என் மலர்
புதுச்சேரி
திருத்தணியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளைகள் புதுவையில் நெல்லித்தோப்பு, அரும்பார்த்தபுரம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனம் சார்பில் தீபாவளி சீட்டு,புத்தாண்டு சீட்டு,மளிகை பொருட்கள் சீட்டு, குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பு என பல வகையான கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட் டன.
இதை உண்மையென நம்பி ஏராளமானோர் அந்நிறுவனங்களில் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி பணம் பட்டு வாடா செய்யப்பட்டது. பணம் இரட்டிப்பாக கிடைத்ததால் ஏற்பட்ட நம்பிக்கையை தொடர்ந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.அந்த வகையில் சுமார் ரூ.3 கோடிக்கும்மேல் முதலீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த ஜீலை மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதை திடீரென நிறுவனத்தினர் நிறுத்தினர். அந்த நிதிநிறுவனத்தின் தகவல் தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
இதனால் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நெல்லித்தோப்பு கிளைஅலுவலகத்தில் வேலை பார்த்து வந்த புதுவை சாரதாம்பாள் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜேக்கப் வருண் பிரவீன் (வயது36) என்பவரிடம் முறையிட்டனர். இதுகுறித்து அவர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெய்யழகனை (28) தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வங்கியில் அதிக்கப்படியான பணம் செலுத்துவதில் சில சிக்கல் உள்ளது. விரைவில் சரியாகிவிடும் என தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிதிநிறுவனத்தின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுக்கவே ஜேக்கப் வருண் பிரவீன் அந்த நிதி நிறுவன உரிமையாளர் சிவநரேந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து ஜேக்கப் வருண் பிரவீன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவனத்தின் உரிமையாளர் சிவநரேந்திரன் சென்னையில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நிதிநிறுவன உரிமையாளர் சிவநரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க இன்ஸ்பெக்டர் நியூட்டன் புதுவை கோர்ட்டில் அனுமதிகோரியிருந்தார். கோர்ட்டு அனுமதியளித்ததன்பேரில் சிவநரேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் இதில் தொடர்புடைய மற்றொரு ஊழியர் பதுங்கியிருக்கும் இடத்தையறிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
3 நாட்கள் காவல் முடிந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணையை நிறுத்த ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகள், புதுவையில் உள்ள கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணை இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை காணொலியில் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மின்னஞ்சல், கோர்ட்டு ஊழியர்களால் வைக்கப்படும் பெட்டிகளில் போட வேண்டும் என ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புதுவை கோர்ட்டிலும் நேரடி வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளது. புதுவை கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டனர். இன்று விசாரணைக்கு வரவிருந்த வழக்குகளின் வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
நாளை முதல் அனைத்து வழக்குகளின் விசாரணையும் காணொலியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காவல் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றும் காவலர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவியும், 25 ஆண்டு பணி முடித்த தலைமை காவலருக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்கப்படுகிறது.
35 ஆண்டு பணி முடித்தவருக்கு சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவி அளிக்கப்படுகிறது.
இதன்படி 30 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவியும், 43 தலைமை காவலர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு காவலருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிறப்பு நிலை தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றிருந்த 38 பேருக்கு நிரந்தர தலைமை காவலராக பதவி உயர்வு, 7 சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், நிரந்தர உதவி சப்-இன்ஸ்பெக்டராகவும், 2 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற 121 பேருக்கு அதற்கான ஆணையை காவல்துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அலுவால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுவை கோரிமேடு ராஜாஅண்ணாமலைநகரை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் சென்றார். அங்குள்ள பால் பூத் அருகே மோட்டார் சைக்கிளை திருப்பிய போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோபால் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோபால் படுகாயமடைந்தார். அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விழுப்புரம் பூவரசன் குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் சிவக்குமார் (21). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் புதுவை-வழுதாவூர் சாலையில் வந்து கொண் டிருந்தார். கவுண்டம் பாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சிவகுமார் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி விழுந்த சிவகுமார் கை, கால் மற்றும் முகத்தில் படுகாயமடைந்தார். அங் கிருந்தவர்கள் சிவகுமாரை மீட்டு சிகிச்சைச்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த 2 விபத்துக்கள் குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் அலி (72). இவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆவார். இவரது மனைவி பாத்திமா பீவி(65). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று சுல்தான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் வந்த போது அந்த வழியாக வந்த கார் சிக்கந்தர்அலி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிக்கந்தர் அலி மற்றும் அவரது மனைவி பாத்திமா பீவி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளை உருவாக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை ரோடியர் மில் வளாகத்தை பார்வையிட்டார். அங்கு படுக்கை வசதி செய்ய முடியுமா? என ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்களை ஆய்வு செய்தார். அங்குள்ள குடோன்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒமைக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்க முடியுமா? என ஆய்வு செய்தார்.
ஒமைக்ரான் சிறப்பு வார்டு பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்படும் என தெரிகிறது.
நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 83 டோஸ் கோவேக்சின் மருந்து குப்பிகளை மத்திய அரசு முதல்கட்டமாக வழங்கியுள்ளது.
அரசின் சுகாதாரத்துறை மூலம் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தடுப்பூசி செலுத்திய மாணவர்களை ½ மணி நேரம் ஓய்வறையில் அமர வைத்து கண்காணித்து அனுப்பினர். மாணவர்களுக்கு மாத்திரை வழங்கி, காய்ச்சல் இருந்தால் உட்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒமைக்ரான் என்ற புதிய தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து மாநிலமான தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டமே பின்பற்றப் படுகிறது. எனவே புதுச்சேரியிலும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 2 பேருக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது. தரமான கல்வியை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தர முடியுமா? என்பது சந்தேகம்.
எனவே பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்வது தொடர்பாக சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுவை தீயணைப்பு நிலையத்திற்கு இன்று காலை போன் ஒன்று வந்தது.
அதில் பேசிய சிறுமி வைத்திக்குப்பத்தில் உள்ள எங்கள் வீட்டின் மீது உயர் மின்அழுத்த கம்பம் விழுந்ததாகவும், இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே வரமுடியவில்லை எனவும் கூறினார். அதன்பேரில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சைரன் அடித்தபடி குபேர் சாலையில் அதிவேகமாக சென்றனர்.
இதனால் அங்கு குடியிருந்த சுற்றுலா பயணிகள் கடலின் உள்ளே யாரோ இழுத்து செல்லப்பட்டதாகவும், அவரை காப்பாற்ற தீயணைப்பு வாகனம் வந்ததாகவும் எண்ணி அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் தீயணைப்பு வாகனம் குபேர் சாலையையும் கடந்து வைத்திக்குப்பத்தை நோக்கி சென்றது. அங்கிருந்த பொதுமக்களோ தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது டி.சுனாமி குடியிருப்பில் உள்ள தெருவில் வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது.
தீயணைப்பு வாகனம் சைரன் அடித்தபடி வேகமாக வந்ததால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு படைவீரர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.






