என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.காங்.- பா.ஜ.க. இடையே கருத்து வேறுபாட்டால் புதுச்சேரியில் அலங்கோல ஆட்சி நடக்கிறது என்று நாராயணசாமி கூறினார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த விழிதியூர் தி.மு.க. பிரமுகர் சரவணன் பட திறப்பு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற நாள் முதல், காரைக்கால் மாவட்டத்தை இதுவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதுதான் ஒரு முதல்-அமைச்சர் காரைக்கால் மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். ரங்கசாமி தனது பணிகளை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

    புதுச்சேரியில் நல்லதோர் ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால், மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அலங்கோல ஆட்சி நடக்கிறது.

    ரங்கசாமி தனது பணிகளை செய்ய விடாமல் கவர்னர் தடுக்கிறார். முதல்-அமைச்சரின் உத்தரவுகளை அவர் அறிவிக்கிறார்.

    கவர்னரின் இந்த செயலை ரங்கசாமி தட்டிக்கேட்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. அவர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டுக் கொடுத்து விட்டாரா? அல்லது இந்த அமைச்சரவை, கவர்னரிடம் சரண் அடைந்துவிட்டதா? என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ரங்கசாமி தனது அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, சரணாகதி அடைந்திருப்பது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி, காரைக்காலில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ கவலை கொள்வதாக தெரியவில்லை. தற்போது 3-வது அலையாக ஒமைக்ரான் வந்துள்ளது. இது டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த மாதம் (பிப்ரவரி) இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    புதுச்சேரியில் ஒமைக்ரான் அதிகரிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியது தான் முக்கிய காரணம். இனியாவது தீவிர பணியாற்றி மக்களை காக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, கண்ணன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ந்தேதி புதுவை வருகிறார்
    புதுச்சேரி:
    தேசிய இளைஞர் விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை புதுவையில் நடக்கிறது.

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நடைபெறும் விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். 

    இதை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவார் என தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்து வந்தது. பிரதமர் வருகையை மாநில அரசு உறுதி செய்யவில்லை. 

    இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கவிழா சுசீலாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கவர்னர் தமிழிசை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.  அப்போது பிரதமர் வருகையை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:&

     நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா புதுவையில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்கவிழா புதுவை பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி புதுவைக்கு வருகிறார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 

    விழா ஏற்பாடுகளை பார்வையிட 5-.1.2022 அன்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் புதுவைக்கு வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் பிரதமர் பங்கேற்கும் அரங்கம், பணிகளை பார்வையிடுகிறார். 

    தேசிய இளைஞர் விழா புதுவையில் நடப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும். விழாவில் பங்கேற்போர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் விழா நடைபெறும். புதுவைக்கு வரும் பிரதமர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்வார். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    பழைய துறைமுகத்தில் தற்காலிக மருத்துவமனை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் இளையராஜா வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை உப்பளம் தொகுதி பழைய துறைமுகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்க முதல்-அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.  இங்கு  மருத்துவமனை அமைத்தால் உப்பளம் தொகுதி மக்கள் ஒமைக்ரான் தொற்றால் அதிகளவு பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். 

    இதனால் பல உ யிரிழப் புகள்  ஏற்படும். ஏற்கனவே தொகுதி மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். புதுவையிலேயே உப்பளம் தொகுதிதான் மிகவும் பின் தங்கிய தொகுதியாக உள்ளது. 

    இந்நிலையில் இங்கு மருத்துவமனை அமைப்பதை அரசு கைவிட வேண்டும். இங்கு  மருத்துவமனை அமைத்தால் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். 

    மற்ற மாநிலங்கள் போல புதுவையில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே 8&ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த  வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 3 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 45, காரைக்காலில் 13, ஏனாமில் ஒருவர், மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  புதுவையில் 30, காரைக்காலில் 16, மாகியில்  4 பேர் என 50 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 4, காரைக்காலில் ஒருவர், மாகியில்  2 பேர் என 7 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு  திரும்பினர். 

    புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 524 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 124, காரைக் காலில் 27, ஏனாமில் ஒருவர், மாகியில்  12 பேர் என 164 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 214 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.  புதுவையில் 2&வது தவணை  உட்பட 14 லட்சத்து 10 ஆயிரத்து 815 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    பாகூரில் பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது-.
    பாகூர்:

    புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    இந்த நிலையில் சுகாதாரத்துறை மற்றும் பாகூர் போலீசார் மணிக்கூண்டு எதிரே இன்று கொரோனா தடுப்பூசி முகாமினை ஏற்படுத்தி இருந்தனர்.

    அதில் பாகூர் வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தினர். 

    மேலும் அவ்வழியாக வரும் பஸ் மற்றும் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி செலுத் தாதவர்களை இனம் கண்டு அவர்களை முகா மிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தினர்.

    இதே போல் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

    பாகூர் டாக்டர் அர்ச்சனா, சுகாதாரத்துறை ஊழியர்கள், பாகூர் போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரோவில்லில் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்டவர் அந்திரே (வயது 32). இவரது பெற்றோர் குஜராத்தில் பல ஆண்டு காலம் வசித்து வந்தனர். பின்னர் ஆரோவில் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த அந்திரே புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கல்வி பயின்றார்.

    தற்போது ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி-கருவடிகுப்பம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அந்திரே இ-காம் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். ஆரோவில் வாசியாகவும் உள்ளார். அவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சித்துரு (38) காவலாளியாக இருந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை அந்திரேயும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என்று காவலாளி சித்துருவிடம் கேட்டனர்.

    சித்துரு சிறிது யோசனைக்குப்பின் வீட்டிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்.

    அதை குடித்த வாலிபர்கள் மேலும் தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். அதற்காக கேட்டைத் திறக்கும்படியும் கூறினர்.

    சந்தேகமடைந்த காவலாளி கேட்டை திறக்க மறுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வாலிபர் கேட்டின் மேல் ஏறி உள்ளே குதித்து கத்தியை காவலாளி கழுத்தில் வைத்து கேட்டை திறக்கும்படி கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கேட்டை திறந்த உடனேயே மற்ற 2 பேரும் உள்ளே புகுந்தனர். அங்கு அறையில் இருந்த பையை தூக்கிச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அந்த பையில் 35 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்கள் இருந்தது.

    இதுகுறித்து காவலாளி சித்துரு கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் கிடைத்த தகவலின்படி கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லீயாண்ட்ராவின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், அவரை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் தம்பதி நித்தீஸ்-ஆன்ஸின் ஜெனிஷா. இவர்களது மகள் லீயாண்ட்ரா (வயது 2½). இவள் சிறு வயதில் இருந்தே தமிழ், ஆங்கிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை ஒப்புவித்தல், இந்தி எழுத்துகள் மற்றும் எண்களை கூறுவது, உடல் உறுப்புகள், மருத்துவ உபகரணங்களின் பெயர்களை படங்கள் மூலம் சரியாக சுட்டிக்காட்டுவது, சிறுகதைகளை ஆர்வமுடன் சொல்வது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.

    இந்த குழந்தையின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், லீயாண்ட்ராவை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நடந்த அந்த நிறுவனத்தின் விழாவில் இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அந்த குழந்தையை விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாராட்டினர்.
    கணவருடன் புத்தாண்டு கொண்டாட வந்த பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 30) மீனவர். இவரது மனைவி சந்திரா (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அன்பரசன், தனது மனைவியுடன் புதுவைக்கு வந்தார். குழந்தைகளை அன்பரசனின் தாயார் அஞ்சலாட்சி பொறுப்பில் விட்டிருந்தனர்.

    கணவன், மனைவி இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது, சந்திரா கடற்கரை அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் அன்பரசன் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சந்திராவை தேடி வருகின்றனர்.
    புதுவையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.அதன்படி புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் (ஒப்பந்த ஊழியர்கள் உள்பட) அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

    தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்க வேண்டும். இதில் எந்த விதிவிலக்குமின்றி செயல்படுத்தலாம்.

    புதுவை அரசு துறைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்க அரசு செயலர்கள், துறைத்தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

    இதுகுறித்த அறிக்கையை வருகிற 7-ந் தேதிக்குள் தலைமை செயலகத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் முகக்கவசம்-சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கொரோனா எனும் கொடிய நோய் தொற்றின் மறு உருவமாக ஓமைக்ரான் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

    இதேபோல் புதுவையிலும் ஓமைக்ரான் தலை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்றை தடுக்கும் விதமாக சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் படி புதுவை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு மறைமலை அடிகள் சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    புதுவை பஸ் நிலையம் அருகே இரவு நேர ஊரடங்கை மீறி ஓட்டலில் ஒருவர் டிபன் விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

    எனவே ஓட்டல் உரிமையாளரான முத்தரையர் பாளையத்தை சேர்ந்த முரளி (வயது33) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் முத்தியால்பேட்டை போலீசார் டி.வி.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்த வித அத்தியாவசிய தேவையுமின்றி முகக்கவசம் அணியாமல் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (23)என்பவர் சுற்றிக்கொண்டிருந்தார்.அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதுவை பிரியதர்ஷினி நகர் பகுதியில் ஓதியஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முகக்கவசம் அணியாமலும், கொரோனா தொற்றை பரப்பும் விதமாகவும் நின்று கொண்டிருந்த கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பிரதாப் (24) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் சேதராப்பட்டு போலீசார் மயிலம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஓட்டலில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முக கவசம் அணியாமலும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த மயிலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் (38) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பாகூர் போலீசார் சோரி யாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலூரை சேர்ந்த பிரவீன் ராஜ் (31), ரவிக்குமார் (21)ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் முகக்கவசம் அணிமாமல் தொற்று பரப்பும் வகையில் சுற்றிக்கொண்டிருந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் கோரிமேடு மகாத்மா நகர் பகுதியில் சிக்கன் கடையில் சமூக இடைவெளியே கடைப்பிடிக்காமல் கூட்டம் அதிகமாக நின்றது.

    இதனால் கடை உரிமையாளரான கோட்டக்குப்பத்தை சேர்ந்த யாசின் (30)என்பவர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவர் நடத்தி கொண்டிருந்த சிக்கன் பக்கோடா கடையில் சமூக இடைவெளியே கடை பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து கடை உரிமையாளர் மீது திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருக்கனூர் அருகே காரை வழிமறித்து சாராயக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே வாதானூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் சுத்துக்கேணியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு பன்னீர் காரில் சாராயக்கடையை பார்வையிட சென்றார். கொடாத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்ற போது கொடாத்தூர் காலனியை சேர்ந்த கார்த்திக் உள்பட 4 பேர் குடிபோதையில் காரை வழிமறித்தனர்.

    பன்னீர் காரை நிறுத்தியதும் கார்த்திக் உள்பட 4 பேரும் காரை விட்டு இறங்குமாறு பன்னீரை தகாத வார்த்தைகளால் திட்டினர். காரை விட்டு இறங்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன பன்னீர் அங்கிருந்து காரை விரைவாக ஓட்டி சென்று விட்டார்.

    பின்னர் இதுகுறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் அருகே பாலத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 38). தச்சு தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளகொரவள்ளிமேட்டில் உள்ள பாலத்தில் செல்வகணபதி தூங்கிக்கொண்டிருந்தார. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் செல்வகணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வகணபதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    ×