என் மலர்
புதுச்சேரி
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12, காரைக்கால் 8, மாகியை சேர்ந்த 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 22, காரைக்காலில் 7, ஏனாமில் ஒருவர், மாகியில் 3 பேர் என 33 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 5, காரைக்காலில் 5, மாகியில் 3 பேர் என 13 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 483 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 76, காரைக்காலில் 19, மாகியில் 8 பேர் என 103 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 136 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 13 லட்சத்து 96 ஆயிரத்து 798 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் யோசுவாதுப்பியேர் (வயது24). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் யோசுவாதுப்பியேர் அதிர்ச்சியடைந்தார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து யோசுவாதுப்பியேர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாகி பகுதியை சேர்ந்தவர் யாதுநாத்(வயது20). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவைக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நள்ளிரவு பிரார்த்தனைக்காக ரெயில் நிலையம் எதிரே உள்ள தேவாலயத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தேவாலயம் எதிரே நிறுத்திவிட்டு பிரார்த்தனைக்கு சென்றார்.
பிரார்த்தனை முடிந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் யாதுநாத் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
மூலக்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜசேகர்(வயது36). திருமணமானவர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை ராஜசேகர் புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். மூலக்குளத்தில் தனியார் கார் ஷோரூம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜசேகர் ஓட்டி சென்ற மோட்டர் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலை நசுங்கி பலத்த காயமடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராம்குமார்(வயது34). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார்.
அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராம்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கிவீசபட்ட ராம்குமார் தலை மற்றும் உடலில் பலத்தகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரர் சிவசக்திவேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நேற்று இரவு வந்த அனைவரையும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காண்பித்த பிறகே போலீசார் அனுமதித்தனர். மேலும் முக கவசமும் கண்டிப்பாக அணிய வலியுறுத்தினார்கள்.
நேற்று மாலையில் பெய்த மழையால் கடற்கரை சாலையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு மழை விட்டதால் இரவில் படிப்படியாக கூட்டம் அதிகரித்தது.
இரவு 10 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியளித்தது.
கடற்கரை சாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் கடற்கரை சாலை மின்னொலியாக ஜொலித்தது. கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் இசைக்கேற்ப நடனமாடினார்கள். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சரியாக 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.
புதுவை ஆம்பூர், செஞ்சி சாலையில் இருந்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வந்து விடாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது.
அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட சாலை வழியாக வெளியே சென்று வர சிவப்பு நிற பாஸ் போலீசாரால் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே வராத வகையில் போலீசார் கெடுபிடி செய்தனர். நள்ளிரவில் அரசு ஆஸ்பத்திரி, பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் தடுப்புகள் மீது ஏறி செல்ல முயன்றவர்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதே போல் பல்வேறு இடங்களில் அத்துமீறியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2022-ம் ஆண்டில் புதிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்தியாவின் ஆளுமை, ஒன்றுபட்ட உணர்வு, உலகிற்கு தலைமை ஏற்கும் தகுதி ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் ஆண்டாக 2021-ம் ஆண்டு அமைந்தது.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒன்றுபட்ட வளர்ச்சிக்காவும் நம்மை மீண்டும் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புதுவை தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராக்கினி ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், வில்லியனுர் மாதா கோவில் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் தேவாலயங்கள், கடற்கரை பகுதியில் திரண்டு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த இடங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி சென்றனர்.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4.30 மணி நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
இதைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, அமெரிக்க டைமண்ட் பொறிக்கப்பட்ட வைர கிரீடம் சாத்தப் படுகிறது. கோவிலில் இன்று அர்ச்சனை கிடையாது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்கு இடைவிடாது இனிப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது.
காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், வில்லியனூர் திருகாமீசுவரர் கோவில், திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில், கற்பக விநாயகர் கோவில், காந்தி வீதி பொன்னுமாரியம்மன் கோவில், எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், வசந்த் நகர் வேலாயுத ஈஸ்வரர் கோவில், கணபதி நகர் ஷீரடி சாய் பாபா கோவில், பெரிய ஆண்டவர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
புதுவை மாநிலத்தில் புத்தாண்டையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதுவை மாநிலத்தில் குடி பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன்-65 இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றனர்.
புதுச்சேரி கலால்துறை செயலர் வல்லவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-
புதுச்சேரியில் 2022-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு புத்தாண்டையொட்டி பல்வேறு இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபான கடைகளை தவிர புதிதாக 40 இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 1 மணி வரை அனைத்து மதுபானங்கள் விற்பனை செய்யவோ, மதுகுடிக்கவோ அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளது.
எனவே புதுச்சேரியில் அனுமதி பெறப்பட்டுள்ள அனைத்து மதுக்கடைகள், பார்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்ற மதுபான கடைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவோ, மதுகுடிக்கவோ கூடாது.
நீதிமன்ற உத்தரவை கண்காணிக்க கலால்துறை சார்பில் புதுச்சேரியில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கலால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தொற்றை தடுக்க ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் மதுபான பார்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமி நாசினி வழங்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். முககவசம் அணிந்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் கலால்துறை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள், பார்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும். மேலும் அதன் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உடனிருந்தார்.
புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலருமான அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தற்போது ஒமைக்ரான் வைரசால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் பொதுமக்களின் நலன் கருதி வருகிற (ஜனவரி) 31-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி, இளைஞர் திருவிழா, பொங்கல் பண்டிகையை தவிர்த்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) இரவு நேரங்களில் அனைத்து இடங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும். கடற்கரை சாலை நள்ளிரவு 12.30 மணிக்கு மூடப்படும். மேலும் 2 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது.
கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு ஊரடங்கு நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயமாக முகமூடி அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
புத்தாண்டு தினத்தன்று அனைத்து மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணிக்கு பிறகு நள்ளிரவு 12.30 வரை பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்க அனுமதிக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்கள் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களுக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






