என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி: ஜெய் ஷா

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண முடியாத நிலை இருந்தது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். தனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டத்தில் விளையாட இருக்கும் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேவேளையில், மற்ற இடங்களில் அனுமதிக்கப்படும்போது, மொகாலியில் மட்டும் ஏன் ரசிகர்களுக்கு அனுமதிக்கக் கூடாது என விமர்சனமும் எழும்பியது. இந்த நிலையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறாது. ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதை மாநில கிரிக்கெட் சங்கங்கள் முடிவு செய்யலாம். தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணிகள் அடிப்படைகள் அனுமதி வழங்கலாம்.

    நான் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் பேசினேன். அப்போது விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்கள் என ஜெய் ஷா தெரிவித்தார்.

    Next Story
    ×