என் மலர்
புதுச்சேரி
- ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
- தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.
மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
- சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
- தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுவை தேர்தல் துறையின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பெண் வாக்காளர்கள்தான் அதிகளவில் உள்ளனர்.
புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண்வாக்காளர்களும், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 76 ஆயிரத்து 932 ஆண் வாக்காளர்களும், 89 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
மாகியில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண், ஏனாமில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தத்தில் புதுவை மாநிலம் முழுவதும் 4லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதோடு வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள். இதனால் பெண் வாக்காளர்களை கவர, புதுவை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் பெண்களை அதிகளவில் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெண்களும் ஆர்வமாக பிரசாரத்திற்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம், பெண் வாக்காளர்கள், பணத்துக்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
அதோடு புதுவை அரசு 64 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், விடுபட்ட 10 ஆயிரம் பெண்கள் கண்டறியப்பட்டு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.
இன்னும் 2 ஆண்டுகள் அரசு தொடரும் என்பதால், மேலும் பல பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என கூறி வருகிறார்.
காங்கிரஸ் தரப்பில் சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, பெண்களுக்கு புதுவையில் பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துகூறி பிரசாரம் செய்கின்றனர்.
அதோடு, பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பணி செய்தாலும் மதிப்பு, மரியாதை இல்லை. இதனால்தான் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பெண் வாக்காளர்களை கவர 2 கூட்டணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
- சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் வாடிக்கையாளர் ஒருவர் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், 2-ம் ஒரே கம்பெனி ஆனால் கியூஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என அந்த குடிமகன் புகைப்படத்துடன் ஆடியோ குரல் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்:
சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்திலும், 2-வது பீர் கோவாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2-ம் ஒரிஜினல் பீர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது என தெரிவித்தனர்.
- தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
- கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசுக்கு அதிக வரிவருவாய் பெற்றுத் தரும் துறைகளில் கலால் துறையும் ஒன்று.
கடந்த காலங்களில் அண்டை மாநிலங்களைவிட புதுச்சேரியில் மது விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது ஏறக்குறைய விலை சமமான அளவு உயர்ந்துள்ளது. ஆனாலும் புதுச்சேரியில் விதவிதமான, பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் மது வகைகள் இன்னும் மது பிரியர்களை ஈர்த்து வருகிறது.
அதோடு சிறிய மதுபார்கள் முதல் 5 நட்சத்திர விடுதி மதுபார், ரெஸ்டோ பார் என பணத்துக்கு தகுந்த வசதிகளோடு மதுபார்கள் புதுச்சேரியில் இயங்கி வருகிறது. இதுவும் மது பிரியர்களை கவர்ந்திழுக்க ஒரு காரணம். வார விடுமுறை நாட்களில் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழகத்தின் அண்டை மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர். ரெஸ்டோபார்களில் அதிகாலை வரை குத்தாட்டம் போட்டு கொண்டாட்டமாக இருப்பார்கள்.
தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மது விற்பனை குறைந்துள்ளது. இரவு நேரங்களில் தான் மதுபாருக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சாதாரண நாட்களில் இரவு 11 மணி வரை மதுபார்கள் இயங்கும். ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு பார்களில் மது விற்காவிட்டாலும், ஏற்கனவே மது அருந்துபவர்களை வெளியேற்றுவது இல்லை.
இதனால் மது பார்கள் அடைக்க நள்ளிரவாகிவிடும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறையில் இரவு 10 மணிக்கு மதுபார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தாண்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் 9.30 மணிக்கே மதுபார்களில் கடைசி ஆர்டர் பெறப்படுகிறது. இதேபோல மது விற்பனை நிலையங்களில் 9.30 மணிக்கே விளக்குகளை அணைத்து கடையை அடைக்க தொடங்கி விடுகின்றனர்.
ஏற்கனவே தேர்தல் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் மது விற்பனையும் சரிந்துள்ளது. கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் இதுவும் தேர்தல் கட்டுப்பாட்டால் குறைந்துள்ளது. மது விற்பனை மதுபார்களில் 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
- வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 ஓட்டுகளில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 21.61 சதவீதத்தினர் இளைஞர்கள். இதில் 20 முதல் 29 வயதுக்குள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 388 பேரும், 19 வயதிற்குள் முதல் முறையாக 28 ஆயிரத்து 28 ஆயிரத்து 921 பேரும் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.
இதனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் யாரை வெற்றி பெற வைப்பது என்பதை முடிவு செய்யும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்களின் ஓட்டுகள் யாருக்கு? என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் விஷயத்தில் இளைஞர்களிடம் புரிதல் இருந்தாலும், எந்த கட்சி மீதும் அபிமானம் இல்லை. இதனால் யாருக்கு வாக்களிப்பது என அவர்களுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது. இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள புரட்சி ஆயுதமாக ஓட்டு மாறியுள்ளது.
இதில் இளைஞர்கள் பலரும் ஓட்டு போடாமல் இருக்கவும் நோட்டாவுக்கு வாக்களிக்கவும் திட்டமிடுகின்றனர். இதை தவிர்த்து வேட்பாளருக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சியில் புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
பாண்லே பால் பாக்கெட்டுகள், செல்பி கார்னர், மல்லர் கம்பம் விளையாட்டு, தப்பாட்டம், பெற்றோர்களுக்கு கடிதம், சிலிண்டர் விநியோகத்துடன் நோட்டீஸ் என 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
அதேநேரத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது, ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எப்.எம். ரேடியோக்களில் மாவட்ட தேர்தல் துறை தீவிர விளம்பரமும் செய்து வருகிறது.
முதலில் ஓட்டு போடு, அப்புறம் ஓ போடு எனவும், அங்கே என்னடா? உங்க அப்பாவும், எங்க அப்பாவும் வரிசையில் நிற்கிறார்கள் என ஒரு மாணவர் கேட்க, மற்றொருவர் தேர்தல் பற்றி தெரியாமல் இருக்கலாமா, வாடா நாமும் ஓட்டுபோட வரிசையில் நிற்போம் எனவும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.
இந்த முறை அதிகபட்ச வாக்கு சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் துறை தீவிர பணியாற்றி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.
அதே வேளையில் இளைஞர்கள் ஓட்டை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அவர்களை குறி வைத்து போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் அரசியல் கட்சியினருக்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டு அளிப்பார்கள் என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.
- நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
- வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.
திருநள்ளாறு:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
- புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக பிரசார களத்திற்கு வருகிறார்.
இதுவரை பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். நேற்று சென்னையில் ரோடு ஷோ சென்றார். இன்று வேலூர் மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அடுத்தபடியாக 13, 14, 15-ந் தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் விடுபட்ட பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதேநேரத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் அகில இந்திய அளவிலான தலைவர்கள் யாரும் புதுவையில் பிரசாரத்துக்கு வரவில்லை. அண்டை மாநிலத்துக்கு பிரதமர் பலமுறை வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் இடத்துக்கு வராதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரிகள் என யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. தங்கள் கட்சி சார்பில் பிரசாரத்துக்கு யார், யார் வருவார்கள்? என தேர்தல் துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதியுடன் புதுவையில் பிரசாரம் நிறைவடைகிறது.
இதனால் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இதன்பிறகும் தேசிய தலைவர்கள் யாரும் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்ய வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
- இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.
புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.

ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.
மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.
நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.
- ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.
புதுச்சேரி:
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, புதுச்சேரி தேர்தல் துறை மாநிலம் முழுவதும் ஓட்டுச்சாவடிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஓட்டு போட வருபவர்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிக்க ஓட்டுச்சாவடி வாயில்களில் பெரிய இரும்பு ஷீட் கூரை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை பசுமை தேர்தலாக மாற்றுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிக்கு வருபவர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து வருமாறும் தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.
இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.
இந்த பள்ளி வளாகத்தில் 2 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.
ஓட்டு போட வருபவர்களின் தாகம் தணிக்க மண் பானையில் குடிநீர், மோர் மற்றும் கேப்பை கூழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த ஓட்டுச்சாவடி வளாகமே முழுக்க குளிர்ச்சியாக காட்சியளிப்பதற்கு பல்வேறு பணிகளை தேர்தல் துறை செய்து வருகிறது.
- பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர்.
- தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில தேர்தல் துறையின், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் மூலமாக 100 சதவீத மற்றும் நேர்மையான வாக்குப்பதிவுக்காக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்கேட்டிங் மற்றும் தப்பாட்டம் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து கொண்டே பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனர்.
வாக்காளர் உறுதி மொழியை ஏற்பதற்கான கையெழுத்து பிரசாரமும் நடந்தது. இதில் தேர்தல் துறை அதிகாரிகளை தொடர்ந்து பொதுமக்களும் தேர்தல் ஆணைய உறுதிமொழியை ஏற்று கையொப்பம் இட்டனர்.
மேலும் புதுச்சேரி மாநில விலங்கான அணில் வேட மணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும், புதுச்சேரி மக்களும் செல்பி எடுத்து கொண்டதுடன், தேர்தல் துறையின் வாசகங்களை படித்து விழிப்புணர்வும் அடைந்தனர்.






