என் மலர்
புதுச்சேரி

அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது- புதுச்சேரி முதலமைச்சர்
- மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.
- தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இப்போதும் எடுத்து வருகிறோம். 1971-ம் ஆண்டில் 31 செ.மீ. மழை பெய்தது. அதுதான் அதிகபட்சமான மழை. தற்போது 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் அதிகபட்சமான மழை. எதிர்பார்க்காத மழை.
எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றமாக இருந்ததால் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் நீரை உள்வாங்காததால் வாய்க்கால் நிறைந்து தண்ணீர் ஊருக்குள் வந்தது. எல்லா பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது.
மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து வருகிறோம்.
மக்களை வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் காவல் துறையினர் சொல்வதை கேட்டு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
நடேசன் நகர், உப்பளம் வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். எல்லா துறையினரும் வேலை செய்து வருகிறார்கள். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.






