என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய பெண்கள் அணி வீராங்கனைகள்
    X
    இந்திய பெண்கள் அணி வீராங்கனைகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
    ரங்கியாரா:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகிற 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த நிலையில் ரங்கியாராவில் நேற்று நடந்த தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஹெல்மெட்டில் பவுன்சர் பந்து தாக்கியதில் காயம் அடைந்து பாதியில் வெளியேறிய தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா இந்த ஆட்டத்தில் 66 ரன்கள் (67 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். தீப்தி ஷர்மா 51 ரன்னும், யாஸ்திகா பாட்டியா 42 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 3 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    லின்கானில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 321 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மெக் லானிங் (87 ரன்), அலிசா ஹீலி (64 ரன்), ஆஷ்லிக் கார்ட்னெர் (60 ரன்), பெத் மூனி (55 ரன்) அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹன்னா ரோவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிவைன் அதிரடியாக ஆடி வலுவான தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 119 ரன்னாக உயர்ந்த போது (20.2 ஓவரில்) சுசி பேட்ஸ் 63 ரன்களில் கேட்ச் ஆனார். இதைத்தொடர்ந்து அமெலி கெர், சோபி டிவைனுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சை நொறுக்கியதுடன், இலக்கையும் சுலபமாக எட்ட வைத்தது. இந்த கூட்டணியை உடைக்க ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் 9 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் பலன் கிட்டவில்லை.

    நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 325 ரன்கள் திரட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி கண்டது. சோபி டிவைன் 161 ரன்னுடனும் (117 பந்து, 23 பவுண்டரி, 4 சிக்சர்), அமெலி கெர் 92 ரன்னுடனும் (75 பந்து, 13 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
    Next Story
    ×