என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    கொரோனா, ஒமைக்ரான் பரவல்: புதுவையில் ஜனவரி 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா, ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து புதுவையில் ஜனவரி 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலருமான அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தற்போது ஒமைக்ரான் வைரசால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் பொதுமக்களின் நலன் கருதி வருகிற (ஜனவரி) 31-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி, இளைஞர் திருவிழா, பொங்கல் பண்டிகையை தவிர்த்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) இரவு நேரங்களில் அனைத்து இடங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும். கடற்கரை சாலை நள்ளிரவு 12.30 மணிக்கு மூடப்படும். மேலும் 2 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது.

    கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு ஊரடங்கு நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயமாக முகமூடி அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    புத்தாண்டு தினத்தன்று அனைத்து மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணிக்கு பிறகு நள்ளிரவு 12.30 வரை பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்க அனுமதிக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்கள் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களுக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×