என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • லிட்டோன் தாஸ் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார்.
    • சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

    முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், கேப்டனுக்குரிய நபர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.


    டேனிஸ் கனேரியா கூறுகையில் ''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை.

    லிட்டோன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    சட்டோகிராம் ஆடுகளம் வங்காள தேசத்தின் மற்ற ஆடுகளங்களை விட சற்று மாறுபட்டதாக உள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக எடுபடுகிறது. அவர் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் பந்து வீசுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் காயத்துடன் கட்டாயம் விளையாட வேண்டியது அவசியமா?. அவர்கள் இன்னும் ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கியிருக்கனும்'' என்றார்.

    • ஐ.பி.எல். மினி ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்
    • 132 வெளிநாட்டு வீரர்கள், 273 இந்திய வீரர்கள் அடங்குவார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2023 சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக வீரர்களை விடுவிடுத்தல், அணிகளுக்கு இடையில் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 23-ந்தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

    ஏலத்தில் பங்கேற்க பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 வெளிநாட்டு வீரர்களும், 273 இந்திய வீரர்களும் அடங்குவர்.

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்றோர் ஐ.பி.எல். அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது, மினி ஏலத்தில் பங்கேற்க அந்த நாட்டின் சுழற்பந்து வீச்சாளரான அல்லா முகமது கஜான்ஃபர் தனது பெயரை விண்ணப்பித்திருந்தார். அவரை ஐ.பி.எல். ஏலத்தில் இணைத்துள்ளது நிர்வாகம்.

    அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட அல்லா முகமது கஜான்ஃபர் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் பாக்தியா மாகாணத்தை சேர்ந்தவர்.

    தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தவ்லாத் அகமது சாய் ஆலோசனையின்படி சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார். முன்னதாக பிக் பாஷ் லீக்கில் விளையாட விண்ணப்பித்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை.

    இவருக்கு இந்திய வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் பிடிக்குமாம். அவரது பந்து வீச்சால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    • தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர்.
    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

    தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். அதன்பின் தடகளத்தில் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ராதான்.

    உலகளாவிய தடகள வீரர்கள் வீராங்கனைகள் குறித்த கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022-ல் அதிக கட்டுரைகள் எழுதப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் உசைன் போல்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார். தற்போது நீர்ஜ் சோப்ரா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    2017-ல் ஓய்வு பெற்ற உசைன் போல்ட் குறித்து 574 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    ஜமைக்கானவின் தடகள வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா குறித்து 751 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    • சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.
    • பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரனை கிரிக்கெட் விஞ்ஞானி என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் நெருக்கடியான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் களத்தில் இருந்த அஸ்வினிடம் ஒரு தரமான இன்னிங்ஸ் விளையாடினார்.

    இந்திய அணிக்காக 87வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் அஸ்வின், இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல் 13 அரை சதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் 442 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சுமார் 3 ஆயிரம் ரன்களும் குவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிகெட்டை பொறுத்தவரை, அஸ்வின் ஆல் ரவுண்டராகவே அறியப்படுகிறார். அஸ்வினுக்கு பாராட்டு இன்றைய ஆட்டத்தில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 8வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின்.

    இதன் மூலம் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அஸ்வின் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்:-

    ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர் அல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார். அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர் அதனை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.

    இளம் வயதிலேயே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான கடினமான சூழல்களில் ரன்கள் சேர்த்துள்ளார். மிகவும் கடினமான ஷாட்களை, மிக எளிதாக விளையாட கூடியவர். ஒவ்வொரு ரன்னுக்காக உழைக்கக் கூடியவர். ஸ்பின்னர்களை எளிதாக விளாசிவிட்டு, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திட்டத்துடன் இருப்பவர்.

    பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி. ஏனென்றால், ஒவ்வொரு முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்து கொண்டே இருப்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்வார்.

    இவ்வாறு கார்த்திக் கூறினார்.

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
    • இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

    வங்காளதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் 16 ஓவர்கள் வீசி 40 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். முன்னதாக அவர் பேட்டிங்கில் 40 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
    • வங்காள தேசம் தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 28 ரன்கள் எடுத்தார்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் நஜ்முல் உசேன் முதல் பந்திலேயே சிராஜ் பந்துவீச்சில் பந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். அடுத்து வந்த யாசிர் அலி உமேஷ் யாதவ் வேகத்தில் சிக்கி அவுட்டானார். இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.

    வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

    பாலோ ஆனை தவிர்க்க அந்த அணி இன்னும் 72 ரன்கள் எடுக்க வேண்டும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேச அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்களும் லிண்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்தனர். ஹாசன் மிர்ஸ் 16 ரன்களுடனும், எபடோட் ஹொசைன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே எபடோட் 17 ரன்னிலும் மிர்ஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காள தேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வென்றது.
    • முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதேபோல், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

    வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.

    • இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • அர்ஜென்டினா-பிரான்ஸ் அணி 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்ச கட்டத்தை எட்டி விட்டது. நேற்றுடன் அரை இறுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன.

    நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவையும், நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி மொராக்கோவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 3-வது இடத்துக்கான போட்டி நாளை மறுநாள் (17-ந்தேதி) தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அரை இறுதியில் தோல்வியை தழுவிய மொராக்கோ-குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 'குரூப்' சுற்றில் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இரு அணிகளும் மோதிய 'லீக்' ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. 3-வது இடத்துக்கான ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்றன.

    இரு அணி நட்சத்திர வீரர்களும் நேரடியாக இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள். அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சியும், எம்பாப்வேயும் இறுதி போட்டியில் வீர தீரத்துடன் விளையாடுவார்கள். இருவருமே பிரான்ஸ் நாட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக ஆடி வருகிறார்கள்.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியும், எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர். இதே போல 2-வது இடத்தில் ஜுலியன் அல்வா ரெஸ் (அர்ஜென்டினா), ஆலிவர் ஜிரவுட் (பிரான்ஸ்) உள்ளனர். இருவரும் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.

    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர்.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் 20 ரன்னிலும் கே.எல்.ராகுல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் டைஜூல், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் கிடுகிடுவென எகிறி 37-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
    • சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

    புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

    முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×