என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
    • விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    புதுச்சேரி:

    தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 27-ந்தேதி விக்கிரவாண்டில் நடைபெறுகிறது.

    இதனையொட்டி புதுச்சேரியில் விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் இடம் பெற்றுள்ளது.

    2026-ல் ஆளப்போறான் தமிழன் என்ற வாசகத்துடன் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு... தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    வேட்டி சட்டையில் விஜய் நடந்து வருவது போன்றும் மறுபுறம் முதல்-அமைச்சர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போல படம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    என்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் இந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    • 5 ஆண்டுகள் முழுமை பெறாமல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
    • வென்றாலும், தோற்றாலும் கட்சிக்காக நிற்பவர்களுக்கு சீட் வழங்குங்கள்.

    புதுச்சேரி:

    கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி புதுவையில் அமைந்தது.

    2021 சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்து கட்சி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது. 5 ஆண்டுகள் முழுமை பெறாமல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அணி மாறிய பலரும் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் புதுவையில் இதுவரை ஆட்சியில் இடம்பெறாத பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைத்தது. சபாநாயகர், 2 அமைச்சர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என புதுவையில் பா.ஜனதாவுக்கு அடித்தளம் உருவாகியுள்ளது.

    இதற்கு கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் தான் காரணம் என காங்கிரசார் கருதுகின்றனர். இதை வெளிப்படுத்தும் விதமாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமேடைகளில் காங்கிரசுக்கு துரோகம் இழைத்தவர்கள், நடுரோட்டில் நிற்பார்கள் என்றும், அவர்களை மீண்டும் கட்சியில் ஒரு காலத்திலும் இணைக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார்.

    இத்தகைய சூழலில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. காங்கிரசிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்கும் முயற்சியில் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

    இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெடித்தது. கூட்டத்தில் பேசிய சிலர், கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் அழைத்துவர சிலர் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிகிறோம். இனியாவது கட்சிக்காரர்களுக்கு மதிப்பளியுங்கள். வென்றாலும், தோற்றாலும் கட்சிக்காக நிற்பவர்களுக்கு சீட் வழங்குங்கள். துரோகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்காதீர்கள் என பேசினர்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, காங்கிரசுக்கு துரோகம் இழைத்தவர்களை மீண்டும் ஒருபோதும் இணைக்கமாட்டோம். அப்படி யாராவது இணைப்பு முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு நான்தான் முதல் எதிரி. கட்சி தலைமையிடம் கூறி அவர்களையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம் என ஆவேசமாக கூறினார்.

    • புதுச்சேரியில் மோசடி மூலம் சொத்துக்களை சேர்த்த அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவர்னருக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சப்-கலெக்டர் ஜான்சன், நில அளவையர் ரேணுகாதேவி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவர்னருக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.

    கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றவுடன், அதிகாரிகளின் சொத்து பட்டியலை சமர்பிக்க அறிவுறுத்தியிருந்தார். இதில் பல அதிகாரிகள் தங்கள் கணக்குகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகளின் சொத்துக்களை ரகசியமாக கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் மோசடி மூலம் சொத்துக்களை சேர்த்த அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அருவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 40 கிலோ நெல் மூட்டை 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் சொர்ணாவாரி பட்டத்தில் 5 ஆயிரம் எக்டேருக்கு அதிகமான பரப்பளவில் ஏ.டீ.டி. 37, கோ 51, சின்ன பொன்னி, ஐ.ஆர். 50 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டது.

    தற்போது, நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அருவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தட்டாஞ்சாவடி மார்கெட் கமிட்டியில், கடந்த 9-ந் தேதி நிலவரப்படி, நெல் விலை (75 கிலோ) மூட்டை அதிகபட்சமாக ரூ.1341-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    இந்த விலையை, தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் புதுச்சேரியில் குறைவாக உள்ளது. தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 40 கிலோ நெல் மூட்டை 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை அதிகமாக இருப்பது, புதுச்சேரி விவசாயிகளை ஏக்கமடைய செய்துள்ளது. இந்திய உணவு கழகம் மூலமாக நேரடியாக நெல்லை கொள்முதல் செய்தால், தான் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும்.

    எனவே, இந்திய உணவுக்கழகம் மூலமாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
    • மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிப்மர் வளாகம், பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • எம்.பி. பெயரிலல் வந்துள்ள மெயில் ஐ.டி. அனைத்தும் போலியானது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு எம்.பி. பெயரில் இமெயில் வந்தது.

    அதில் ஜிப்மரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. 2-வது நாளாக வந்த மெயிலில் பிரெஞ்சு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.

    அங்கும் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது. இந்த மெயில் குறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். எம்.பி. பெயரிலல் வந்துள்ள மெயில் ஐ.டி. அனைத்தும் போலியானது. அவை வெளிநாட்டில் இருந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    இது எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது? இதை அனுப்பியது யார்? என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் உதவியையும் புதுவை சைபர் கிரைம் போலீசார் நாடியுள்ளனர்.

    ஜிப்மர் வளாகம், பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது.
    • புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் மூடியுள்ள ரேசனை திறந்து அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது அரிசி, சர்க்கரை மட்டும் தருவதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறுவது சரியல்ல. ரேசன்கடைகள் திறக்கப்படுமா.? இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது. அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் முதலமைச்சர் சந்தித்து புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை புதுவை காங்கிரஸ் எதிர்க்கும்.

    புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார். புதுவை அரசு மீது தொடர்ந்து ஊழல் புகார்களை, குற்றச்சாட்டுகளை கூறிவருகிறேன். இதற்காக என் மீது புதுவை முதலமைச்சர், உள்துறை அமைச்சர் வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    முன்னதாக திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரசார் புதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    • தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேசன் கடைகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
    • டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க எண்ணமும் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகள் மீண்டும் திறந்து இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ரேசன்கடைகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரேசன் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேசன் கடைகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    முதலில் ரேசனில் 2 கிலோ இலவச சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி தீபாவளி பண்டிகைக்காக வழங்கப்படும். கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும். பிறகு தொடர்ந்து சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரேசன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ. 1.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். அடுத்து அரிசி, சர்க்கரை டெண்டர் வைத்து வழங்குவோம். இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வீடு தேடி சென்று தர ஆலோசனை செய்து வருகிறோம்.

    மாநில அந்தஸ்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க எண்ணமும் உள்ளது.

    நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்-நன்றாக வரவேண்டும்.-மனதார வாழ்த்துகிறேன்.

    எல்லாவற்றுக்கும் மேலும் உயர வாழ்த்துக்கிறேன். இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
    • ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, ஏரி பயன்பாட்டை முழுவதும் விளக்கினார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் மாத்ரி மந்திர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து வந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    இந்த குழுவில் உலக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிறுவன தலைவர் ராஜிவ்குப்தா, ரிலிகேர் செயல் தலைவர் ரஷ்மி சாலியா, மொரிஷியஸ் குடியரசின் உயர்மட்ட ஆணையர் ஹைமன்டாயல் டில்லம், பெலாரஸ் தூதரகம் அலெக்சாண்டர் மோஷ்சோவிடிஸ், மங்கோலியா உயர் மட்ட ஆணையர் கன்போல்டு டாம்பாஜாவ், நமீபியா உயர் மட்ட ஆணையர் காப்ரியேல் சினிம்போ, வடமாசிடோனியா உயர்மட்ட ஆணையர் மக்மூத் அப்துலா அல்கானி, லெசோதோ உயர்மட்ட ஆணையர் மரோசா பெடெலோ மாகோபனே, கமரோஸ் தூதரகம் அசின் மசா மசூத், பிஜி உயர்மட்ட ஆணையம் சீமா பால்டர் சிங் உட்பட 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

    பின்னர் குழுவினர் மாத்ரி மந்திரில் தியானத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்னையின் கனவு திட்டமான மாத்ரி மந்திர் ஏரியை பார்வையிட்டனர். 30 அடி ஆழம், 100 அடி நீளமுள்ள ஏரி சுற்றியுள்ள கிராமங்களில் நீர் மட்டத்தை மேம்படுத்துகிறது என ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, ஏரி பயன்பாட்டை முழுவதும் விளக்கினார்.

    • பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவு அதேப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியுள்ளார்.

    இதையடுத்து, அந்த பெண் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் அந்த பெண் சத்தம் போட்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு ஓடி வந்தனர்.

    இதனை கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சிக்கா, சுமி மற்றும் உறவினரான யூடியூபர் திருச்சி சூர்யா ஆகியோரும் சிறுமியை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • 3 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ்-1 சிறுமிக்கு, மதுரையைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான சிக்கா, சுமி தம்பதியின் மகனான மதுரை சங்கயா வீதி, அஷ்ரப் அலி (வயது 24) ஆபாச வீடியோ அனுப்பியதுடன், சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்ற மிரட்டி உள்ளார்.

    சிறுமியின் தாய் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 25-ந்தேதி அஷ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அஷ்ரப் அலியின் பெற்றோர் சிக்கா, சுமி மற்றும் உறவினரான யூடியூபர் திருச்சி சூர்யா ஆகியோரும் சிறுமியை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 3 பேரையும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, யூடியூபர்கள் சிக்கா, சுமி, சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி திருச்சி சூர்யா 3 பேரும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆஜராகினர்.

    இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். 3 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது. 

    ×