பிட்டுள்ளார்.
    மொகாலி:

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. 

    இது முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டி. இந்த போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா, கோலியின் 100 டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளதாவது:

    தேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனை. இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. அவருக்கு இது இன்னொரு பெருமைப் படத்தக்க சாதனையாகும். 

    விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். இந்திய அணி வெற்றி பெற்றால் அதை விட அவருக்கு பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் முதலிடம் பிடித்தது.
    கோவாவில் நடைபெற்று வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்களுக்கு போட்டியை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் நேற்று  நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

    அந்த அணியின் சிங்கெல்சனா சிங்  முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். 

    தொடர்ந்து பீட்டர் ஹார்ட்லி, டேனியல் சீமா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பதிலுக்கு ஐதராபாத் அணி வீரர்களின் கோல் போடும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. 

    ஆட்டத்தின் முடிவில்  3-0 என்ற கணக்கில்  ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. 

    இந்த வெற்றியின் மூலம் 37 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்தது. மேலும் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட  ஜாம்ஷெட்பூர் தகுதி பெற்றுள்ளது.
    வரும் ஜூன் 26 ஆம் தேதி இந்தியா-அயர்லாந்து அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது
    டுப்லின்:

    இந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

    இதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை நடைபெறுகின்றன.

    இதன் பிறகு அயர்லாந்து நாட்டிற்கு செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஜூன் 26 ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.

    2-வது டி20 போட்டி ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்  தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

    இதற்கு முன், கடந்த 2018 ஆம் ஆண்டில்  இந்திய அணி, டி20 தொடருக்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா கட்டுப்பாடு காரணமாக மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண முடியாத நிலை இருந்தது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். தனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டத்தில் விளையாட இருக்கும் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேவேளையில், மற்ற இடங்களில் அனுமதிக்கப்படும்போது, மொகாலியில் மட்டும் ஏன் ரசிகர்களுக்கு அனுமதிக்கக் கூடாது என விமர்சனமும் எழும்பியது. இந்த நிலையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறாது. ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதை மாநில கிரிக்கெட் சங்கங்கள் முடிவு செய்யலாம். தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணிகள் அடிப்படைகள் அனுமதி வழங்கலாம்.

    நான் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் பேசினேன். அப்போது விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்கள் என ஜெய் ஷா தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த ஐ.பி.எல். சீசனில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கி உள்ளது.

    அகமதாபாத் அணியை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சி.வி.சி. கேப்பிட்டல் ரூ.5,600 கோடிக்கு வாங்கி உள்ளது. புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    10 அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேயில் நடை பெறுகிறது.

    இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 9 அணிகளுக்கு கேப்டன் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஒரே ஒரு அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு மட்டும் இன்னும் கேப்டன் அறிவிக்கப்படவில்லை.

    பெங்களூர் அணிக்கு கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐ.பி.எல். கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய அணிகளில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    9 அணிகளின் கேப்டன்கள் விவரம் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, மும்பை இந்தியன்ஸ்- ரோகித்சர்மா, டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரி‌ஷப்பண்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர், ராஜஸ்தான் ராயல்ஸ்-சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸ்- மயங்க் அகர்வால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- லோகேஷ் ராகுல், குஜராத் டைட்டன்ஸ்- ஹர்திக் பாண்ட்யா.
    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் அய்யர், விகாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    மொகாலி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 4-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 12 முதல் 16-ந் தேதி வரை பெங்களூரில் பகல்-இரவாக நடக்கிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    டெஸ்ட் போட்டியில் புஜாரா 3-வது வரிசையிலும், ரகானே 5-வது வரிசையிலும் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். தற்போது இருவரும் நீக்கப்பட்டுள்ளதால் அந்த வரிசையில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    சுப்மன்கில் 3-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவராக கருதப்படுகிறது. அவர் அகர்வாலுடன் இணைந்து தொடக்க வரிசையில் விளையாடி வருகிறார். ரோகித்சர்மா டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளதால் அவர் அகர்வாலுடன் தொடக்க வீரராக ஆடுவார்.

    இதனால் தொடக்க வீரரான சுப்மன் கில் 3-வது வரிசையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசைக்கு அவர் பொருத்தமானவர் என்று தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினரான தேவங்காந்தி தெரிவித்துள்ளார்.

    ரகானேவின் இடமான 5-வது வரிசையில் விக்கெட் கீப்பரான ரி‌ஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது வரிசையில் களம் இறங்குவார். விகாரி 6-வது வரிசையில் ஆடுவார்.

    11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் அய்யர், விகாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சுப்மன்கில், விகாரிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் வருமாறு:-

    ரோகித்சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மன்கில், விராட்கோலி, ரி‌ஷப்பண்ட், விகாரி, ஜடேஜா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ‌ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சவுரப் குமார், பிரியங் பாஞ்சல், ஸ்ரீகர்பரத்.
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி ரஷிய வீரர் மெட்விடேவ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

    நியூயார்க்:

    உலக டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடம் வகித்த 26 வயது ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்து இருக்கிறார். கடந்த வாரம் நடந்த மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் மெட்விடேவ் (8,615 புள்ளிகள்), முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை (8,465 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளி முதலிடத்தை சொந்தமாக்கினார்.

    2020-ம் ஆண்டு உலக டூர் இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்விடேவ், கடந்த ஆண்டு (2021) அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

    20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான 34 வயது நோவக் ஜோகோவிச் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்தார். நம்பர் ஒன் இடத்தை மொத்தம் 361 வாரங்கள் பிடித்து சாதனை படைத்து இருந்த ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற அவரது விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு அவரை திருப்பி அனுப்பியது. இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. அத்துடன் கடந்த வாரம் துபாயில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் அவர் கால்இறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டினார். இவை அவரது நீண்ட கால ‘நம்பர் ஒன்’ ஆதிக்கம் முடிவுக்கு வர காரணமாக அமைந்தது.

    1973-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ஆண்கள் ஒற்றையர் தரவரிசைபட்டியலில் முதலிடத்தை பிடித்த 27-வது வீரர் மெட்விடேவ் ஆவார். மேலும் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு ரஷிய வீரர்களில் கபெல் நிகோவ் (1999-ம் ஆண்டு), மரட் சபின் (2000) ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளில் ஜோகோவிச், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரை தவிர்த்து ‘நம்பர் ஒன்’ இடத்துக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மெட்விடேவ் தனதாக்கினார்.

    ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த டேனில் மெட்விடேவ் கருத்து தெரிவிக்கையில், ‘நம்பர் ஒன் இடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வயதில் மட்டுமின்றி சமீபகாலங்களிலும் இது தான் எனது இலக்காக இருந்தது. டென்னிஸ் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

    ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (7,515 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். மெக்சிகோ ஓபன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபெல் நடால் (6,515 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (6,445 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (5,000 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், இத்தாலி வீரர் பெரேட்டினி (4,928 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 7-வது இடத்தையும் பிடித்தனர். நார்வேயின் கேஸ்பர் ரூட் (3,915 புள்ளிகள்) 8-வது இடத்திலும், கனடாவின் அலியாசிம் (3,883 புள்ளிகள்) 9-வது இடத்திலும் தொடருகின்றனர். போலந்தின் ஹூபர்ட் ஹூர்காஸ் (3,496 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.
    ×