என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்- ஆயிரக்கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
- மயிலம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது.
நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல் இரவு 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கரையை கடந்தது. பின்னர் நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது.
இதனால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் இருந்தே இந்த பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் கரையை கடந்த போதும், கரையை கடந்து முடித்த பின்னரும் மிக கனமழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரி மற்றும் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர்ச்சியாக பெய்த மழை இரவு முழுவதும் நீடித்ததால் புதுச்சேரி மற்றும் மயிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்தது. மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கும், புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கும் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இதே போன்று மயிலம் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று மாலையில் இருந்தே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் புதுவை மாநிலம் இருளில் மூழ்கியது. புதுச்சேரி வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், ஞானபிரகாசம் நகர், கிருஷ்ணா நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் தவித்தனர். உயிருக்கு பயந்து வீடுகளின் மாடியில் தஞ்சம் புகுந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள உப்பனாறு வாயக்கால் நிரம்பி வழிவதால் அதை ஒட்டியுள்ள கோவிந்த சாலை, திடீர் நகர், கென்னடி நகர், வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி புதுச்சேரி மாநில அரசு துறை அதிகாரிகள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் சுமார் 10 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. 208 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் 1½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரியை போன்று விழுப்புரம் மாவட்டமும் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மயிலம் பகுதியில் பெய்துள்ள மிக கன மழையால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 570 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. 17 இடங்களில் மரம் முறிந்து விழுந்தது.
2 கோழிப்பண்ணைகளில் மழை நீர் புகுந்தது. அங்குள்ள பயிரிடப்பட்டுள்ள புடலங்காய், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கிது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தண்ணீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வீடு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. மழை காரணமாக விடூர் அணை நிரம்பியது. இதன் கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது 10 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் தென் பெண்ணையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் 36 ஏரிகள் உள்ளது. மழை காரணமாக 20 ஏரிகள் நிரம்பி உள்ளது. மழை காரணமாக ஒட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், சவுக்கு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.
ஏரி கிராம பகுதிக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. திண்டிவனம், மயிலம் சாலை தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






